பள்ளிக்கு நிலம் கொடுத்த பிச்சைக்கார மூதாட்டி
உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கு நிலத்தை தானமாக கொடுத்துள்ளார் 75 வயது பிச்சைக்காரி. மேற்குவங்கம் மாநிலத்தில்தான் இந்த அபூர்வமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவிலிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது நபாத்விப் நகரம். இங்குள்ள ராஜ்பன்ஷிபாரா என்ற இடத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. 40 ஆண்டுகளாக இந்தப் பள்ளி வாடகை கட்டடத் தில் செயல்பட்டு வந்தது. அந்தக் கட்டடமும் மோசமான நிலைமையில் இருந்தது.
வகுப்பறைகளில் பெஞ்சுகள் இல்லாததால், மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடம் படித்து வந்தனர். பள்ளிக்கு புதிதாக கட்டடம் ஒன்றை கட்ட நிலம் கொடுத்து உதவும்படி, பலரை அணுகி பள்ளியின் தலைமை ஆசிரியை உதவி கேட்டார். ஆனால், யாரும் உதவி செய்யவில்லை. அதேநேரத்தில், இதே ஊரில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தும் 75 வயது மூதாட்டி ஒருவர், தனக்கு சொந்தம் என இருந்த, ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை, ஆரம்ப பள்ளிக்கு கட்டடம் கட்ட தானமாக வழங்கியுள்ளார்.
அந்த பிச்சைக்கார மூதாட்டியின் பெயர் சாந்திலதா பிஸ்வாஸ். பள்ளிக் கூடம் கட்ட பலரிடம் நிலம் கேட்டும் கிடைக்காததை அறிந்த சாந்திலதா, தானே முன்வந்து தனக்குரிய சிறிய நிலத்தை பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். இதையடுத்து, அந்த இடத்தில் பள்ளிக்கு விரைவாக புதிய கட்டடம் கட்டித் தரும்படி, நாடியா ஆரம்ப பள்ளி கவுன்சிலை பள்ளியின் தலைமை ஆசிரியை கேட்டுக் கொண்டுள்ளார். கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட வங்கதேசத்தில் வசித்த சாந்திலதா, தன் 13வது வயதில் கணவரை இழந்தார். 1947ம் ஆண்டு தன் உறவினர்களுடன் மேற்குவங்கம் வந்தார். அப்போது, சிறிய நிலத்தை வாங்கினார். அதில், ஓட்டு வீடு கட்டி குடியேறினார். வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வாழ்க் கையை ஓட்டினார். வயதாகி விட்டதால், இப்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை. அதனால், தெருக்களில் பிச்சை எடுத்து வாழ்க்கையை கழிக்கிறார். தான் வசித்த வீட்டை பள்ளிக்கு கொடுத்ததால், இனி முதியோர் இல்லம் ஒன்றில் வசிக்க தீர்மானித்துள்ளார். இருந்தாலும், பள்ளிக்கான கட்டடம் கட்டப்படும் வரை, தான் வசித்த வீட்டில் தங்கியிருக்கப் போவதாக கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment