யுத்தம் நிறுத்தப்படவேமாட்டாது கருணாநிதிக்கு மஹிந்தர் பதில்!
"தமிழக முதல்வர் மு. கருணாநிதி மற்றும் விடுதலைப் புலிகள் சார்பு அரசியல்வாதிகள் கோரியிருக்கின்றமைபோல வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவோ, யுத்தநிறுத்தத்தை நடைமுறைப்படுத்தவோ இலங்கை அரசு தயாரில்லை."
"இதனை இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு அறிவித்திருக்கின்றார்."
- இப்படி இலங்கை அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான இலங்கை வானொலி இன்று காலை அறிவித்தது.
தன்னையும், தனது பாதுகாப்புச் செயலாளரையும், முப்படைத் தளபதிகளையும் கொல்வதற்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் தற்கொலைத் தாக்குதல் நபர்களை அனுப்பியிருக்கையில், தனது அரசு யுத்தநிறுத்தம் ஒன்றைச் செய்ய எண்ணவில்லை என்று ஜனாதிபதி கூறினார்.
இரண்டு வாரங்களுக்குள் வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, யுத்த நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி விடுத்த நிபந்தனைக்கு பதிலளிக்கும் விதமாகத் தாம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி இப்படித் தெரிவித்துள்ளார்.
தற்கொலைத் தாக்குதல் நபர்கள் கொழும்புக்குள் ஊடுருவி இருக்கையில் அவர்களின் இலக்கு இலகுவாக நிறைவேறுவதற்கு உதவும் வகையில் இலங்கை அரசு வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமா என்று ஜனாதிபதி இந்திய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு அரசியல் வாதிகளால் வன்னிப் படை நடவடிக்கையை நிறுத்தச் செய்யமுடியாது என்பதை அரசு உறுதிபடத் தெரிவிக்கின்றது.
ஆகவே புலிகளின் சதித்திட்டத்திற்குப் பலியாக வேண்டாம் என இலங்கை அரசு இந்திய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது.
வன்னியில் இடம்பெயர்ந்தோருக்கான நிவாரணத்தை வழங்குவதற்கு இயலுமான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது என்பதையும் அரசு மேலும் தெரிவித்துக்கொள்கிறது.
- இவ்வாறு இலங்கை வானொலியின் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment