விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டெழும் சாத்தியமிருக்கிறது
தமிழர்களை ஆயுதப்போராட்டதில் குதிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய அடிப்படை பிரச்சனைகளான, நாட்டின் வளங்களை சமமாகப் பங்கீடு செய்யாமை, கல்வி, வேலை வாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இப்பிரச்சனைகள் தீரக்கப்படாவிடத்து, விடுதலைப்புலிகள் அமைப்பு மீளக்கட்டமைக்கப்படும் சாத்தியம் இருக்கிறது” என அமெரிக்கப் பேராசிரியர் அடேல் பார்க்கர் குறிப்பிட்டிருக்கிறார்.
2001-2002 ஆண்டுகளில் சிறிலங்காவில் தங்கியிருந்து, பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பித்த அடேல் பார்க்கர், சிறிலங்காவின் நிலமைகள் தொடர்பான தனது அனுபவங்களை "Not Quite Paradise: An American Sojourn in Sri Lanka" என்ற தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார். இப்புத்தகமானது பல விருதுகளை அவருக்கு பெற்றுக் கொடுத்ததுடன், தொடர்ந்து சிறிலங்காவில் கற்பித்தலுக்கும், அந்நாட்டினைப் பற்றி எழுதுவதற்குமான நிதி உதவியை அவருக்குப் பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்திய இணையதளமான rediff.com ற்கு அவர் வழங்கிய செவ்வியில், “விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டாலும், அது அவ்வியக்கத்தின் முடிவாக கருதமுடியுமா என்ற கேள்வி பல மட்டத்திலும் கேட்கப்படுகிறது. ஆனால் எனது அண்மைய பயணத்தில் நான் கண்டவற்றிலிருந்து, இது தொடர்பில் ஒரு பதட்டம் நிலவுவதையே காணக்கூடியதாகவிருக்கிறது.
போர் முடிவடைந்ததாகக் குறிப்பிடப்பட்டாலும் அங்கு முன்னரைவிட அதிகளவில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அல்லது அவ்வாறு சந்தேகிக்கப்படுபவர்கள் வெவ்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவையெல்லாம் அரசாங்கமும், படைகளும் விடுதலைப்புலிகளையிட்டு இன்னமும் பீதியுடன் இருப்பதையே காட்டுவதாக அமைந்துள்ளன.
இந்நிலையில், விடுதலைப்புலிகள் அமைப்பினை கட்டியமைத்து நெறிப்படுத்தி வந்த பிரபாகரன் இல்லாத நிலையில், அவ்வமைப்பினை அதன் இலட்சியத்தின் அடிப்படையில் முழுமையாக ஒன்றுபடுத்த முடியுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது” எனக் கருத்து வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் பற்றி உலகம் அறிந்து கொள்ளாத அல்லது விளங்கிக் கொள்ளாத விடயங்கள் ஏதும் இருக்கிறதா என அவரிடம் கேட்கப்பட்டபோது,
“உண்மையில் உலகம் விடுதலைப் புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை. அந்த இயக்கத்தின் இரகசியத்தன்மை அதற்கு காரணமாக இருக்கலாம். பிரபாகரன் அவர்களும் வெளி உலகத்தைச் சந்திப்பதை பெருமளவு தவிர்த்து வந்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் இப்பிரச்சனை பற்றி அதிகம் அக்கறை கொள்ளாததால் அமெரிக்கர்கள் இவ்விடயம் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. பிரித்தானிய ஊடகங்கள் அமெரிக்க ஊடகங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயற்பட்டன.
விடுதலைப்புலிகள் சுதந்திரமான தாயகம் ஒன்றை அமைத்துக் கொள்ள தமது நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்ற விடயத்தைக்கூட பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை“ எனப் பதிலளித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி குறிப்பிடுகையில், அது உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப்பட்ட ஒரு குழு. இயக்கத்தினது இறுதி இலட்சியத்திலிருந்து விலகிச் செல்வதற்கு அதன் உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஈழம் என்கிற தாயகக் கொள்கையை தான் கைவிட்டால், தன்னை சுட்டுக் கொல்வற்கான அனுமதியை தனது சகாக்களுக்கு பிரபாகரன் வழங்கியிருக்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனது இலட்சியத்தையே வரித்துக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்,
பௌத்த இந்து, கிறிஸ்தவ சமயங்கள் போரின் காயங்களை ஆற்றுவதற்கு உதவவில்லையா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், நாங்கள் பௌத்த மதத்தினை அதன் தத்துவத்தின் அடிப்படையில், அகிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துவதாகவே அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சிறிலங்காவில் நிலமை வேறுபட்டுக் காணப்படுகிறது.
“மகாவம்சம்” என்ற காப்பியத்தின்படி, புத்தர் இலங்கைத் தீவிற்கு வந்ததாகவும் அவரே பௌத்தமத தத்துவங்களை எடுத்து வந்ததாகவும் நம்பப்படுகிறது. ஆதலால் பௌத்த சமயத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தங்களுக்கு உள்ளதாக புத்த பிக்குகளும், பெரும்பாலான சிங்களவர்களும் நம்புகிறார்கள். பெரும்பான்மையான புத்த பிக்குகள் சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள்.
இருப்பினும் இம்மதங்கள் இனங்களுக்கிடையிலான சமரசத்திற்கு உதவ முடியும், உதவவேண்டும் என்றே எதிர்பார்க்கிறேன் எனத் தனது நம்பிக்கையை வெளிட்டுள்ளார்.
பேராசிரியர் அடேல் பார்க்கர் -தமிழாக்கம்: கோபி
0 விமர்சனங்கள்:
Post a Comment