ஒரே கல்லில் பல மாங்காய்....
அஜாத சத்ரு
இலங்கையில் நடக்கும் தமிழர் இனப் படுகொலைப் பிரச்னை, முதல்வர் கருணாநிதிக்குப் பலவிதத்தில் சாதகமாக அமைந்திருப்பதாக நோக்கர்கள் கருதுகின்றனர். மக்கள் மத்தியில் விலைவாசி உயர்வாலும், தொடரும் மின்வெட்டாலும், அதிகரித்து வரும் அரசு ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களாலும் பரவலாகக் காணப்படும் அதிருப்தியைத் திசை திருப்பும் விதத்தில் முதல்வர் கருணாநிதி இலங்கைப் பிரச்னையைக் கையாள முற்பட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
""நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா மற்றும் மனிதச் சங்கிலி என்றெல்லாம் முதல்வர் ஒரு புறம் கூறி வந்தாலும், எந்த விதத்திலும் மத்திய அரசின் நிலையில் மாற்றம் ஏற்பட்டு விடவில்லை என்பதை வெளிவிவகாரத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இலங்கை அரசுக்கு ராணுவ உதவி அளிப்பதை நிறுத்துவதோ, போர் நிறுத்தம் செய்யும்படி சொல்லுவதோ இயலாது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தி இருக்கும் நிலையில், மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறி இருப்பது அவரது இரட்டை வேடத்தைத் துகிலுரித்துக் காட்டுகிறது. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்கிற நிலைப்பாட்டைத்தான் முதல்வர் கருணாநிதி கடைப்பிடித்து வருகிறார்'' என்பது தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனின் கருத்து.
இந்தப் பிரச்னையில் திமுகவின் நிலைமை தர்மசங்கடமானது என்பதில் சந்தேகமில்லை. மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவது என்பது முதல்வரின் "தமிழினத் தலைவர்' என்கிற அடைமொழியை கேலிக்குரியதாக்கி விடும். அதேநேரத்தில், வெளிப்படையாக இலங்கைப் பிரச்னையில் தீவிர ஈடுபாடு காட்டுவது காங்கிரஸ் தலைமையைக் கோபப்படுத்தும் என்பதுடன், திமுகவின் "மைனாரிட்டி' அரசுக்கும் ஆபத்தாக முடியும்.
கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில் கைகோர்த்து நின்ற கூட்டணிக் கட்சிகளில் காங்கிரûஸத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் திமுகவைக் கைவிட்டுவிட்ட நிலையில், இலங்கைப் பிரச்னையை பயன்படுத்தித் தனது ஆட்சியின் மீதான அதிருப்தியைக் குறைக்க முதல்வர் முற்பட்டிருக்கிறார் என்று தெரிகிறது.
ஜெயலலிதாவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அவரது கூட்டணிக் கட்சியின் தலைவர்களான வைகோவையும், கண்ணப்பனையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருப்பதன்மூலம் காங்கிரஸýக்கு நல்ல பிள்ளையாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முனைந்திருக்கிறார் முதல்வர். அதுமட்டுமல்ல, இதன்மூலம் அதிமுகவும் மதிமுகவும் இனிமேல் கூட்டணியாகத் தொடர்வதுகூட சந்தேகம்தான். மக்களவைத் தேர்தலின்போது வைகோ சிறையில் இருந்து அதிமுகவுடன் கூட்டணியும் இல்லாமல் போனால், அந்தக் கட்சியே நிலைகுலைந்துவிடும்.
""இந்திய இறையாண்மைக்கு எதிரான, தேச விரோதக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள்மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறிவிட்டு மதிமுகவுடன் ஜெயலலிதா கூட்டணி வைத்துக் கொள்வது என்பது என்ன நியாயம்? விடுதலைப் புலிகளை ஜெயலலிதா வன்மையாகக் கண்டித்திருப்பது பாராட்டுக்குரியது. அதே நிலைப்பாட்டை அவர் மதிமுகவிடமும் விடுதலைச் சிறுத்தைகளிடமும் ஏனைய விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களிடமும் காட்ட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு'' என்கிறார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன்.
இலங்கைப் பிரச்னை மூலம் மதிமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தி இருக்கும் முதல்வர், தனது அணியிலிருந்து விலகிச் சென்ற பாமக மற்றும் இடதுசாரிகளை மீண்டும் தன் பக்கம் இழுக்கவும் இந்தப் பிரச்னையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டும். சர்வகட்சிக் கூட்டத்தில் பாமகவும், இடதுசாரிகளும் கலந்து கொண்டதுடன் முதல்வரின் ராஜிநாமா மற்றும் மனிதச் சங்கிலி முடிவுகளுக்கும் அவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பது, அவர்களது எதிர்ப்பின் வன்மையைக் குறைத்திருக்கிறது.
""இலங்கைத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதியின் உணர்வுபூர்வமான நடவடிக்கைகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பல பிரச்னைகளில் அவரது கருத்துடன் நாங்கள் ஒத்துப் போக முடியாவிட்டாலும், இந்தப் பிரச்னையில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவுக்கு ஒத்துழைப்பு நல்குவதன் மூலம்தான், மத்திய அரசை வற்புறுத்தி அல்லல்படும் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையை நிலைநாட்ட முடியும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. தேர்தல் கூட்டணியைப் பற்றி சிந்தித்துச் செயல்படும் நேரமல்ல இது. இலங்கையில் நடக்கும் இனப் படுகொலையைத் தடுக்க வேண்டிய நேரத்தில், அரசியல் மனமாச்சரியங்களுக்கு இடமளிக்கக் கூடாது'' என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன் கருத்துத் தெரிவித்தார்.
ஒருபுறம், இலங்கைப் பிரச்னையின் மூலம் அதிமுக மதிமுக உறவில் விரிசல் ஏற்படுத்தியதைப் போல, இடதுசாரிகள் மத்தியிலும் இந்தப் பிரச்னையின் மூலம் பிளவை ஏற்படுத்தி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை அவர்கள் எப்போதும் போல விடுதலைப் புலிகள் எதிர்ப்பு மற்றும் இலங்கையின் இறையாண்மை என்கிற கருத்துகளைத்தான் வற்புறுத்தி வருகிறார்கள். இலங்கைப் பிரச்னையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை.
இந்தப் பிரச்னை திமுக-காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்படுத்தி விடக் கூடாது என்பதிலும் கவனமாகக் காயை நகர்த்தி இருக்கிறார் முதல்வர். தனித் தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பிய மதிமுகவினர் மற்றும் சினிமாத் துறையினரைக் கைது செய்ததன் மூலமும், தானே இலங்கைத் தமிழர் பிரச்னையை முன்னின்று குரல் கொடுத்து, ஏனைய கட்சிகளைத் தன் பின்னால் அணிவகுக்கச் செய்ததன் மூலமும் மத்திய அரசுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொண்டு விட்டார் முதல்வர். கருணாநிதியின் ராஜதந்திரம் இந்த விஷயத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
""இலங்கைத் தமிழர்களுக்குக் கருணாநிதி செய்திருப்பது பச்சைத் துரோகம். இந்தப் பிரச்னை தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திவிடாமல் கருணாநிதி தடுத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. இந்திய இறையாண்மைக்கு எதிராக எதுவும் பேசாத எங்கள் மீது வீண்பழி சுமத்தி எங்கள் தலைவர்கள் வைகோ மற்றும் கண்ணப்பனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து, அதிமுக-மதிமுக உறவில் விரிசல் ஏற்படுத்த முயல்கிறார் கருணாநிதி. அது நடக்காது என்பது மட்டுமல்ல, மக்கள் இவரது கபட நாடகத்தையும், துரோகத்தையும் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை'' என்று பொரிந்து தள்ளுகிறார் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
மொத்தத்தில் ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. இலங்கைப் பிரச்னையை தனக்கு எதிரான அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்ள ஒரு ஆயுதமாக பயன்படுத்த முதல்வர் கருணாநிதி முற்பட்டிருக்கிறார் என்பதுதான் அது.
பலவீனமான கூட்டணி; தனது "மைனாரிட்டி' அரசைத் தாங்கிப் பிடிக்கும் காங்கிரஸôர் மத்தியில் முணுமுணுப்பு; விலைவாசி மற்றும் மின்வெட்டால் பரவலாக ஏற்பட்டிருக்கும் அதிருப்தி; அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் அதிகரித்திருக்கும் செல்வாக்கு; சென்னையில் தனது இளைஞரணி மாநாட்டின் மூலம் தனது அதிகரித்து வரும் செல்வாக்கை நிரூபித்துக் காட்டிய நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவின் அதீதமான வளர்ச்சி - இப்படி அரசை ஆட்டம் காண வைக்கும், திமுகவிற்குப் பெரிய அளவில் செல்வாக்குச் சரிவை ஏற்படுத்தும் பல பிரச்னைகளை இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தானே கையிலெடுத்ததன் மூலம் திசை திருப்ப முற்பட்டிருக்கும் முதல்வரின் ராஜதந்திரம் பலிக்குமா?
ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்க முற்பட்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. ஆனால் அந்த மாங்காய்கள் விழப்போவது அதிமுக தலைவி ஜெயலலிதாவின் மடியிலா அல்லது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மடியிலா என்பதுதான் கேள்வி என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறது. அந்தக் குரல் அண்ணா அறிவாலயத்துக்கு மட்டும் கேட்கவில்லை போலிருக்கிறதே, ஏன்?
தினமணி
0 விமர்சனங்கள்:
Post a Comment