கருணாநிதியும், திருமாவளவனும் சேர்ந்து இலங்கை பிரச்சினையை வைத்து நாடகம் - சாடுகிறார் ஜெயலலிதா
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக முதல்வர் கருணாநிதியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் திருமாவளவனும் சேர்ந்து நாடகமாடுகின்றனர்"
- இவ்வாறு அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளவை வருமாறு:-
தமிழகத்தில் தற்போது நிலவும் முக்கியப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக முதல்வர் கருணாநிதியும், திருமாவளவனும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் உண்ணாவிரதப் போராட்டம்.
இந்தப் போராட்டத்தால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. தமிழகத்தில் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்தியதும் தமிழகத்தில் உள்ள மக்களை அச்சுறுத்திக் காயப்படுத்தியதும்தான் இந்தப் போராட்டத்தின் பலன்கள்.
நான்கு நாள்களாக பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் முடிந்த பிறகு, "தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்" - என்று பொலிஸ்துறை அறிவித்தது. இதிலிருந்தே இதற்குப் பின்னணியில் தி.மு.க இருப்பது தெளிவாகியுள்ளது.
ஐந்து லட்சம் இலங்கைத் தமிழர்கள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக புத்தாண்டு கொண்டாடினார் முதல்வர் கருணாநிதி. இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாறக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
0 விமர்சனங்கள்:
Post a Comment