குட்டியை காணாமல் தவித்த தாய் மான்: ஒரு மணி நேரம் ஓசை எழுப்பிய வினோதம்
தளி: குட்டியைக் காணாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரிதவித்த கடமானை, அதன் குட்டியுடன் விவசாயிகள் பத்திரமாக, வனப்பகுதிக்குள் விட்டனர். குட்டிக்காக போராடிய கடமானின் தாய்ப்பாசத்தை பார்த்து, விவசாயிகள் ஆச்சரியமடைந்தனர். உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கொங்குரார் குட்டை, தேக்கல்கரடி சுற்று , வெள்ளை பாறை ஆகிய பகுதிகள் வன எல்லைக்கு அருகே அமைந்துள்ளன. இங்கு பல ஆயிரம் ஏக்கரில் மா, தென்னை ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது. வன எல்லையை ஒட்டி இருப்பதால், வன விலங்குகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவது வழக்கம்.
யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, மாந்தோப்பில் மாங்காயை ருசி பார்த்துச் செல்வது தொடர்கதையாக உள்ளது. யானைகள் மட்டும் வந்து சென்ற இப்பகுதியில், வனத்தின் உள்பகுதியில் வசிக்கும் விலங்குகளும் எட்டிப்பார்க்க துவங்கியுள்ளன. நேற்று முன்தினம், தேக்கல்கரடி பகுதியில் வித்தியாசமான ஓசை விவசாயிகளுக்கு கேட்டது. விவசாயிகள் ஆர்வத்துடன் சத்தம் வந்த திசையில் சென்றனர். அப்போது, கடமான் வகையை சேர்ந்த மான், வித்தியாசமாக குரல் எழுப்பியது தெரியவந்தது. ஆபத்து ஏற்பட்டுள்ளதால், அப்படி ஒசை எழுப்பியதாக கருதிய விவசாயிகள், மானை வேட்டையாட வேறு விலங்குகள் துரத்தியுள்ளதா என்று பார்த்தனர். ஆனால், வேறு எந்த விலங்குகளும் தென்படாத நிலையில் விவசாயிகள் குழப்பமடைந்தனர்.
தொடர்ந்து ஒரு மணி நேரம் கடமான் ஒசை எழுப்பியபடியே இருந்தது. இந்நிலையில், சிறிது தொலைவிலுள்ள மாந்தோப்பில், கடமான் குட்டி தென்பட்டதாக, ஒரு விவசாயி தெரிவித்தார். மான், தனது குட்டியை காணாமல் ஒசை எழுப்பியது தெரியவந்தது. சிறிது நேரத்தில் குட்டி மான், தனது தாய் எழுப்பிய ஒசையை கேட்டு, அப்பகுதிக்கு ஓடி வந்தது. குட்டியை பார்த்ததும், தாய் மான் சத்தம் போடுவதை நிறுத்திக் கொண்டது.
தாயுடன் குட்டி மான் குலாவியபடியே நடந்தது. வன எல்லை வரை, அவை பாதுகாப்பாக செல்கிறதா என விவசாயிகள் கண்காணித்தனர். குட்டியை பிரிந்த மான் சோகத்தில் தொடர்ந்து ஒசை எழுப்பியதையும், அதை கேட்டு எங்கிருந்தோ வந்த குட்டி மான், தனது தாயுடன் இணைந்ததையும் கண்டு விவசாயிகள் ஆச்சரியமடைந்தனர். தண்ணீர் மற்றும் இதர தேவைகளுக்காக, வன எல்லையிலிருந்து விளை நிலப்பகுதிக்குள் வரும் வன விலங்குகள் குறித்து வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment