இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் வெளிநாட்டவர்களை கொல்லவும் திட்டம் - பிடிபட்ட தீவிரவாதி தகவல்
வீரகேசரி நாளேடு 11/28/2008
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து கப்பலில் வந்த சுமார் 25 தீவிரவாதிகள், 3 படகுகளில் மும்பையின் கேட்வே பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் ஊடுருவி இந்த பயங்கர தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக புதுடில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
10 குழுக்களாக பிரிந்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகளே மும்பை ரெயில் நிலையம், ஹோட்டல்கள், மக்கள் கூடும் சந்திப்புகளில் கண் மூடித்தனமாக சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிரவாதிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி தாஜ் ஹோட்டல், பிரைடண்ட் ஒபரோய் ஹோட்டல், நரிமன் ஹவுஸ் வளாகம் ஆகிய 3 இடங்களில் புகுந்ததுடன் அங்கிருந்த 9 வெளிநாட்டவர்களை சுட்டுக் கொன்றனர். மற்றவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொண்டனர்.
இதையடுத்து டில்லியில் இருந்து 400 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள், 65 இராணுவ கமாண்டோக்கள் வரவழைக்கப்பட்டனர். நேற்று அதிகாலை அவர்கள் தாஜ் ஹோட்டலுக்குள் அதிரடியாக புகுந்தனர். தாஜ் ஹோட்டலில் இருந்த சுமார் 200 பேரை பத்திரமாக மீட்டனர். அது போல ஒப ரோய் ஹோட்டலில் இருந்த 250 பேர் மீட்கப்பட்டனர். அதன் பிறகு தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தும் அதிரடி நடவடிக்கையை இன்று பிற்பகல் கமாண்டோ வீரர்கள் தொடங்கினார்கள்.
கமாண்டோ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இனி உயிர் தப்ப இயலாது என்பதை உணர்ந்த தீவிரவாதிகள் தாஜ், ஒபரோய் ஹோட்டலின் மேல் தளத்தில் கையெறி குண்டுகளை வீசியபடி இருந்தனர். இதனால் 2 ஹோட்டல்களும் தீப்பிடித்து எரிந்தன.
எனினும், கமாண்டோ படையின் கறுப்பு பூனைப் பிரிவு வீரர்கள் தாஜ் ஹோட்ட லுக்குள் அதிரடியாக நுழைந்து ஒவ்வொரு அறையாக தேடி, சோதனை நடத்தி தீவிரவாதிகளை வேட்டையாடினார்கள். அங்கு 7 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த் தப்பட்டனர். 3 தீவிரவாதிகள் குண்டுக் காயங்களுடன் மேல் மாடிக்கு தப்பி ஓடினார்கள்.
அந்த 3 தீவிரவாதிகளையும் உயிருடன் பிடிக்க கமாண்டோ வீரர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு அந்த 3 தீவிரவாதிகளும் பிடிபட்டனர். அவர்கள் மூவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அதில் ஒருவர் பெயர் அஜ்மல் அமீர்கமால் என்று தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானின் முல்தான் நகர் அருகே உள்ள பரிட்காட் என்ற ஊரை சேர்ந்தவர். இந்த 3 தீவிரவாதிகளும் லஷ் கர்இதொய்பா இயக்கத்தின் தற்கொலை படையைச் சேர்ந்தவர்கள்.
பிடிபட்ட 3 தீவிரவாதிகளிடமும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தீவிர வாதிகள் இந்திய பொருளாதாரத்தை சீர் குலைக்கவும், வெளிநாட்டவர்களை கொல்லவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாக கூறினார்கள். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் ஒபரோய் ஹோட்டலிலும், நரிமன் இல்லத்திலும் தலா 4 தீவிரவாதிகள் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து ஒபரோய் ஹோட்டலில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை வீழ்த்தும் நடவடிக்கை தீவிரப்படுத் தப்பட்டது. அங்கு நேற்று நள்ளிரவுக்குப் பிறகு துப்பாக்கி குண்டு சத்தம் எதுவும் கேட்கவில்லை. கையெறி குண்டு வீச்சும் இல்லை.
இன்று காலை ஒபரோய் ஹோட்டலின் அனைத்து மாடிகளி லும் கமாண்டோ வீரர்கள் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அங்கு இருந்த தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதற்கிடையே இன்று காலை தாஜ் ஹோட்டலின் பழைய கட்டிடம் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை ஆரம்பித்தனர். அவர்களுக்கும் கமாண்டோ வீரர்களுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. தாஜ், ஒபரோய், நரிமன் இல்லம் ஆகிய 3 இடங்களிலும் இன்று காலை இராணுவ கமாண்டோ வீரர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினார்கள்.
நரிமன் இல்லத்தின் 4 ஆவது மாடி தகர்ப்பு
தீவிரவாதிகள் மீதான தாக்குதல் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக மும்பை பொலிஸ் கமிஷனர் ஹசன் கபூர் கூறினார். ஆனால் தீவிரவாதிகள் ஹோட்டல்களில் பதுங்கி இருந்த படி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த சண்டை யின் போது தாஜ் ஹோட்டலில் கமாண்டோ வீரர் படுகாயம் அடைந்தார்.
இஸ்ரேலியர்கள் அதிகம் வாழும் நரிமன் இல்லத்துக்குள் நுழைந்த தீவிர வாதிகள் ஏராளமான வெளி நாட்டவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். நரிமன் இல்லத்துக்குள் கமாண்டோ வீரர்கள் நுழைவது மிகவும் சவாலாக இருந்தது. கடும் போராட்டத்துக்குப் பிறகு நேற்று இரவு நரிமன் இல்லத்துக்குள் இராணுவ கமாண்டோக்கள் நுழைந்தனர்.
இதை அறிந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினார்கள். இன்று அதிகாலை 5 தடவை அடுத்தடுத்து கையெறி குண்டுகளை வீசினார்கள். இதில் நரிமன் இல்லத்தின் 4ஆவது மாடி தகர்ந்தது.
நரிமன் இல்லத்தின் மற்ற பகுதிகளில் இருந்து உள்ளுக்குள் நுழைய முடியாத நிலை இருந்ததால் இராணுவ ஹெலிகொப்டர்களில் இருந்து நரிமன் இல்லத்தில் குதிக்க தீர்மானித்தனர். அதன் படி கமாண்டோ படையின் கறுப்புப் பூனைப்படையைச் சேர்ந்த 5 வீரர்கள் ஹெலிகொப்டர்களில் இருந்து நரிமன் இல்லத்தின் மாடி மீது இறக் கப்பட்டனர்.
கமாண்டோ வீரர்கள் மீதும், ஹெலிகொப்டர் மீதும் தீவிரவாதிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுடும் அபாயம் இருந்தது என்றாலும் கமாண்டோ படையினர் மிகவும் துணிச்சலாக மாடி மீது இறங்கினார்கள். ஹெலிகொப்டரை இயக்கிய விமானிகள் தீவிரவாதிகளின் தாக்குதல் ஆபத்தை சமாளிக்கும் வகையில் மெல்ல பறந்தபடி செயல்பட்டனர்.
நரிமன் இல்ல மாடி வழியாக புகுந்துள்ள கமாண்டோ வீரர்களும் பதிலடி நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர். இதனால் நரிமன் இல்லத்தில் இன்று காலை முதல் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
நன்றி: வீரகேசரி
0 விமர்சனங்கள்:
Post a Comment