உயிரைப் பாதுகாப்பதற்காக இடத்துக்கு இடம் மாறும் மக்கள்
விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து வன்னிப்பிரதேச மக்களை விடுவிப்பதற்கான மனிதாபிமான பணியாகவே அங்கு இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அரசாங்கம் அடிக்கடி கூறுகின்றது. ஆனால் உண்மையிலேயே மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
கடந்த 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்தம் செய்து சமாதான ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. நோர்வே அரசு இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தபோதிலும், சமாதான பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறவில்லை.
பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் சமாதான ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறி போர்நிறுத்தத்தை முறித்துக் கொண்டது. அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்து படிப்படியாக தீவிரப்படுத்தி, அதனை இப்போது ?ழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றது.
பல்குழல் பீரங்கிகள், ஆட்டிலறி பீரங்கிகள், எம்.ஐ 24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள், சக்திவாய்ந்த மிக் 27 ரக போர் விமானங்கள் என்பவற்றைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. அந்நிய நாட்டுப் படையொன்றுடன் நடத்தப்படுகின்ற ஒரு யுத்தத்தைப் போலவே இன்று வன்னிப்பிரதேசத்திலும், யாழ்.குடாநாட்டின் தென்பகுதியிலும் பெரும் தாக்குதல்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
வன்னிப் பிரதேசத்தில் உள்ள பொதுமக்களை விடுவிப்பதற்காகவே இந்த யுத்தம் செய்யப்படுகின்றது என்று அரசாங்கம் கூறினாலும் அங்குள்ள மக்கள் நாளாந்தம் இடம்பெறுகின்ற எறிகணை வீச்சுக்கள், விமானக்குண்டுத் தாக்குதல்கள் என்பவற்றுடன், ஆழ ஊடுருவித் தாக்கும் படையணியின் தாக்குதல்கள் என்பவற்றிற்கு அஞ்சி தமது உயிர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக இடத்திற்கு இடம் மாறி, மாறி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த இடப்பெயர்வுக்கும், பாதுகாப்பு தேடி ஓடுகின்ற ஓட்டத்திற்கும் முடிவு ஏற்படுமா என்பது தெரியாமல் அவர்கள் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை ஒரு தனி நாடு. அங்கு பி?வினைக்கு இடமில்லை. நாட்டைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தெரிவித்து வருகின்றார்கள்.
ஆனால், தனிநாடு கோரி போராடுவதற்காக நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ் மக்களின் (தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகின்ற) அரசியல் அபிலாஷைகளை மீளாய்வு செய்து பார்ப்பதற்கோ, அல்லது அவை குறித்த தீவிரமாக நியாயமான அரசியல் கண்ணோட்டத்துடனோ சிந்திப்பதற்கு அவர்கள் இன்னும் தயாராகவில்லை.
ஆயினும், மறுக்கப்பட்டுள்ள தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தமிழ் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தை ஒடுக்கி, நசுக்கி இல்லாமல் செய்துவிடுவதற்கான எல்லாவிதமான நடவடிக்கைகளையும் பல்வேறு வழிகளி லும் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த ஒடுக்குமுறையானது வடபகுதியில், குறிப்பாக வன்னிப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக அமையவில்லை என்பது கவலைக்குரியாக இருக்கின்றது.
எந்த மக்களைப் பாதுகாப்பதற்காக யுத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோ, அந்த மக்கள் போர்ப்பிரதேசங்களில் இருந்து வெளியேறி வருவதற்குரிய வாய்ப்பையும் வழியையும் ஏற்படுத்துவதில் அரசாங்கம் இன்னுமே ஆர்வம் காட்டாத நிலைமையே காணப்படுகின்றது.
போர்ப்பிரதேத்தில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாகத் தங்கியிருப்பதற்கான பிரதேசங்களாக விசுவமடு மற்றும் ஒட்டுசுட்டான ஆகிய இரண்டு இடங்களை அரசாங்கம் அடையாளமிட்டு, அந்தப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாகத் தங்கியிருக்கலாம் என அறிவித்திருந்தது.
விசுவமடுவில் 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான இடமும், ஒட்டுசுட்டானில் 10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவான பகுதியுமே இவ்வாறு பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் இலக்கு வைத்து வன்னிப்பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் இருந்தும் கிழக்குப் பகுதியான வெலிஓயா பகுதியில் இருந்தும் (இப்போது) தெற்கே மாங்குளம் பிரதேசத்தில் இருந்தும் பல முனைகளில் இராணுவம் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னேறிக்கொண்டிருக்கின்றது.
முழுமையான முற்றுகைக்குள் விடுதலைப் புலிகளைச் சிறைப்படுத்தி அவர்கள் மீதான அகோரமான தாக்குதல்கைளத் தொடுத்துள்ள அரசாங்கம், அந்தப் பிரதேசத்தினுள் சிக்கியுள்ள சுமார் 4 லட்சம் வரையிலான பொதுமக்களை இந்த இரண்டு இடங்களிலும் பாதுகாப்பாகத் தங்கியிருக்கலாம் என எத்தகைய அளவீட்டைக் கொண்டு அனுமானித்து அறிவித்தல் விடுத்ததோ தெரியவில்லை.
அதுமட்டுமல்ல. யுத்தச் சூழலில் சிக்கியுள்ள மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவுக்குள் வரலாம் என்றும், அவர்கள் அங்கு உரிய அடிப்படை வசதிகளுடன் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் அறிவித்திருந்தது. ஆனால், வவுனியாவுக்குள் எப்படி வரவேண்டும் என்பது குறித்த தெளிவான அறிவுறுத்தல்கள் அரசாங்கத்தினால் இன்று வரையிலும் வழங்கப்படவில்லை.
மோதல்கள் நடைபெறுகின்ற இடங்களைச் சூழவுள்ள அனைத்துப் பகுதிகளிலும் எறிகணை தாக்குதல்களும் விமானக்குண்டு வீச்சுக்களும் தாராளமாக நடத்தப்படுகின்றன. இத்தகைய ஒரு சூழலில் மோதல் பிரதேசங்களில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்கள் எவ்வாறு அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களைச் சென்றடைய முடியும் என்பது தெரியவில்லை.
இந்த நிலைமை இவ்வாறிருக்க, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, வன்னிப்பகுதியில் கடந்த மாதம் பெய்த அடை மழையும் வெள்ளப்பெருக்கும் போர்ச்சுசூழலில் சிக்கியுள்ள மக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
குட்டிபோட்ட பூனை தனது குட்டிகளை இடத்திற்கு இடம் மாற்றி மாற்றி வாயினால் கௌவி, தூக்கிச் செல்வது போல,இடத்திற்கு இடம், மாறி மாறி இடம்பெயர்ந்து பாதுகாப்பு தேடிச் சென்று கொண்டிருக்கும் மக்களை இந்த அடைமழையும் வெள்ளப் பெருக்கும் மேலும் அவலமடையச் செய்துள்ளது.
வன்னிப்பிரதேசத்தில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டிருந்த ஐநாவின் மனித நேய அமைப்புக்களையும், சர்வதேதொண்டு நிறுவனங்களையும் அங்கிருந்து அரசாங்கம் வெளியேற்றியதையடுத்து, இடம் பெயர்ந்த மக்கள் ஆதரித்து, அரவணைத்து உதவிபுரிவாரின்றி அனாதைகளாகினார்கள். இதனால், தாங்கள் சொந்த இடங்களைவிட்டு வெளியேறும்போது, தமது அத்தியாவசிய உடைமைகளோடு தமது வீட்டுக் கூரையில் உள்ள கூரைத் தகடுகள், மரம் தடிகள் என்பவற்றையும் தம்மோடு எடுத்துச் செல்லவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள்.
எறிகணைகள் மற்றும் விமானக்குண்டு வீச்சுத் தாக்குதல்கள் காரணமாக அவசர அவசரமாக, போட்டது போட்டபடி கிடக்க வெறும் கையோடு இடம்பெயர்ந்து சென்ற மக்கள் சென்ற இடங்களில் தங்குமிட வசதியின்றி அல்லல்பட நேர்ந்தது.
உதவிபுரியவோ கவனிக்கவோ ஆளின்றி அநாதையான நிலையில் மீண்டும் தமது வீடுகளுக்குச் சென்று வீடுகளைப் பிடுங்கிக் கொண்டு வர நேர்ந்த பலர் விமானக்குண்டுத் தாக்குதல்களுக்கும் எறிகணை தாக்குதல்களுக்கும் இலக்காகி மரணமடைந்த சோகமான சம்பவங்களும் நிறையவே நிகழ்ந்திருக்கின்றன. இதனால் இடம்பெயர்ந்து செல்லும்போதே, தமது வீட்டுப் பொருட்களையும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தம்மோடு எடுத்துச் சென்று தஞ்சம் புகுந்த இடங்களில் தற்காலிக வீடுகளை அமைத்து அவர்கள் தங்கியிருந்தார்கள்.
இவ்வாறு சென்றவர்கள் தாழ்ந்த நிலப்பிரதேசங்களிலும், குளங்களையும் வாய்க்கால்களையும் அண்டிய பகுதிகளில் குடிசைகளை அமைத்து குடியிருந்தார்கள்.
கடும் மழை காரணமாக தாழ்ந்த நிலப் பிரதேசங்களில் தண்ணீர் நிற்கத் தொடங்கியதனால், குடிசைகளில் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டது, அது மட்டுமன்றி, பெருக்கெடுத்த வெள்ளம் தற்காலிக கொட்டில்களையும், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அடித்துச் சென்றது. இதனால், போரினால் இடம்பெயர்ந்த மக்கள் வெள்ளத்தினால் மீண்டும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இடம்பெயர நேர்ந்தது. இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களை அரஅதிகாரிகளும் உள்ளூர் தொண்டு நிறுவனங்களும் படகுகளில் ஏற்றி பாடசாலைகள் பொது இடங்களில் கொண்டு சென்று தங்க வைத்திருக்கின்றார்கள். போரையும் வெள்ளத்தையும் சபித்து, தமது தலைவிதியை நொந்தவண்ணம் இந்த மக்கள் இருக்கி?ன்றார்கள்.
இந்த மக்களின் துயரத்திற்கு எல்லையே இல்லையா என ஆற்றாமையோடு கேட்கும் வகையில் கடந்த வாரம் தர்மபுரத்திற்கு அருகில் உள்ள பிரமந்தனாறு பிரதேசத்தில் கல்லாறு என்ற இடத்தில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் சம்பவம் அமைந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்கள் இங்கு தற்காலிக கொட்டில்களில் தங்கியிருந்தார்கள்.
மழையிலும் வெள்ளத்திலும் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த பல குடும்பங்களும் இங்கு தஞ்சமடைந்திருந்தார்கள். சுமார் ?ன்று அல்லது நான்கு கிலோ மீற்றர் பரப்பளவான இந்த மேட்டுப் பிரதேசத்தைச் சூழ்ந்து வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. சில இடங்களில் ?ழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நின்றிருந்தது.
இந்தப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் மக்கள் அனைவரும் தங்களை மறந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்த வேளை, வானத்தைக் கிழித்துக் கொண்டு சீறி வந்த குண்டு வீச்சு விமானங்கள் இந்தக் குடிசைகளின் மீது தாக்குதல்களை நடத்தின. அடுத்தடுத்து மூன்று குண்டுகளுக்கு மேல் இடைவெளிவிட்டு விட்டு இந்தப் பகுதி மீது வீசப்பட்டன. குண்டு வீச்சு விமானத்தின் மிகையொலியைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த மக்கள் பாதுகாப்பு தேடி சிதறி ஓடினார்கள். ஆனாலும் வயோதிபர் ஒருவரும் சிறுவன் ஒருவனும் இந்தக் குண்டுத் தாக்குதலுக்குப் பலியாகிப் போனார்கள். 18 பேர் படுகாயமடைந்தார்கள்.
இந்தப் பிரதேசம் அரசாங்கத்தினால் பாதுகாப்பான பிரதேசமாக அறிவிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாகத் தங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த விசுவமடு பகுதியின் குறிப்பிட்ட பத்து கிலோ மீற்றர் பரப்பளவான பகுதிக்குள் அடங்கியுள்ளது என்பது திடுக்கிடத்தக்க தகவலாகும்.
விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றின் மீதே இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருக்கின்றது. அத்துடன், இந்தப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களும் இந்தத் தாக்குதலுக்கு இலக்கானது என்றும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ஆனால் அப்பாவிப் பொதுமக்கள் இடம்பெயர்ந்து சென்று பாதுகாப்பிற்காகத் தங்கியிருந்த இடத்தின்மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், அந்தப் பிரதேசத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகள் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி அரசபடைகள்மீது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இதனால் அங்குள்ள பொதுமக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பான பகுதிக்குள் வருவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் அரசாங்கம் குற்றம் சாட்டி வருகின்றது.
இந்தக் குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக ஏற்கவும் இல்லை.
மறுத்துரைக்கவும் இல்லை. அதேவேளை, விடுதலைப் புலிகள் தங்களைப் பணயக்கைதிகளாகப் பயன்படுத்தி வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் தரப்பிலிருந்து சுமத்தப்பட்டதாகவும் தெரியவில்லை.
மொத்தத்தில் போர்ப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து பல இடங்களை அவர்களிடமிருந்து கைப்பற்றி, வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அரசாங்கம் தெரிவித்துக்கொண்டிருக்கின்ற போதிலும், யுத்தம் முடிவுக்கு வருமா என்பது திட்டவட்டமாக இன்னும் தெரியவில்லை.
ஆனால் போர்ச் சூழலில் சிக்கியுள்ள மக்கள் மேலும் மேலும் அவலமடைந்து, மனமுடைந்து, துயரமுற்ற நிலையிலேயே இருக்கின்றார்கள் என்பது மட்டும் நிதர்சனமாகத் தெரிகின்றது. இந்தத் துயரங்களுக்கு எப்போது விடிவு ஏற்படும் என்பது சிக்கல் மிகுந்த பதில் கிடைக்காத கேள்வியாக இருக்கின்றது.
தனோஜன்
இன்றைய வீரகேசரி நாளிதளில் இருந்து பெறப்பட்ட தகவல்
0 விமர்சனங்கள்:
Post a Comment