தமிழர்களின் போராட்டத்தை சிங்களவர்கள் அங்கீகரித்துள்ளனர்: கருணா
தமிழர்களின் போராட்டத்தை சிங்களவர் அங்கீகரித்திருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறினார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சுவாமி விபுலானந்தர் நினைவுதினத்தின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“சிங்களவர்கள் தாக்கப்படும் போது, தமிழர்கள் தாக்கப்படுவதில்லை. 83ஆம் ஆண்டு தமிழர்கள் தாக்கப்பட்டபோதும் தற்பொழுது காலம் மாறிவிட்டது. கிழக்குப் பல்கலைகழகத்தின் சிங்கள மாணவர் ஒருவர் கொல்லப்பட்டபோது, பதிலுக்கு ஏனைய பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் கொல்லப்படவில்லை” என கருணா அம்மான் கூறினார்.
அதேபோல, மேஜர் ஜென்ரல் ஜானகபெரேராவின் படுகொலைக்குப் பழிவாங்க நினைத்திருந்தால் பல தமிழர்களைக் கொன்றிருக்க முடியும் எனவும், சிங்களவர்கள் அவ்வாறு செய்யவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
“மோதல்களில் வெற்றிபெற முடியாது என்பதற்காகவே நான் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தேன். பேச்சுவார்த்தை காலத்தில் மோதல்கள் வேண்டாம் என நான் பிரபாகரனுக்கு எடுத்துக் கூறினேன். அவர் அதனைக் கேட்கவில்லை” என கருணா அம்மான் தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்து இருப்பதே சிறந்தது எனத் தனது உரையில் சுட்டிக்காட்டிய கருணா அம்மான், அதன் மூலமே கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லமுடியும் எனக் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment