கிளிநொச்சி பௌத்தர்களின் வரலாற்று பொக்கிஷம் என்கிறார் மேதானந்த தேரர்
"குளங்கள் யாவும் சிங்கள மன்னர்கள் நிர்மாணித்தவை'
-கே. பாலசுப்பிரமணியம், டிட்டோ குகன்-
கிளிநொச்சி பௌத்தர்களின் வரலாற்றுப் பொக்கிஷம். அங்குள்ள குளங்கள் எல்லாம் சிங்கள மன்னர்களால் கட்டப்பட்டவை. கிளிநொச்சி பௌத்தர்களின் பூர்வீக இடமென உரிமை கோரினார் தொல்லியல் சக்கரவர்த்தியும் ஹெல உறுமய எம்.பி.யுமான எல்லாவல மேதானந்த தேரர்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
பரதர் என்ற இனம் ஆட்சி புரிந்ததாலேயே இந்தியா பாரதம் என்றழைக்கப்படுகின்றது. எனவே, சிங்களவர்கள் ஆளும் நாட்டை சிங்கள நாடு என்று சொல்லாமல் வேறு எப்படிக் கூறுவது?
இலங்கைக்கு சிங்களவர்களுக்கு முன் தமிழர்கள் வந்ததாகக் கூறப்படும் கதை விகாரமானது. அதற்கு அடி முடி இல்லை. இலங்கை சிங்களவர்களின் நாடு. ஆனால், அங்கு ஏனைய இனத்தவர்களும் வாழமுடியும். மதம் என்பது ஒன்று. உரிமை என்பது இன்னொன்று.
நாம் இனவாதிகளென்றால் தெற்கில் ஒரு தமிழன் கூட இருக்க முடியாது. தமிழர்கள் தமது தலைவரென போற்றும் செல்வநாயகம் தான் இனவாதி. தற்போது தமிழர்களில் உச்சக்கட்ட இனவாதியாக பிரபாகரனே உள்ளார்.
ஹெல உறுமய இனவாதத்தை தூண்டிய ஒரு சம்பவத்தையேனும் எவராலும் நிரூபிக்க முடியுமா? நாம் தமிழ் அகதி சிறுவர்களுக்கு எவ்வளவு உதவிகளை செய்திருக்கிறோம்.
கிளிநொச்சி என்றால் சிவந்தமண் என்று அர்த்தம். கிளிநொச்சி பௌத்தர்களின் வரலாற்று பொக்கிஷம். அது பௌத்த மக்களின் பூர்வீக இடம். அங்கு கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுப் படிவங்கள் அதனை உறுதி செய்கின்றன.
அங்குள்ள குளங்கள் எல்லாம் சிங்கள மன்னர்களாலேயே கட்டப்பட்டன. அந்த இடத்தை மீட்பதற்குத் தான் இப்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தினக்குரல்
0 விமர்சனங்கள்:
Post a Comment