ஸ்பெயினில் பராக் ஒபமாவின் மாபெரும் முக உருவத் தோற்றம்
பிரபல கியூப அமெரிக்க ஓவியரான ஜோர்ஜ் ரொட்ரிகுயஸ், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபமாவின் இராட்சத முகமொன்றை ஸ்பெயினின் பார்சிலோனா கடற்கரையில் களிமண்ணில் வடித்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.
128 மீற்றர் நீளமும் 73 மீற்றர் அகலமுமுடைய சுமார் 2.5 ஏக்கர் நிலப் பரப்பில் 450 தொன் களிமண்ணைப் பயன்படுத்தி பராக் ஒபமாவின் இந்த முக உருவம் வடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உருவப் படத்தில் 15,000 டொலர் பெறுமதியான வெள்ளை மற்றும் கறுப்பு நிற படிகக்கற்களும் இந்த முக உருவத்தில் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த முக உருவை சிருஷ்டித்தமைக்கான காரணம் குறித்து ஓவியர் ஜோர்ஜ் ரொட்றிகுயஸ் (42 வயது) விபரிக்கையில், இந்த உருவப்படமானது உண்மையில் ஒபமாவுக்கு ஆதரவு வழங்குவதற்காக உருவாக்கப்படவில்லை. ஒபமா தொடர்பான பித்துப் பரவி வருவதை கேள்வி கேட்பதாக உள்ளது'' என்று கூறினார்.
ஒபமாவின் ஆளுமை, இளமை, தனிப்பட்ட வரலாறு மற்றும் புதிய அரசியல் தொடர்பான செய்திகள் என்பன அவருக்கு நிஜத்தை விட பிரமாண்டமான தோற்றப்பாட்டை அளிப்பதை விளக்குவதாக தனது கலைப்படைப்பு விளங்குவதாகக் குறிப்பிட்ட ஜோர்ஜ் ரொட்றிகுயஸ் தனது ஆக்கத்திற்கு "எதிர்பார்ப்பு" என பெயரிட்டுள்ளார்.
மேற்படி முக உருவை உருவாக்கும் திட்டத்துக்கான நிர்மாண நிபுணரான அலெக்ஸ் ஜிமெனெஸ் விபரிக்கையில், சீரற்ற காலநிலை காரணமாக ஒபமாவின் முக உருவமைப்பின் ஓரங்கள் சில இடங்களில் சேதத்திற்கு உள்ளானதாக தெரிவித்தார்.
இந்த ஒபமாவின் முக உருவை வடிவமைக்க தொண்டு அடிப்படையில் சுமார் 50 பேர் உதவியதாக அலெக்ஸ் கூறினார்.
அத்துடன் ஒபமாவின் அபிமானிகளில் ஒருவராக தான் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment