முல்லைத்தீவு பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடி
வன்னியில் படையினருக்கும் புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, முல்லைத்தீவை நோக்கி இடம்பெற்று வரும் கடும் ஷெல் தாக்குதல் காரணமாக மக்கள் மிகுந்த நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வசிப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணைத் தாக்குதல்களால் ?ள்ளியவளை, வற்றாப்பளை, சுவாமி தோட்டம் ஆகிய பகுதிகளிலுள்ள மக்களே இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களைத் தேடிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இடம்பெயர்வோரைத் தங்க வைப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கும் கூடாரங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தேவைப்படுவதாக முல்லைத்தீவு செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வன்னிப் பிரதேசத்தைப் பொறுத்தமட்டில், தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக ஏலவே பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்து அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் இடம்பெயர்வுகள் மேலும் அதிகரிக்குமானால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க முடியாத நிலைமைகளே எஞ்சுவதாக இருக்கும்.
இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக் கணக்கான மக்கள் உணவுக்காகவும், இதர அவசியத் தேவைகளுக்காகவும் தொடர்ந்து நெருக்கடிகளையே எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களுக்கென அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணங்களும் உரிய முறையில் பகிர்ந்தளிக்கப்பட முடியாதிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்றாடம் பெரும் எண்ணிக்கையான மக்கள் தங்கள் பிரதேசங்களை விட்டு இடம்பெயர்வதால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், சுகாதாரத் தேவைகள் என்பவற்றை மேற்கொள்வது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
குறிப்பாக, வன்னிப் பிராந்திய மக்கள் போர் நடவடிக்கைகள் காரணமாக, பாதுகாப்புத் தேடி அங்குமிங்கும் அலைவதையே காணமுடிகின்றது. எந்தவொரு இடத்திலும் நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படு கிறது. இதனால், எவ்வளவு பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு நிவாரணங்களைத் துரிதமாக வழங்குவது, அகதிகளான மக்களின் துயரைத் துடைக்க எந்த வகையில் செயற்படுவது போன்ற நெருக்கடிகளால் வன்னிப் பிரதேச செயலகங்கள் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றன.
மேலும், போர் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அங்கு நிலைகொண்டிருந்த பெரும்பாலான தொண்டர் நிறுவனங்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளதால் சர்வதேசெஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா. அகதிகள் ஸ்தாபனம் என்பனவே மக்களின் துயர்துடைப்புப் பணியில் பிரதானமாக செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை கவனிப்பது என்பது அவ்வளவு சுலபமான கா?யமல்ல என்பதையும் மறந்து போகக் கூடாது.
இராணுவ நடவடிக்கைகளுக்கு அப்பால் அப்பாவிப் பொது மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாததாகும். தற்போதைய சூழ்நிலையில் மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் ஆங்காங்கே இடம்பெயர்ந்து வருகின்றனர். மேலும் இராணுவ நடவடிக்கைகள் இதேபோக்கில் தொடருமானால், மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளும் எந்த வகையிலும் குறைவதற்கு வழி இல்லாது போய்விடும்.
போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் அதேவேளை, மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளும் மோசமடைந்து செல்கின்றன.
எனவே, இடம்பெயர்ந்துள்ள மக்களின் துயரைத் துடைக்க அரசாங்கம் சாத்தியமான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் இன்றியமையாதது.
இதே வீச்சில் இராணுவ நடவடிக்கைகள் தொடருமானால், மீண்டும் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிப்பதுடன் உணவுப் பொருட்களை அனுப்பிவைக்க முடியாத நிலைமைகளே மிஞ்சுவதாக இருக்கும். இதனால், ஏலவே இடம்பெயர்ந்து அரசின் நிவாரணத்தில் முழுக்க முழுக்கத் தங்கியுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எந்தக் கட்டத்திலும் மக்கள் பாதிப்படையாது இருப்பதை உறுதி செய்வது மிகவும் இன்றியமையாதது. இந்தியா உட்பட சர்வதேசமூகமும் அதன் காரணமாகவே இலங்கை யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
பொது மக்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் தங்கள் எதிர்காலத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடனேயே காணப்படுகின்றனர். எனினும், துரதிஷ்டவசமாக நாட்டில் தொடரும் சம்பவங்கள் அவர்களை சகல வழிகளிலும் மோசமாகப் பாதித்துள்ளன. இந்நிலை மேலும் நீடிக்காதிருப்பதை உறுதிசெய்வது சம்பந்தப்பட்டவர்களின் கடப்பாடாகும். மாறாக, போர் நடவடிக்கைகள் இதே வீச்சில் தொடருமானால் மனித உயிர் அழிவுகளும் துயரங்களுமே தொடர்கதையாக இருக்கும் என்பதை மிகவும் மனிதாபிமானத்துடன் எடுத்துக்கூற விரும்புகின்றோம்.
வீரகேசரி 15.12.08
0 விமர்சனங்கள்:
Post a Comment