தாய்லாந்தில் அரசியல் குழப்ப நிலையால் எறும்புதின்னிகளுக்கு மனநிலை பாதிப்பு
தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில், அந்நகரின் மிருகக்காட்சிச்சாலையிலுள்ள இரு எறும்புதின்னி விலங்குகள் மிகவும் கலவரமடைந்து மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சத்தங்களாலும் இரைச்சல்களாலும் இலகுவில் பாதிப்படையும் தன்மை உடைய இந்த எறும்புதின்னிகள், கடந்த வாரம் மிருகக் காட்சிச்சாலைக்கு அண்மையிலுள்ள பாராளுமன்ற வீதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது வெளிப்பட்ட இரைச்சலையடுத்து மிகவும் அதிர்ச்சியடைந்து போயுள்ளதாகத் தெரிவித்த மேற்படி "டஸித்' மிருகக் காட்சிச்சாலையின் பணிப்பாளர் கன்சாய் சன்வொங், அந்த இரு எறும்புதின்னிகளும் மன ஆறுதல் பெறும் முகமாக 3 மாத விடுமுறையில் பாங்கொக்கின் கிழக்கேயுள்ள கொன்புரி மாகாண மிருகக்காட்சிச்சாலையொன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த 4 வயது ஆண் மற்றும் பெண் எறும்பு தின்னிகள், ஒரு வருடத்திற்கு முன் அமெரிக்காவிலிருந்து தாய்லாந்துக்கு எடுத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
""தாய்லாந்தில் தற்போது நிலவும் அரசி யல் குழப்ப நிலைகளால் மனிதர்கள் பாதிக்கப்பட்டார்களா இல்லையா என்பதை விட, மிருகக்காட்சிசாலை விலங்குகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளதை உறுதியாக கூற முடியும்'' என கன்சாய் சன்வொங் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோது மிருகக் காட்சிச்சாலையிலுள்ள கங்காருகள், யானைகள், மான்கள், பறவைகள் என்பனவும் பீதியடைந்து காணப்பட்டதாக அவர் கூறினார்.
தாய்லாந்தில் கடந்த வாரம் நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்ற மோதல்களில், இருவர் பலியானதுடன் 400 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment