ஆபத்தான பணிகளில் வன்னி மக்களை புலிகள் இயக்கம் ஈடுபடுத்துகின்றது - சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு
வன்னியில் மோதல் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்குத் தடைவிதித்துள்ள விடுதலைப்புலிகள், அந்த மக்களைப் பலவந்தமாக ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தி வருவதுடன், வலுக்கட்டாயமாகப் படையணிகளில் சேர்த்தும் வருகின்றனர் என நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக ஒக்டோபர் மாதம் முதல் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அந்த அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வன்னியிலிருந்து சகல மனிதாபிமான அமைப்புகளையும் வெளியேறுமாறு இலங்கை அரசு விடுத்துள்ள உத்தரவு, அந்தப் பகுதி மக்களின் நிலைமையை மோசமாகப் பாதித்துள்ளதாகவும் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனிதாபிமான அமைப்புகள் வலுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டமை அந்தப் பகுதி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதைக் கடினமாக்கியுள்ளது.
‘யுனிசெவ்’ போன்ற அமைப்புகள் மோதலில் ஈடுபட்டுள்ள அமைப்புக்களின் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் திறனை இதனால் இழந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வன்னியிலிருந்து வரும் மக்களைத் தடுத்துவைக்கும் அரசின் கொள்கை காரணமாக அப்பகுதி மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கு அஞ்சுகின்றனர்.
சமீபத்தைய மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கிய உதவிகள் போதுமானவையாக இல்லை என்றும் சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் கவலை வெளியிட்டுள்ளது.
வன்னிக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாகத் தனது இந்த அறிக்கை முழுமையானதாக அமையாது எனக் குறிப்பிட்டுள்ள மனித உரிமைக் கண்காணிப்பகம் அதில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே வன்னியில் இடம்பெறும் தீவிர மோதல் காரணமாகப் பல்லாயிரக்கணக்கானவர்கள் அப்பகுதியில் சிக்குண்டுள்ளனர்.
படையினரின் முன்னேற்றம் காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பரப்பு குறைவடைந்து வரும் அதேவேளை, பொதுமக்களும் அந்தப் பகுதிக்குள் சிக்குண்டுள்ளனர். நெருங்கி வரும் மோதல் காரணமாக அவர்களின் உயிர்களுக்கு அதிகளவு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பலர் தமது வாழ்க்கையைத் துப்பாக்கி, ஷெல் மற்றும் குண்டுவீச்சு சத்தத்தின் மத்தியிலேயே கழிக்கின்றனர்.
அரசு, மனிதாபிமான அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் வன்னிக்குச் செல்வதற்கு முழுமையான தடையை வித்தித்துள்ளதால் அப்பகுதி மக்களது துயரங்கள் இலங்கைக்கு வெளியே சிறிதளவும் கவனத்தை ஈர்ப்பதில்லை.
வன்னியில் தற்போது இடம்பெறும் மோதலின்போது விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் மீது இழைக்கப்பட்டுள்ள மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்தே இந்த அறிக்கை கவனம் செலுத்துகின்றது.
வன்னிக்குச் செல்வதற்கு அரசும் விடுதலைப் புலிகளும் விதித்துள்ள தடை காரணமாக இந்த அறிக்கை அங்குள்ள நிலைவரத்தை முழுமையாக வெளிப்படுத்துகின்றது என நாங்கள் தெரிவிக்கவில்லை.
எனினும், மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆய்வறிக்கை மூலம் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையிலும், திட்டமிட்ட வகையிலும் துஷ்பிரயோகம் செய்கின்றமை தெரியவந்துள்ளது.
தற்போதைய தீவிர மோதல் சூழ்நிலையில் மனித உரிமை துஷ்பிரயோகங்கள் மேலும் அதிகரித்துள்ளன.
ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மேற்கொண்ட ஆயவுகள் மூலம் விடுதலைப் புலிகள் பொது மக்களைப் பலவந்தமாகப் படையணிகளில் சேர்த்தல், பலவந்தமாக வேலை வாங்குதல் போன்றவற்றில் ஈடுபடுத்துகின்றமையும் பொதுமக்களின் நடமாட்டத்தின் மீது கட்டுப்பாடுகள் விதித்துள்ளமையும் தெரிய வந்துள்ளன.
விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் திட்டமிட்ட முறையில் இளைஞர், யுவதிகள் மற்றும் சிறுவர்களைத் தமது படையணிகளில் சேருமாறு வற்புறுத்துகின்றனர். மேலும் பலவந்தமாக சேர்ப்பதைத் திடீரென அதிகரித்துள்ளனர்.
ஒரு குடும்பத்திற்கு ஒருவர் என்ற தமது கடந்த கால கொள்கைகளில் இருந்து அவர்கள் விலகியுள்ளனர்.
தற்போது இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை இணையுமாறு வலியுறுத்துகின்றனர்.
கடந்த சில வருடங்களில் விடுதலைப் புலிகள் சிறுவர்களைப் படையணிகளில் சேர்ப்பது குறைவடைந்து காணப்பட்டது. எனினும் செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் இது அதிகரித்துள்ளது.
பாடசாலை மாணவர்களையும், இடம்பெயர்ந்து முகாம்களில் இருப்பவர்களையும் இணையுமாறு அவர்கள் வற்புறுத்துகின்றனர்.
விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பொது மக்களை ஆபத்தான பணிகளில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துகின்றனர்.
முன்னரங்குகளில் தமது போராளிகளுக்கு அகழிகளையும் காப்பரண்களையும் அமைப்பதற்கு பொது மக்களைப் பயன்படுத்துகின்றனர்.
விடுதலைப் புலிகள் தாம் முன்னர் நடைமுறைப்படுத்திய போக்குவரத்துக்கான அனுமதிப்பத்திர முறையை முற்றாக நிறுத்தியுள்ளனர்.
இதன்மூலம் தமது பகுதிகளிலுள்ள அனைத்து மக்களையும் அங்கிருந்து வெளியேறுவதற்கு அவர்கள் தடை விதித்துள்ளனர்.
இதன் காரணமாக மிகவும் ஆபத்தான - மிகக் குறைந்தளவு மனிதாபிமான நிவாரணம் கிட்டும் - பகுதியில் ஆயிரக்கணக்கான மக்களை அவர்கள் சிங்க வைத்துள்ளனர்.
அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் மாத்திரம் வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு சிக்கியுள்ள மக்கள் எதிர்காலத்தில் படையணிகளுக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கும் பலவந்தமாக வேலைகளில் ஈடுபடுத்துவதற்குமான ஆள் பலத்தை வழங்குவர் என்று புலிகள் கருதுகின்றனர் - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயன் நாளிதழ் 16.12.08
0 விமர்சனங்கள்:
Post a Comment