மகசின் சிறைக் கைதிகளில் திரைப்பட கூட்டுத்தாபன பணிப்பாளர் தேவதாசன் உள்ளிட்ட மூவரின் நிலை கவலைக்கிடம்..
தம்மை விடுவிக்குமாறு கோரி கொழும்பு புதியமகஸின் சிறைச்சாலையில் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளில் மூன்றுபேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் பணிப்பாளருமான கே.தேவதாசன், வல்வெட்டித்துறையை சேர்ந்த 54வயதான வைரமுத்து ஜெயசந்திரன், வவுனியாவைச் சேர்ந்த 45வயதான பழனி கருணாகரன் ஆகியோரே கவலைக்கிடமான நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவோரில் 04பேர் கவலைக்கிடமான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மட்டக்களப்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் கைதிகளுக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை நீதிமறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட நேரடியாக வந்து தமது விடுதலைக்கு உறுதியளிக்கும்வரை தமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மகஸின் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment