போரின் முடிவுக்குப் பின்னரும் ஜனாதிபதி தேர்தலில் முக்கியத்துவம் பெறும் தமிழர் வாக்குகள்
1983 ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானதிலிருந்து நாட்டின் அரசியல் நிகழ்ச்சிநிரல் அரசியல்வாதிகளினதோ அல்லது சோதிடர்களினதோ கணிப்பீட்டின் பிரகாரம் முன்னெடுக்கப்படவில்லை. வன்னிக் காட்டுக்குள் இருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் விருப்பு வெறுப்புகளுக்கு இசைவாகவே அந்த நிகழ்ச்சி நிரல் அமையவேண்டியிருந்தது. இலங்கையின் அரசியல் மாத்திரமல்ல நாட்டின் ஜனாதிபதியைத் தெரிவு செய்வது கூட பிரபாகரனாலேயே தீர்மானிக்கப்பட்டது. கடந்த மே மாத நடுப்பகுதியில் முல்லைத்தீவுக் கரையோரமாக நந்திக் கடல் பகுதியில் பிரபாகரன் கொல்லப்பட்டதற்குப் பிறகு இலங்கையின் அரசியல் நிகழ்ச்சி நிரலை தங்களால் தீர்மானிக்கக் கூடியதாக இருக்குமென்று அரசியல்வாதிகள் நினைத்தார்கள். எதிர்காலத்தில் இலங்கையின் அரசியல் பாதை வன்னியினால் அல்ல கொழும்பினாலேயே வகுக்கப்படும் என்று அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
ஆனால், இவர்களின் இந்த எண்ணம் தவறானதாகப் போய்விட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களுக்குச் சார்பான அரசியல்வாதிகளும் யாழ்ப்பாணத்துக்குப் படையெடுத்து வரிசையில் நின்று நல்லூர் கந்தசாமி கோயிலில் வழிபட்டு தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்கான பிரசாரங்களை தீவிரப்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவேண்டுமானால் எந்தவொரு பிரதான வேட்பாளருக்குமே தமிழ் மக்ககளின் வாக்குகள் முக்கியமானவையாக இருக்கின்றன.
பிரதான வேட்பாளர்களும் அரசாங்கமும் எதிரணிக் கட்சிகளும் இதனை நன்குணர்ந்திருக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகள் இரண்டாகப் பிளவுபடும் போது தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக அமைந்திருக்கின்றன. அதனால் இலங்கையின் அடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி யார் என்பதனை தமிழ் சனத்தொகையே தீர்மானிக்கப்போகிறது.
மறுவார்த்தைகளில் சொல்வதானால் பிரபாகரனும் விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்டு விட்ட போதிலும் கூட அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் வல்லமை இன்னமும் கூட தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கிறது. தமிழ் மக்கள் மேற்கொள்ளக்கூடிய தீர்மானத்திலேயே அடுத்த ஜனாதிபதி தெரிவு தங்கியிருக்கிறது.
போர் வெற்றியை சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரப்படுத்தி இரண்டாவது பகுதிக் காலத்துக்கு வெகு இலகுவாக தெரிவாக முடியும் என்ற நம்பிக்கையில் தான் ஜனாதிபதி ராஜபக்ஷ போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவந்தார். சிங்கள மக்களின் வாக்குகளை மாத்திரம் வென்றெடுப்பதே அவரின் இலக்காக இருந்தது. ஜனாதிபதியின் அரசியல் நிகழ்ச்சி நிரல் என்னவென்பதை அறியாத நிலையிலேயே முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் தனது படைகளை வெற்றிக்கு வழிநடத்தினார். போரை நிறுத்துமாறு இலங்கைக்குள்ளும் வெளி உலகில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்தும் வெளிவந்த கோரிக்கைகளை இவ்விருவரும் கிஞ்சித்தேனும் பொருட்படுத்தவில்லை. தங்களது நடவடிக்கையை தீவிரப்படுத்தி பிரபாகரனையும் புலிகளையும் ஒருவாறாக இவர்கள் ஒழித்துக் கட்டிவிட்டனர். போரின் விளைவான அவலங்களினால் தமிழ் மக்கள் நிராதரவாகி நிற்கிறார்கள். அவர்களுடைய தற்போதைய அரசியல் நிலைமையை தமிழ் நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பின்வருமாறு வர்ணித்திருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகு இலங்கை அரசாங்கத்துடன் சுமுகமான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கமில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷ தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கப்போகிறார். அவருடன் மோதுவதை விடுத்து தமிழ் மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தைகளை நடத்துவது அவசியமாகும். தங்களது கோரிக்கைகளுக்காக தமிழ் மக்கள் தொடர்ந்தும் சண்டையிடுவது பயன்தரப் போவதில்லை.
கருணாநிதியின் இந்தக் கருத்தை உலகம் பூராகவும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் கடுமையாக ஆட்சேபித்தார்கள். இலங்கையின் இரண்டாம் தரப்பிரஜைகளாக வாழுமாறு தமிழ் மக்களுக்கு கருணாநிதி அறிவுறுத்தல் செய்வதாக அந்தப் புலம்பெயர் தமிழர்கள் வருத்தப்பட்டனர்.
உண்மையில் சொல்வதானால் பிரபாகரன் போரின் மூலமாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு மதிப்பு வாய்ந்த இடத்தைப் பெற்றுக்கொடுத்திருந்தார். அந்தப் போரின் முடிவுடன் அந்த மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. போரில் புலிகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்து இந்தியாவும் கூட இலங்கைத் தமிழ் மக்களை கைவிட்டுவிட்டதன் மூலம் அவர்களின் இன்றைய மதிப்பற்ற நிலையை தெளிவாக உணரக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில் போரில் வெல்லுவதாகத் தோன்றிய காலகட்டங்களில் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்தியா உரத்துக் குரல் கொடுத்தது.
இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முøற்யிலான தீர்வொன்றைத் தவிர வேறெதுவுமே அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று முன்னர் வலியுறுத்திவந்த இந்தியா, விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மாகாண சபைகளே போதுமானது என்று கூற ஆரம்பித்தது.
இலங்கை விவகாரங்கள் தொடர்பான அமெரிக்க செனட் கமிட்டி இறுதியாக வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அத்துடன் சிங்கள மாவட்டங்களுக்கும் அரசாங்கத்தின் படைகளுக்கும் உதவிகளை வழங்குவது குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போரின் முடிவுக்குப் பின்னர் சர்வதேச சமூகம் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையின்றி இருப்பதைனையே காணக்கூடியதாக இருக்கிறது.
ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிலைமை வித்தியாசமாக இருக்கப்போகிறது. போரின் முடிவுக்குப் பிறகு சிங்களவர்களின் வாக்குகளைப் பெற்று தன்னால் எளிதில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றும் வடக்கில் உள்ள தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கப் போவதில்லை என்றும் நினைத்த ஜனாதிபதி ராஜபக்ஷ இப்பொழுது பெரும் சஞ்சலத்துக்குள்ளாகியிருக்கின்றார். தமிழர்களின் வாக்குகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அவர் இப்பொழுது சிந்தித்துக்கொண்டிருக்கிறார். முதலாவது பதவிக் காலம் முடிவடைய இன்னமும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற போதிலும் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தல் நடத்துகின்ற துணிச்சலை ஜனாதிபதி ராஜபக்ஷ பெறக்கூடியதாக போரை வென்றெடுத்த பொன்சேகா இப்பொழுது தமிழ் மக்களின் வாக்குகளுக்காக அவர்களைத் தேடிச் சென்றுகொண்டிருப்பதைக் காண்கிறோம்.
ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்கவில்லையானால் தமிழ் வாக்குகளை நாடிச் செல்லவேண்டிய தேவை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு இருந்திருக்காது. ஏனென்றால் சிங்கள மக்களின் வாக்குகளின் மூலம் மாத்திரம் தேர்தலில் அவரால் வெற்றிபெறக்கூடிய சாத்தியப்பாடு இருந்தது.
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளை முறையாக நடைமுறைப்படுத்தும்படி இந்தியாவினால் நெருக்குதல்கள் செய்யப்பட்ட போதிலும் கூட ஜனாதிபதித் தேர்தல் முடியும்வரை 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் காத்திருக்கவேண்டியிருக்கும் என்று சென்னை இந்துப் பத்திரிகைக்குக் கடந்த ஜூலையில் அளித்த பேட்டியில் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருந்தார். தமிழர்களின் வாக்குகளை நாடவேண்டிய தேவை தனக்கு ஏற்படப்போவதில்லை என்ற நம்பிக்கையில்தான் இவ்வாறு அவர் கூறினார். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதியும் ஒரு வேட்பாளராக வந்த பின்னர் போர் வெற்றிக்கான பெருமைக்கு உரிமை கோருகின்ற விடயத்திலும் சிங்கள மக்களின் வாக்குகளை மிகப் பெரும்பான்மையாகப் பெறக்கூடிய சாத்தியத்திலும் சிக்கல் ஏற்பட்டது. தமிழர்களின் வாக்குகளைத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் இப்பொழுது ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படுமென்று கடந்த வார இறுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் திடீரென்று ஒரு அறிவித்தல் விடுத்தார். தமிழ் வாக்குகளின் முக்கியத்துவத்தை ஜனாதிபதியும் அரசாங்கத்தரப்பினரும் புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பதன் தெளிவான வெளிப்பாடே இதுவாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜெனரல் சரத் பொன்சேகா அறிவிப்பதற்கு முன்னர் ராஜபக்ஷவின் கட்சியினர் 13 ஆவது திருத்தத்தைப் பற்றி பேசக்கூடாது என்ற உத்தரவு கூட பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தத் தடை இல்லை. சுதந்திரக் கட்சியின் கொள்கைகளின் ஒரு அங்கமாக அது வந்திருக்கிறது. 2002 ஆம் ஆண்டு யுத்தநிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படக்கூடாது என்று வலியுறுத்திய ஜெனரல் பொன்சேகா இப்பொழுது அந்த வலயங்களை அகற்றுவதாக உறுதியளித்திருக்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறவேண்டுமானால் தமிழ் வாக்குகள் எந்தளவு முக்கியமானது என்பதைக் கூட இவர் உணர்ந்திருக்கிறார்.
போர் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும் நாட்டுக்குத் தலைமை தாங்கிய ஜனாதிபதியும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது கலந்து கொள்கின்ற முறையின் மூலமாக தமிழ் மக்கள் இழந்துபோன கௌரவத்தை மீட்கின்ற ஒரு நிலை வந்துள்ளது. போருக்குப் பின்னர் அரசியல் ரீதியில் நிராதரவாக நின்ற தமிழர்கள் இப்பொழுது தென்னிலங்கை அரசியலுக்கு முக்கியத்துவமானவர்களாகி விட்டார்கள். இது விதியின் ஒரு விசித்திரமான விளையாட்டு.
நன்றி: டெயிலி மிரர்
2010 ஜனவரி 06
0 விமர்சனங்கள்:
Post a Comment