பறவைகளுக்காக 40 ஆண்டாக பட்டாசு வெடிக்காத கிராமம்
சிங்கம்புணரி, அக்.13: சிவகங்கை அருகே பறவைகளை பாதுகாப்பதற்காக 40 ஆண்டாக பட்டாசு வெடிக்காத அதிசய கிராமம் உள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருப்பத்து£ர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொல்லுகுடிபட்டி கிராமம் உள்ளது. இங்கு அதிகமாக வெளிநாட்டு பறவைகள் கூடுகட்டி வாழ்கின்றன.
இதனால், இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் தீபாவளிக்கு தங்களது பிள்ளைகளுக்கு பட்டாசு வாங்கித் தருவதில்லை. அவர்கள் தீபாவளி என்றால் பட்டாசு என்பதை மறந்து, சப்தமில்லாத தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
கடந்த 40 ஆண்டுக்கு முன்பு அருகில் உள்ள வேட்டங்குடி கிராமத்துக்கு தான் முதலில் பறவைகள் வந்தன. பின்னர், கொல்லுகுடிபட்டி கண்மாய்க்கு இடம்பெயர்ந்தன. கடந்த 1977ல் வேட்டகுடி பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இங்கு ஈரான், ஈராக், ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து நத்தை கொத்தி நாரை, பாம்புதாரா, கரண்டி மூக்கன், அரிவாள்மூக்கன், பிளமிங்கோ உட்பட பல்வேறு வகையான பறவைகள் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை இனவிருத்திக்காக வருகின்றன.
கண்மாயில் உள்ள மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு, குஞ்சுகள் பொறித்து, இனவிருத்தி செய்கின்றன. பறவைகளை காண நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளி குழந்தைகளும், பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர். இந்த பறவைகளை கிராம மக்கள் தங்கள் குழந்தைகள் போல பாதுகாக்கின்றனர். இதனால் தீபாவளி, திருவிழா உட்பட எந்த நிகழ்ச்சிக்கும் பட்டாசு வெடிக்க தடை விதித்து, ஊர்க்கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொல்லுகுடிபட்டியை சேர்ந்த சின்னையா கூறுகையில், ‘இங்கு வாழும் பறவைகளை அன்புடன் பாதுகாக்கிறோம். சமூக விரோதிகள் பறவைகளை வேட்டையாடுவதில் இருந்து தடுக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம்Õ என்றார்.
காளியம்மாள் என்பவர் கூறுகையில், `பறவைகள் அதிகம் வந்து தங்கினால் அந்த ஆண்டு மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது உண்மை´ என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment