ஏவுகணைகளை வாங்கிய குற்றஞ்சாட்டை நான்கு தமிழர்கள் அமெரிக்காவில் ஏற்றுக்கொண்டனர்!
போர்க்காலத்தின்போது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஆயுத தளவாடங்கள தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக கொள்வனவு செய்தார்கள் என்று அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்ட நான்கு ஈழத்தமிழர்களும் அமெரிக்க சட்டங்களின் படி குற்றவாளிகளாக இனங்காணப்பட்டதை அடுத்து, அமெரிக்க சட்டங்களின்படி அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ தாயக பகுதிகளில் சிறிலங்கா அரச படைகளின் விமான தாக்குதல்களின்போது பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவ்விமானங்களை சுட்டுவீழ்த்துவதற்கான ஏவுகணைகளையே இவர்கள் வாங்க முயற்சித்திருந்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வின்னி என அழைக்கப்படும் ஒருவரால் ஏவுகணைகளை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டிருந்தனர் என்றும் அத்துடன் 500 ஏ.கே. ரக துப்பாக்கிகளை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தமும் இவர்களால் செய்யப்பட்டது என்றும் ஆனால் வின்னி எனப்படும் நபர் அமெரிக்காவின் இரகசிய புலனாய்வு அதிகாரி என்ற விடயம் இவர்கள் கைது செய்யப்படும்போதே இவர்களுக்கு தெரியவந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட கனடாவை சேர்ந்த சுகில் சபாரத்தினம், திருத்தணிகன் தணிகாசலம் ஆகியோர் தம்மீதான குற்றஞ்சாட்டுக்கள் உறுதியானதை தொடர்ந்து தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இவர்களிருவருக்கும் 25 வருட கால சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என கருதப்படுகிறது.
இவ்வழக்கில் தொடர்புபட்ட கனடாவை சேர்ந்த மற்றவர்களான நடராசா யோகராசா என்பவரும் சதாஜகன் சராசந்திரன் என்பவரும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள்.
வழக்கு விசாரணைகள் மீண்டும் எதிர்வரும் சனவரி 22 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றன. அன்றையதினம் இவர்களுக்கு எதிரான மேலதிக குற்றஞ்சாட்டுக்களையும் இணைக்கும் நோக்கில் அரச தரப்பு சட்டத்தரணிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
உள்ளூர் பயங்கரவாதம் என்ற சரத்தின் கீழ் இவ்வழக்கை இணைக்கவும் அவர்கள் விரும்புவதாக அறியவருகின்றது. ஆனால் அமெரிக்காவுக்கு இதனால் எந்த பாதிப்புக்களும் ஏற்படுத்தும் நோக்கம் இல்லாததால் அவ்வாறான சரத்தின் கீழ் குற்றம் சாட்டமுடியாதென குற்றவாளிகள் தரப்பில் தரப்பில் வாதாடும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment