இலங்கை பயணம்... பிரணாப் 'கொட்டாவி'!
இலங்கை பயணத்திற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும். அங்கு அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை தவிர்க்கப்பட வேண்டும். நிவாரண உதவிகள் முறையாக போய்ச் சேர வேண்டும். இதை நேரில் சென்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்த வேண்டும் என தமிழக கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதை ஏற்ற மத்திய அரசு பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று நேரில் வலியுறுத்துவார் என தெரிவித்திருந்தது. ஆனால் பிரணாப் முகர்ஜி எப்போது இலங்கை செல்வார் என்று அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. இப்போதைக்கு அவர் இலங்கை செல்வதற்கான அறிகுறியையும் காணோம்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சினைக்கு ராணுவ ரீதியாக அல்லாமல், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும்.
அதிகாரப்பகிர்வு திட்டம்தான், இலங்கைப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு. எனவே, அதிகாரப்பகிர்வு திட்டத்தை இலங்கை அரசு விரைவுபடுத்த வேண்டும். போரால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது. அவர்களுக்காக தமிழக அரசிடம் இருந்து பெற்ற நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இன்னும் நான் இலங்கை செல்லும் தேதி முடிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் பிரணாப்.
ஜனவரி மாதத்தில் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்லக் கூடும் எனத் தெரிகிறது. ஆனால் இதுவரை உறுதியாக எந்தத் தகவலையும் வெளியுறவுத்துறை அறிவிக்கவில்லை.
தற்போது பாகிஸ்தானுடனான உரசல் தீவிரமாக இருப்பதால் அதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானுடனான பதட்டம் தணி்ந்தால் மட்டுமே பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் உறுதியாகும் எனத் தெரிகிறது.
Thatstamil
0 விமர்சனங்கள்:
Post a Comment