வேலுப்பிள்ளையின் மரணத்துக்கு ராஜபக்ஷவே பொறுப்பு : பழ. நெடுமாறன்
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை கடந்த 6ஆம் திகதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தததாக இலங்கை இராணுவம் அறிவித்தது.
வேலுப்பிள்ளையின் மரணத்திற்கு ஜனாதிபதி ராஜபக்ஷதான் பொறுப்பாவார் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,
"விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை இராணுவ முகாமில் மரணமடைந்த செய்தி உலகம் முழுவதிலுமுள்ளத் தமிழர்களை அளவற்ற வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் அவர்களையும் முகாமில் கடந்த 8 மாதங்களாக அடைத்து வைத்த கொடுமையின் காரணமாகவே அவர் இறந்திருக்கிறார். அவரின் மரணம் இயற்கையானது என இலங்கை அரசு கூறுவது நம்பத் தகுந்ததல்ல. அவரும் நோய்வாய்ப்பட்டிருந்தார்.
பார்வதி அம்மையாரும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு செயல் இழந்திருந்தார். இந்நிலையில் சிறிதுகூட இரக்கம் இல்லாமல் அவர்களை முகாம்களில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரால் அவர்களுக்கு மன அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொடுமையை மூடி மறைக்க இலங்கை அரசு முயல்கிறது.
தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பி வைத்த நாடாளுமன்ற குழுவினர்களாவது பிரபாகரனின் பெற்றோரை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தி இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் அவர்களைச் சந்திக்கவாவது அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் இக்குழுவினர் அவ்வாறு செய்யத் தவறிவிட்டார்கள். கனடாவில் இருக்கும் பிரபாகரனின் சகோதரி தனது பெற்றோரை கனடாவுக்கு அனுப்பி வைக்கும்படி விடுத்த வேண்டுகோளையும் இலங்கை அரசு மதிக்கவில்லை.
வேலுப்பிள்ளையின் மரணத்திற்கு ராஜபக்ஷவே பொறுப்பாவார் என நான் குற்றம் சாட்டுகிறேன்.
தனது சாவிலும் தானொரு வீரனின் தந்தை என்பதை வேலுப்பிள்ளை நிரூபித்திருக்கிறார். ராஜபக்ஷவிடம் முறையிட்டு விடுதலை பெற விரும்பாமல் இறுதிவரை முகாமிலேயே வாழ்ந்து மடிந்திருக்கிறார். இந்தக் கட்டத்திலாவது அவரின் உடலை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துகிறேன்.
பார்வதி அம்மையாரை உடனே விடுதலை செய்து அவரின் மகளிடம் அனுப்பி வைக்கும் மனிதநேயக் கடமையையாவது செய்யும்படி ராஜபக்ஷவை வேண்டிக்கொள்கிறேன்.
வேலுப்பிள்ளை அவர்களின் வீரமரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கருப்புக்கொடி ஊர்வலங்களையும் இரங்கல் கூட்டங்களையும் நடத்தும்படி வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment