இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வழி என்ன? உலகளாவிய ரீதியில் வாக்கெடுப்பை நடத்துகிறது ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தினை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக உலகளாவிய ரீதியில் தமிழ் மக்கள் மத்தியில் கருத்துகளைப் பெற்று ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பாக இணையத்தளம் மூலம் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு மேற்கொண்டுள்ளது.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அந்த அமைப்பு விசேட கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக, அரசியல் அமைப்பு ரீதியாக இலங்கையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விடயங்கள் பற்றி ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு ஆர்வம் காட்டி வருகிறது. எத்தகையவிதமான அரசாங்கம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்பது பற்றியும் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவின் புதிய நிர்வாகம் உதவுவதற்கு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றியும் அவர்கள் இணையத்தளம் மூலம் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தமிழ் மக்களே தமது எதிர்காலத்தை தீர்மானிப்பது குறித்து சிந்திக்க வேண்டும். இதுவே ஜனநாயக உலகிற்கு அவசியமானது என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு கூறுகிறது. இந்த விடயமானது இலங்கையின் சிங்கள அரசாங்கமோ, இராணுவமோ தீர்மானிக்க வேண்டியதல்ல என்று அந்த அமைப்பு கருதுகிறது.
உலகளாவிய ரீதியில் தமிழ் மக்களின் அபிப்பிராயம் எவ்வாறு இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதற்கு இந்த வாக்கெடுப்பு மூலம் முயற்சிக்கப்படுகிறது. அமெரிக்கத் தமிழர்களை உள்ளடக்கியதாக இந்த ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு இருக்கின்ற போதும் மேற்குலகமானது கொழும்பு அரசாங்கத்தினதும் அதன் சட்டவிதிகளினதும் அபிப்பிராயங்களையே மேற்குலகு கேட்டுக்கொள்வதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால், இந்த விடயத்தில் உலகளாவிய ரீதியில் தமிழர்களின் சிந்தனை எவ்விதம் அமைந்திருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதே தமது எதிர்பார்ப்பென அந்த அமைப்பினர் கூறுகின்றனர்.
அபிப்பிராய வாக்கெடுப்புக்கு அப்பால் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்புவது தொடர்பாகவும் உறுதியளித்துள்ளது. டிசம்பர் 31 நள்ளிரவு வரை இந்த வாக்கெடுப்பு தொடர்ந்து இடம்பெறும். பெறுபேறுகள் அதன் பின் உடனடியாகவே அறிவிக்கப்படும். இந்த வாக்கெடுப்பின் மூலம் தெளிவான செய்தியைப் பெற்று அதனை அமெரிக்க பாராளுமன்றத்திற்கும் புதிய நிருவாகத்திற்கும் சமர்ப்பிப்பதற்கு இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்த அபிப்பிராய வாக்கெடுப்பில் பங்குபற்ற விரும்பும் தமிழ் வாசகர்கள்
http://www.tamilsforobama.com/poll/vot.aspமூலம் வாக்களிப்பில் பங்குகொள்ள முடியும்.
ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பானது அமெரிக்காவில் குடியேறியவர்களையும் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களையும் அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்பாக சகல கண்டத்திலும் வசிக்கும் இடம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இந்த வாக்கெடுப்பு இடம்பெறுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment