கடுங்குளிரில் அனாதையாய் கைவிடப்பட்ட ஆண் குழந்தை
பிறந்து மூன்று வாரமே ஆன பச்சிளம் குழந்தையை துணியால் சுற்றி, கடுங்குளிரில் அனாதையாக விட்டுச் சென்றாள், கல்மனம் கொண்ட தாய். கொட்டிய மழையில் குளிர் தாங்காமல் விடிய விடிய கதறிய குழந்தையை, அதிகாலையில் ஆட்டோ டிரைவர் மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார். கோவை, கணபதி, கிருஷ்ணராஜ் காலனியில் உள்ள சித்தா தோட்டத்தில் வசிப்பவர் ஜெயராமன்(30); ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் குடும்பத்துடன் பழநி முருகனை தரிசிக்கச் சென்ற இவர், நேற்று அதிகாலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோவுக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. ஆட்டோவுக்கள் பார்த்த ஜெயராமன் அதிர்ச்சியடைந்தார். பின்சீட்டில், துணியால் சுற்றப்பட்ட நிலையில், அழகான ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது; இரவில் பெய்த கனமழையால் கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. அக்குழந்தைக்கு ஜெயராமன் குடும்பத்தினர் பசும்பால் புகட்டினர். பின், சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தற்போது, குழந்தைகள் வார்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்குழந்தை பிறந்து மூன்று வாரத்துக்கு மேல் இருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர். அழகான ஆண் குழந்தையை ஆட்டோவில் போட்டுச் சென்ற கல்மனம் கொண்ட தாய் யார் என்ற மர்மம் நீடிக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment