தடையை நீக்குங்கள்: சோனியா காந்தியிடம், விடுதலைப் புலிகள் கோரிக்கை
விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை நீக்குவதற்கு இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் டைம்ஸ் நௌவ் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
“இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, எமது அமைப்பு மீது அவர்கள் விதித்திருக்கும் தடையை நீக்கி எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும். இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை இந்தியா நிறுத்தவேண்டும்” என நடேசன் கூறியிருந்தார்.
இந்தியா தடையை நீக்கவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருக்கும் விடுதலைப் புலிகள், இலங்கை அரசாங்கத்துக்குக் கடுமையான எச்சரிக்கையொன்றையும் விடுத்துள்ளதாக டைம்ஸ் நௌவ் ஊடகம் தெரிவித்துள்ளது.
“இலங்கை அரசாங்கம் ஒவ்வொரு முறையும் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம், அவர்களைப் பலமிழக்கச் செய்துவிட்டோம், விரைவில் கிளிநொச்சியைக் கைப்பற்றிவிடுவோம் எனக் கூறிவருகின்றனர்” என நடேசன் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். மிக விரைவில் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிரான வலிந்த தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் கூறியிருப்பதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளை, இலங்கை இராணுவம் ஓரங்கட்டிவிட்டதாகக் கூறுகிறார்களே என நடேசனிடம் கேட்டகேள்விக்குப் பதிலளித்த அவர், “கடந்த 30 வருடங்களாக இலங்கைப் படைகள் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவதை வழமையாகக் கொண்டுள்ளனர். 1995ஆம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து பெருந்தொகையான மக்கள் வெளியேறியிருந்தனர். இதனைத் தொடர்ந்து 90 வீதமான விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் கூறியிருந்தனர். ஆனால், ஒரு மாத காலப் பகுதியில் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்களை வலுப்படுத்திய நாங்கள், முல்லைத்தீவைக் கைப்பற்றியிருந்தோம். யாழ் குடாநாடு கைப்பற்றப்பட்டு சில நாட்களின் பின்னர் எமது பலம் வலுவடைந்துவிட்டது” எனக் கூறினார்.
சரியான நேரத்தில் தமது பலம் நிரூபிக்கப்பட்டு, இழந்த பகுதிகளை மீளப்பெற்றுக்கொள்வோம் எனவும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் டைம்ஸ் நௌவ் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்.
Watch Times Now´s news Video
0 விமர்சனங்கள்:
Post a Comment