அரசியல் தீர்வுக்கு கூட்டமைப்பும் தயாரில்லை
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபட்டு நிற்கின்றது. இதில் எந்த அணி சரியானது என்பதிலும் பார்க்க இவர்கள் தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்குத் தார்மீக அடிப்படையில் தகுதி உள்ளவர்களா என்பது பிரதானமான கேள்வி.
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று ஒருவேளை இவர்கள் உரிமை கோரலாம். அன்று நடந்ததைத் தேர்தல் என்று கூறுவது மிகப் பெரிய பகிடி. அணியொன்றின் பிரதான வேட்பாளர் தனது வாக்கை அளிப்பதற்கு இயலாதவாறு வன்முறையாளர்களால் தடுக்கப்பட்டார். வாக்களிப்பு நிலையங்களில் புலிகளின் காட்டாட்சியே நடந்தது. இப்படியான தேர்தலில் கிடைத்த வெற்றியை மக்களின் தீர்ப்பு எனக் கூறுவதைப் போன்ற வேடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது.
எனவே, அந்தத் தேர்தல் வெற்றியை ஒருபுறத்தில் தள்ளிவிட்டு இவர்களுடைய செயற்பாட்டின் அடிப்படையிலேயே பார்க்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்ற பின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த முயற்சியிலும் இவர்கள் ஈடுபடவில்லை. புலிகள் காட்டிய பாதையில் கண்ணை மூடிக்கொண்டு பயணித்தார்கள். இந்தப் பயணத்தின் விளைவாகத் தமிழ் மக்களுக்கு இவர்கள் விளைவித்த தீங்கு கொஞ்ச நஞ்சமல்ல. உடைமை அழிவுகளும் உயிரிழப்புகளும் இடம் பெயர்வுகளும் அகதி வாழ்க்கையும் இவர்களின் பிழையான கொள்கையினால் ஏற்பட்ட விளைவுகள்.
இத்தனைக்கும் தார்மீகப் பொறுப்பேற்று இவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால் மீண்டும் அரசியல் களத்துக்கு வந்திருக்கின்றார்கள். வந்தவர்கள் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டமொன்றை முன்வைத்துச் செயற்படுவதற்குத் தயாராக முன்வந்திருக்க வேண்டும். ஆனால் இவர்களிடம் தீர்வுத்திட்டம் எதுவும் இல்லை. கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகக் கிட்டத்தட்ட ஒரு வருடமாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போதும் வெறுங்கை தான். தமிழ் மக்களின் பிரதான பிரச்சினையான இனப் பிரச்சினையின் தீர்வுக்கான கொள்கைத் திட்டம் எதுவுமே இல்லாமல் தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவதாகக் கூறுவதும் தேர்தலில் இம்மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டுமென வழிகாட்டுவதும் நகைப்புக்கிடமானவை.
சரத் பொன்சேகா கையொப்பமிட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரிடம் கையளித்ததாகப் பத்திரிகைகளில் வெளியாகிய ஆவணத்தில் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் பொன்சேகாவுக்குமிடையே இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாடுகளே அவை. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி அந்த ஆவணத்தில் எதுவும் இல்லை. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் பொன்சேகாவுக்கு இல்லை என்பதே இதன் அர்த்தம். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உடன்பாடாக இருப்பது தான் புதுமை.
0 விமர்சனங்கள்:
Post a Comment