அமெரிக்கா பயண எச்சரிக்கை
இலங்கைக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது நாட்டுப் பிரஜைகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது.
தொடர்ந்தும் நடைபெற்றுவரும் மோதல்களால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதற்றநிலை காணப்படுவதாகவும், எனவே, அமெரிக்கர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் இராஜாங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம் விடுத்த பயண எச்சரிக்கையை மீண்டும் நீடிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வட மாகாணம் தொடர்ந்தும் அச்சம் நிறைந்த பகுதியாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இராஜங்கத் திணைக்களம், கிழக்கு மாகாணத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்வதும் சிறந்தது எனத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் வடமத்திய மகாணத்தின் ஏ-14 வீதியில் மதவாச்சியிலிருந்து ஹொரவ பொத்தான வரையிலான பகுதி அச்சுறுத்தல் நிறைந்த பகுதியெனவும், திருகோணமலை நகரம் மற்றும் ஏ-6 வீதி போன்றவற்றில் பயணிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அமெரிக்க தனது பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கையில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும், இலங்கைக்குச் செல்லும் அல்லது அங்கு தங்கியிருக்கும் அமெரிக்கர்கள் கொழும்பிலுள்ள தூதரகத்தில் பதவிகளை மேற்கொள்ளுமாறும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் மோதல்கள் அதிகரித்திருப்பதால் அங்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவுஸ்ரேலிய அரசாங்கம் கடந்த வாரம் தமது பிரஜைகளிடம் கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment