படையினரால் மீட்கப்பட்ட 31விடுதலைப் புலிகளின் சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைப்பு
வன்னிப் போர்முனைத் தேடுதலில் கடந்த 48 மணி நேரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரையில் 31 விடுதலைப் புலிகளுடைய சடலங்கள் இராணுவத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து இந்த சடலங்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சடலங்களைப் பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில் 15 யுவதிகளுடைய சடலங்கள் அடங்கியுள்ளதாகவும் வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியா மாவட்ட நீதிவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராசா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சடலங்கள் தொடர்பான விசாரணையினை நடத்தினார்சடலங்கள் எதுவுமே அடையாளம் காணப்படவில்லை.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்தச் சடலங்களை பொறுப்பேற்காத பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்கள் ஏற்கனவே, பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. தொடர்ந்தும் சவச்சாலையில் வைத்திருக்க முடியாத நிலை தோன்றியுள்ளது எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மேலும் 28 விடுதலைப் புலிகளுடைய சடலங்கள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிவானுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment