ஆண்கள் தலைமறைவு சடலத்தை பெண்களே தூக்கி சென்று புதைத்தனர்
உத்தபுரத்தில் ஆண்கள் தலைமறைவாகி உள்ளதால் சடலத்தை பெண்களே தூக்கிச் சென்று மயானத்தில் புதைத்தனர்.
மதுரை மாவட்டம் எழுமலை அருகேயுள்ள உத்தபுரத்தில் 2 சமூகத்தினர் இடையே நீண்டநாட்களாக மோதல் இருந்து வருகிறது. இங்குள்ள சர்ச்சைக்குரிய சுவரை அதிகாரிகள் இடித்ததை கண்டித்து மற்றொரு பிரிவினர் குடும்பத்துடன் மலைப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அதிகாரிகள் பேச்சு நடத்தியதை தொடர்ந்து அவர்கள் ஊர் திரும்பினர்.
இந்நிலையில் இங்குள்ள முத்தாலம்மன் கோயில் விழாவையட்டி கோயில் சுவரில் ஒரு பிரிவினர் சமீபத்தில் வெள்ளை அடித்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் வெடிகுண்டுகளை வீசித் தாக்கிக் கொண்டனர்.
இதுதொடர்பாக இரு பிரிவையும் சேர்ந்த 560 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கிராமத்து ஆண்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர்.
இந்நிலையில் உத்தபுரத்தில் ஒரு பிரிவை சேர்ந்த பெரியசாமி மகள் சித்ரா உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். இவரது தந்தை, 3 சகோதரர்கள் தலைமறைவாகி உள்ளனர். உடலை தூக்கிச் செல்ல ஆண்களே இல்லை.
இதனால் சித்ராவின் உடலை அலங்கரிக்கப்பட்ட தேரில் பெண்களே ஏற்றி சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். அங்கு பெண்களே இறுதிச்சடங்கு நடத்தினர். பின்னர் 6 அடி ஆழக் குழி தோண்டி அதில் உடலை அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து கிராமத்து பெண் பஞ்சவர்ணம் கூறியதாவது:
இறந்த சித்ராவின் உடலை அவர் தந்தை, சகோதரர்கள் கூட பார்க்க முடியவில்லை.
ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊரில் நாங்கள் கண்டிப் பாக வாழத்தான் வேண்டுமா.
இவ்வாறு பஞ்சவர்ணம் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment