கருணா "தினமலர்" இதழுக்கு வழங்கிய செவ்வி 3
புலித் தலைவர் பதுங்கியுள்ள இடம் எது? தினமலர் இதழுக்கு கருணா அம்மான் அளித்த சிறப்பு பேட்டி- 03
தமிழர் பிரச்னை தொடர்பாக, நார்வே சமாதானக் கூட்டத்தில் ஓர் ஒப்பந்தத்தை பரிசீலிக்கிறோம் என்று கையெழுத்துப் போட்ட புலிகளின் அப்போதைய போர்ப் படைத் தளபதி கருணா அம்மானுக்கும் பிரபாகரனுக்கு மோதல் ஏற்பட்டது. புலிகளை உதறி வெளியேறிய கருணா அம்மான், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பை துவக்கி, எம்.பி.,யாக இலங்கையில் பதவி வகிக்கிறார். அவர் தினமலர் இதழுக்கு அளித்த பேட்டியின் தொடர்ச்சி...
தமிழகத்தில் சிலர் சித்தரிப்பது போல் பிரபாகரன் இல்லை. தமிழர் விடுதலைக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டே, தமிழ் மக்களையே வெட்டிச் சாய்ப்பவர். அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களை கொடூரமாக கொன்றவர்.
நீலம் திருச்செல்வம் போன்ற அறிவு மிக்க தலைவர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தவர். மாற்று இயக்கத்தில், போராடிய பத்மநாபா போன்றவர்களை இரக்கமின்றி கொன்றார். இலங்கை ராணுவ வீரர்களை விட, சொந்த மக்களை அதிகமாகக் கொன்று குவித்தது தான் இவரது சாதனை.
அனைவரையும் கொன்று விட்டு யாரை வைத்து விடுதலையைக் கொண்டாட நினைக்கிறார். இதுபோன்ற பயங்கரவாதியை கதாநாயகனாக பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும். இந்த ஆளை ஹீரோவாக சித்தரிப்பது தமிழகத்துக்கு நல்லதல்ல. மாற்றுக் கருத்து சொல்வோரை துரோகி என்று முத்திரை குத்திவிடுவார்.
இப்போது என்னையும் துரோகி என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். நல்ல நோக்கத் துக்காகத்தான் நான் வெளியேறினேன். அவரது பார்வையில் நான் துரோகியானதால் தான் எங்கள் மக்கள், இன்று நிம்மதியாக இருக்கின்றனர். ஓட்டளித்து எங்களை வெற்றி பெற செய்துள்ளனர்.
தலைவர்களை கொல்லும் முடிவை எடுப்பது யார்?
வேறு யார். சர்வாதிகாரமாக முடிவுகளை எடுப்பது பிரபாகரன் தான். முடிவை எடுத்து அதை செயல்படுத்த உரியவரை தேர்ந்தெடுத்து, அந்த பணிக்கான பொறுப்பாளர்களிடமும் மட்டும் தான் அது பற்றி பேசுவார். வேறு யாருக்கும் தெரியாது. மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள். சம்பவம் நடந்த பின்னர் தான், இயக்கத்துக்கு தெரியவரும்.
புலிக்கட்டுப்பாட்டு பகுதியில் நிர்வாக நடைமுறை எப்படி இருந்தது?
நிலம் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அங்கு இலங்கை அரசு நிர்வாக நடைமுறை தான் செயல்பட்டது. பள்ளிகளை அரசு தான் நடத்தியது. அரசு நாணயமுறை தான் புழக்கத்தில் இருந்தது. நில பத்திரப்பதிவும் அரசு நிர்வாகம் தான். நிலம் வாங்குவோரும், விற்பவரும் புலிகளுக்கு கப்பம் கட்ட வேண்டும். இது கட்டப்பஞ்சாயத்து மாதிரி நடக்கும். தனி நாணய புழக்கமோ, தனி நிர்வாகமோ அங்கு இல்லை.
போலீஸ், நீதி பரிபாலனம் போன்றவை?
நீதி நடைமுறை முதலில் கட்டப் பஞ்சாயத்தாகத்தான் நடந்தது. புலிகள் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்களின் ஆதரவாளர்களுக்கு சாதகமான நடைமுறை. மிகவும் சீரழிந்து கிடந்தது. இதனால் மக்கள் அதிருப்தியடைந்தனர். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக புனரமைக்கப்பட்டது.
உள்ளூர் போலீஸ் நடைமுறை உருவாக்கப்பட்டது. நீதிபரிபாலனமும் புலிகள் கட்டுப்பாட்டில் தான் நடந்தது. அதுவும் கேலிக்குரிய வகையில் தான் நடக்கும். குற்ற நடைமுறை விசாரணையில் வக்கீல்கள் 8, 9ம் வகுப்பு படித்தவர்களாக இருந்தனர். அவர்கள் என்ன சொல்கின்றனரோ அதைத்தான் இயக்கம் எடுத்துக் கொள்ளும். ஒரு பிரச்னையை அணுகி, அதன் சாதக பாதகங்களை உணர்ந்து செயல்படத் தகுத்த படித்த இளைஞர்கள் இல்லை. சிந்திக்கத் தெரிந்தவர்களை பிரபாகரனுக்குப் பிடிக்காது.
கிழக்கு மாகாணத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டதா?
அங்கு புனரமைப்புப் பணி நடந்து வருகிறது. கல்வியிலும் தீவிர கவனம் செலுத்து கிறோம். மீன்பிடித் தொழிலை அபிவிருத்திச் செய்ய, இந்தியா மிகவும் உதவி வருகிறது. வளர்ச்சிப் பணிகள் நடந்தாலும், உடனடியாக நிலைமை மாறிவிடும் என்று சொல்லிவிட முடியாது. 30 ஆண்டு இடைவெளி என்பது சாதாரணமானது அல்ல.மாற்றியமைக்க கடுமையாக உழைக்க வேண்டும். மக்களுக்கான உடனடி தேவைகளில் அதிக கவனம் செலுத்துகிறோம். வளர்ச்சியை மேற்கொள்வதிலும் கடும் சோதனைகளை கடக்க வேண்டியுள்ளது.
பணத்துக்காக, போதைப் பொருள் கடத்தலில் புலிகளுக்கு தொடர்பு உண்டா?
உண்டு. இது உலக அளவில் வியாபித்து இருக்கிறது. தமிழகமும் இதற்கு பயன்படுத்தப் படுகிறது. ஆப்கானிஸ் தான், கொலம்பியா போன்ற நாடுகளில் இருந்து போதைப் பொருட்களைக் கடத்துகின்றனர். இதில், தமிழகமும் மன்னார்வளைகுடாவும் முக்கிய கேந்திரம்.
தமிழக பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா?
இருக்கலாம். புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று அனைவருக்கும் தெரிந்த பின்னும், அந்த இயக்கத்தை ஆதரித்து பேசுவதற்கு, இதன் மூலம் புழங்கும் பணம் காரணமாக இருக்கலாம். ஆனால் அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
இலங்கை அதிபரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று தமிழகத் தலைவர் ஒருவர் கூறியுள்ளாரே?
இது வேடிக்கையான கோரிக்கை. இலங்கை ஒரு நாடு. தனித்தன்மை பெற்றது. உலக நாடுகள் பலவும் புலிகள் இயக்கத்தை தடை செய்தபிறகும், அந்த இயக்கம் பயங்கரங் களை அரங்கேற்றுவது தெரிந்தும், இலங்கை அரசு தடை செய்யவில்லை. இப்போது தான் தடை செய்துள்ளது. சமாதான தீர்வு ஏற்பட்டு, அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதற்காக வாய்ப்பு கொடுத்திருந்தது. பிரபாகரன் அதை பயன்படுத்தவில்லை.
தமிழகத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கும் தெரியும், ராஜிவ் காந்தியை கொன்ற பயங்கர வாதி பிரபாகரன் தான் என்று. இப்படிப்பட்ட நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் பட வேண்டியது ஒரு நாட்டின் அதிபரையா? பிரபாகரன் என்ற பயங்கரவாதியையா? தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.
புலிகள் போர்ப்படையில் சிறுவர்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறதே?
ஆரம்ப காலத்தில் இது நடைமுறையில் இல்லை. போர்க்களங்களில் சேதம் அதிகரித்த போது, படைக்கு ஆட்கள் அதிகம் தேவைப்பட்டனர். போரில் மக்களும் அதிகமாக மடிந்து போயினர். படையில் சேர யாரும் ஆர்வம் காட்டவில்லை. தயாராகவும் இல்லை.போர் தீவிரமான போது, அதை சந்திக்க ஆட்கள் தேவைப்பட்டனர். சிறுவர் -சிறுமியரை கட்டாயமாக படையில் சேர்க்க வேண்டியிருந்தது. 16, 17 வயது சிறுவர்- சிறுமியர் சேர்க்கப்பட்டனர். சர்வதேச அளவில் போராளிக் குழுவில் சேர வயது வரம்பு 19 ஆகவும், ராணுவத்தில் சேர 18 ஆகவும் சட்டம் உள்ளது. இந்த நடைமுறையை, புலிகள் ஒரு காலகட்டத்துக்குப் பின் கடைபிடிக்கவில்லை.
இப்படி சேர்க்கப்பட்ட, சிறுவர் -சிறுமியர் கிழக்கு மாகாணப் படையில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தால், இப்போது அவர்கள் நிலை என்ன?
இப்போது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்கின்றனர். வாழ்க்கையை எதிர்கொள் வதில் அவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. பெண்களுக்குத்தான் அதிக சிக்கல். அவர் கள் பல பிரச்னையை எதிர்கொள்ள வேண் டியுள்ளது. முற்றாக வேறு வாழ்க்கை தளத் தில் அவர்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது. சிக்கல்களை சமாளிக்க உளவியல் ரீதியான கவுன்சிலிங்கிற்கு யுனிசெப் நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தம் செய் துள்ளோம்.
இலங்கையில் மனித உரிமை மீறல் நடப்பதாக கூறப்படுகிறதே?
பயங்கரவாத பிரச்னை உலக அளவிலானது. இலங்கையில் மட்டும் இது இல்லை. புலிகள் ஓர் பயங்கரவாத அமைப்பு. இதற்கு தமிழகத்தில் இருந்து சிலர் ஆதரவு தெரிவித்து, குரல் கொடுத்துக் கொண்டிருந்த போதே, மும்பையில் பயங்கரவாதிகள் தாக்கினர்.
ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாலேயே, மற்ற பயங்கர வாதிகள் ஊக்கம் பெறுகின்றனர். பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியைத்தான் இலங்கை அரசு எடுத்து வருகிறது. இதை மனித உரிமை மீறல் என்று சொல்ல முடியாது. புலிகள் இயக்கத்தை தங்கள் பிரதிநிதியாக தமிழ் மக்கள் சொல்லவும் இல்லை.ராணுவ நடவடிக்கையின் போது, சேதத்தை தவிர்க்க இயலாது. மீறல்களை தடுக்கவும் முடியாது. முடிந்த அளவு குறைக்க அரசை வலியுறுத்தி வருகிறோம்.
உள்நாட்டுப் போர் எப்போது முடிவுக்கு வரும்?
காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. அது ராணுவத்தின் தந்திரத்தைப் பொறுத்து அமையும். புலிகள் தோற்கடிக்கப்படுவது நிச்சயம். புலிகளிடம் முறையான தலைமை இல்லை; ஆள்பலம் இல்லை; ஆயுதம் இல்லை.
பிரபாகரன் எங்கு இருப்பார்?
முல்லைத் தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தான் இருப்பார். அவரது பாதுகாப் புக்கு 1,000 போராளிகள் இருப்பார்கள். நிலப்பரப்பு சுருங்கும் போது, ராணுவ தாக்குதல் வலிமை பெறும். பிரபாகரன் தப்பமுடியாது.
வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அதிபர் அறிவித்துள் ளாரே?
தேர்தலில் நாங்கள் பங்கேற்போம். நாங்கள் தேசிய அளவில் பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறோம். தமிழர் சிங்களர், முஸ்லிம் மக்கள் ஆதரவுடன் பெரும்பான்மை இடத்தை பிடிப்போம்.
வடக்கில் புலிகள் தவிர வேறு குழுக்கள் இயங்குகிறதா?
அரசியல் கட்சிகள் உள்ளன. கூட்டமைப்பு புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக கத்திக் கொண்டிருக்கிறது. கத்தாவிட்டால் புலிகள் அவர்களைச் சுட்டுவிடுவார்கள். அங்கு நல்லத் தலைவர்கள் உள்ளனர். அவர்கள் விரைவில் தங்கள் செயல்திட்டத்தை மாற்றிக் கொண்டு சுதந்திரமாக இயங்க துவங்குவார்கள் என்று நம்புகிறேன்.
வடக்கில் ஆனந்தசங்கரி, டக்ளஸ்தேவானந்தா போன்றோர் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. காலப்போக்கில் நாங்களும் அந்தக் கூட்டமைப்பில் இணைய வாய்ப்பு உள்ளது. தமிழர்களின் வாழ்வில் அமைதியும் சமாதானமும் ஏற்பட வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.
உலக மக்களிடம் நீங்கள் வைக்கும் வேண்டுகோள்?
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் முன் னேற்றம் என்ற பெயரில் கோடி கோடியாக பணத்தை தமிழர்களிடம் பிரபாகரன் வாங்குகிறார். அந்த பணம் தமிழ் மக்கள் முன்னேற்றத்துக்கு செலவிடப்படவில்லை. அது பிரபாகரனின் வங்கிக் கணக்கிற்கும், ஆயுதம் வாங்கவும் தான் செல்கிறது.எனவே புலிகள் இயக்கத்துக்கு பணம் கொடுப்பதை நிறுத்த வேண்டும். போரில் சிதைந்து போன பகுதி புனரமைப்புக்கு உலக நாடுகள் உதவ வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் ஜாதியமைப்பு, போர்ச் சூழலால் சிதைந்துள்ளதா?
இலங்கை கிழக்கு மாகாணத்தில் ஜாதி தொடர்பான நெருக்கடி மிகவும் குறைவு. அதாவது வடக்குப்பகுதியில் 90 சதம் என்றால், இங்கு 5 சதவீதம் தான். யுத்தம், இடப்பெயர்வுகளால் பழைய அளவில் ஜாதிய அடக்கு முறை இல்லை. போர் முனையில் இருந்து தப்பி ஓடி முகாம்களில் தஞ்சம் அடையும் போது, அங்கு ஜாதி பார்த்துக் கொண்டிருக்கவா முடியும். ஆனாலும், முற்றாக ஒழிந்து விட்டதாகக் கூற முடியாது; யாழ்ப்பாணத்தில் உயர்ஜாதி என்று கூறிக் கொள்பவர்கள், பிரபாகரனைக் கூட ஜாதி ரீதியாக ஏற்றுக் கொள்வதில்லை.
கிழக்கு மாகாணத்தில் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் உண்டா?
கிழக்கில் மருத்துவ உதவி அதிகமாகத் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் எண்ணிக்கை குறைவு. சிங்கள டாக்டர்களை அழைத்து வருகிறோம். அப்படி வந்த டாக்டர் ஒருவரை புலிகள் சுட்டுக் கொன்றனர்.
அதேப் போன்று கிழக்கு மாகாண பல்கலையில் படித்த சிங்கள மாணவர் ஒருவரை புலிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர். இது போன்ற அட்டூழியங்களால் திட்டங்கள் செயல் படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். '83ம் ஆண்டு ராணுவ வீரர்கள் 13 பேரைக் கொன்றதால் தான் கலவரம் பரவியது. இன்று பல சம்பவங்கள் நடந்த போதும், பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. அதனால் தான் இந்த அரசை நம்புகிறோம். இதை புரிந்து கொண்டு, இணக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வளர்ச்சிப் பணிகளை திட்டமிட வேண்டியுள்ளது.
உங்கள் திருமண வாழ்வு பற்றி...
எனக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மனைவி படித்தவர். இயக்கத்தில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றிய போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். வெளிநாட்டில் வசிக்கின்றனர். திருமணம் முடிந்ததில் இருந்தே பிரிவு என்பது இயல்பாகத்தான் இருக்கிறது.
முதல் இரண்டு குழந்தை பிறந்த போதும் போர் முனையில் தான் இருந்தேன். பிறந்து ஆறு மாதம் கழித்துதான் அவர்களை பார்க் கும் வாய்ப்பு கிடைத்தது. பிரிந்து இருப்பது சாதாரணமானதுதான்.
புலிகளிடம் காதல் இருந்ததா?
நான் இயக்கத்தில் சேர்ந்த துவக்க காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. சட்டத்திட்டங்கள் மிகவும் இறுக்கமாக இருந்தன. அண்ணன் பிரபாகரன் காதல் வயப்பட்டு திருமணம் முடித்த போது, அந்த சட்டத் திட்டங்கள் மாற்றப்பட்டு, இயக்கத்துக்குள் காதல் மலர்ந்தது. ஆனாலும் இயக்கம் மிகவும் கட்டுப்பாடானது.
புலிகள் இயக்கத்தில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டனர்?
ராணுவ வசமாகியுள்ள ஆனையிறவு எப்போது புலிகளிடம் வந்தது?
ஆனையிறவு ராணுவ முகாமை என் தலைமையிலான படை 2000ம் ஆண்டு கைப்பற்றியது. வன்னியையும் குடா நாட்டையும் இணைக்கும் முக்கிய பகுதி என்பதால் இதை பிடித்து வைத்திருந்தோம். இப்போது ராணுவ வசமாகியிருப்பதால் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
புலிகளிடம் எத்தனை விமானங்கள் உள்ளன?
நான் இருந்த போது மைக்ரோ விமானங்கள் ஆறு இருந்தன. அவற்றை இயக்குவதற்கு பெரிய ஓடுதளம் தேவையில்லை. சாதாரணமாக ரோட்டில் கூட ஓட்டி பறக்கலாம். கடைசி கட்டமாக விமானங்களில் பறந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. மூன்று சிறிய டேங்குகளும் இருந்தன. அவற்றை பயிற்சிக்காக மட்டும் பயன்படுத்தினோம்.
துப்பாக்கியும் குண்டும் ஓயாமல் முழங்கிய போர்முனையில் இருந்த நீங்கள், இப்போது எப்படி உணர்கிறீர்கள்?
மாற்றம் ஒன்றும் பெரிதாக இல்லை. அப்போது ராணுவத்தை எதிர்த்து போரிட்டோம். இப்போது அதே ராணுவ வீரர்களின் அதிநவீன துப்பாக்கிகளுக்கு நடுவில் பாதுகாக்கப்படுகிறேன். இரண்டும் இருவேறு அனுபவங்கள். போர்க்களத்தில் எல்லா ரக துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் கையாண்டவன் நான்.
மிகவும் ஒல்லியாகத்தான் இருப்பேன். எங்களிடம் இருந்தது வலிமை குறைந்த படை. அந்த படையை பயன்படுத்தி வெல்ல வேண்டும். இதற்கு தந்திரங்களை கையாண்டேன். அறிவியல் பூர்வமாக சிந்தித்து, படைகளை எதிர்கொண்டு வென்றோம். வீரர்களிடம் எளிமையாக பழகுவேன். என்னை அம்மான் என்று அழைப்பார்கள்.
அம்மான் என்றால் யாழ்ப்பாணத் தமிழர்கள் பயன்படுத்தும் கவுரவமிக்க வார்த் தை. பிரபாகரனை அண்ணன் என்போம். அவரது பெயரை ரகசிய குறியீடாக எச்.ஏ., என்று அழைப்பார்கள். அந்த பெயரில் தான் ரகசிய தகவல்கள் வரும்.
தமிழகத்தில் இருந்து என்னவிதமான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழகத்தில் சிலர் புலிகளுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். தமிழ் இனம் பூண்டோடு அழிந்துவிடும் என்று சொல்கின்றனர். இப்படியெல்லாம் பேசுவோர், உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு, பல்லாயிரம் தமிழர்கள் தமிழகத்தில் அகதியாக தஞ்சம் புகுந்திருக்கின்றனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை; கல்வி இல்லை; சுகாதாரம் இல்லை. உங்களைத் தேடி ஓடிவந்திருக்கும் எங்கள் மக்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்துங்கள். அவர்களின் கல்விக்கு உதவுங்கள். எந்த தலைவராவது அவர்களின் நிலைமை யோசித்துப் பார்த்திருப்பீர்களா?
அவர்களின் வாழ்நிலையை நேரில் சென்று ஆய்வு செய்து அதற்காக அரசிடம் குரல் கொடுத்திருக்கிறீர்களா? அவர்களும் இலங்கைத் தமிழர் தானே. அவர்களின் வாழ்க்கைக்காக நிதி திரட்டுங்கள். உயர்வு படுத்துங்கள். நன்றியுடன் உங்களை நினைவு கூர்வோம்.
தமிழகத்தில் இருந்து பலர் கள்ளத்தோணியில் இலங்கையில் தமிழர் பகுதிக்கு வந்து சென்றுள்ளனர். இந்திய அமைதிப்படையுடன் புலிகள் சண்டைப் போட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், அந்த நாட்டில் இருந்து கொண்டே, அந்த நாட்டுக்கு எதிராக கள்ளத்தனமாக வந்து சென்றீர்கள். அதை விடுவோம்.
பிரபாகரன் செய்யும் பொய் பிரசாரத்தை நம்புகிறீர்கள். இங்கு என்ன நடக்கிறது என்பதை கண்திறந்து பாருங்கள். புலி ஆதரவு கோஷத்தை விடுத்து, உண்மை நிலையை புரிந்து கொண்டு அமைதிக்கு குரல் கொடுங்கள். போரால் சிதைந்து போன பகுதிகளை கட்டி எழுப்ப உதவுங்கள். பின் தங்கிய பகுதிகளில் தொழில் துவங்கி, வளர்ச்சிக்கு வித்திடுங்கள்.
போர் முடிவுக்கு வந்தால் அமைதி திரும் புமா? அதை அனைவரும் ஆதரிப்பார்களா?
அமைதி திரும்பும். அதை அனைவரும் ஆதரிப்பார்களா என்று சொல்ல முடியாது. தனி அதிகாரம், தனி நாடு என்று வறட்டு கவுரவம் பிடித்து வெளிநாடுகளில் வாழும் பல தமிழர்கள் பேசக்கூடும். இங்கே இருப்பவர்களில் சில தலைவர்கள் கூட கவுரவம் பார்க்கலாம்.அவர்களுக்கு இங்குள்ள நிலைமை தெரியாது. அவர்கள் இங்கு வரப் போவதும் இல்லை.
அவர்கள் வசதியான வாழ்க்கை அமைத்துக் கொண்டு மேற்கத்திய கலாசாரத்துடன் இணைந்து கொண்டவர்கள். இங்கு வாழும் ஏழை, எளிய மக்களைப் பற்றி நாங்கள் சிந்திக்கிறோம். அதனால் அவர்களின் பேச்சு எடுபடாது. இலங்கையில் அமைதி திரும்பி தமிழர் வாழ்வு மலரும்.இவ்வாறு கருணா அம்மான் பேட்டியளித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment