படையினர் புலிகள் கடும் மோதல் சின்னப்பரந்தன் இராணுவத்தினர் வசம் - இராணுவ பேச்சாளர்
வீரகேசரி நாளேடு 12/23/2008 7:10:48 PM - கிளிநொச்சி பரந்தன் மேற்குப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களில் 12 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார்.
மோதல்களை அடுத்து பரந்தன் பிரதேசத்திலிருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சின்னப்பரந்தன் பகுதி முழுவதும் படையினரின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது இன்று அதிகாலை முதல் குறித்த பகுதியினூடாக முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்ட படையினர் மீது விடுதலைப் புலிகள் மறைந்திருந்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதன் போது பதில் தாக்குதல்களை நடத்திய படையினர் விடுதலைப் புலிகளால் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 300 மீற்றர் நீளமான மண்மேடுகளைத் தகர்த்தவாறு அப்பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
அத்துடன் இன்று காலை தமது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள ஏ35 பாதையில் அமைந்துள்ள சின்னப் பரந்தன் பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை முல்லைத்தீவு குமிழமுனைப் பகுதியில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று காலை 7 மணிமுதல் மாலை 4.30 மணிவரையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் போது குமிழமுனைப் பகுதி முழுவதும் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment