வன்னி எறிகணைவீச்சில் அமெ.-இலங்கை திருச்சபை மதகுரு காயம்
வன்னியில் தொடரும் எறிகணை வீச்சு மற்றும் விமானத் தாக்குதல்களினால் சுதந்திரபுரத்திலுள்ள அமெரிக்கன் இலங்கை திருச்சபையின் தேவாலயம் சேதமடைந்துள்ளதோடு - மதகுரு ஒருவர் உட்பட அங்கு தங்கியிருந்த சிலர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முருகண்டி பிரதேச பங்குத் தந்தையான அருட்திரு எஸ்.ஐ.ஆனந்தராஜா என்பவரே காயமடைந்த மதகுரு என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் இவர் அழைத்து வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. , நேற்றிரவு இடம்பெற்ற எறிகணை வீச்சுத் தாக்குதல்களின் போது இரண்டு கால்களிலும் படுகாயமடைந்த இவருக்கு இன்று காலை இடம்பெற்ற விமானத் தாக்குதலிலும் வயிற்றில் காயமேற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்கன் இலங்கைத் திருச்சபை, தங்கள் பராமரிப்பிலுள்ள மூன்று சிறுவர்களும் இந்த தாக்குதல்களின் போது காயமடைந்துள்ளதாகத் தெரிவித்திருக்;கின்றது.
அதே வேளை, வன்னியில் யுத்த சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினால் மட்டும் போதாது, சகல தரப்பினரும் பேதங்களை மறந்து யுத்த நிறுத்தமொன்றுக்கான அழுத்தத்தைக் கொடுக்க முன்வர வேண்டும் என அமெரிக்கன் இலங்கை மிஷன் தலைவரான அருட்கலாநிதி எஸ். ஜெயநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆரம்பித்துள்ள நிவாரணத் திட்டத்திற்கு ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை இன்று மாநகர முதலவர் சிவகீத்தா பிரபாகரனிடம் கையளித்த பின்பு இக்கருத்தை அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார். வன்னியில் யுத்த சூழ்நிலை காரணமாக தொடரும் உயிரிழப்புகள் மற்றும் காயமடைதல் தொடர்பான செய்திகள் நாளாந்தம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது வேதனையைத் தருகின்றது. இந்த நிகழ்வு இடம்பெறுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு எமக்கு கிடைத் தகவலின்படி எமது தேவாலயமொன்று சேதமடைந்துள்ளது. மதகுரு ஒருவரும் எமது பராமரிப்பிலிருந்த மூன்று சிறார்களும் காயமடைந்துள்ளார்கள் எனத் தெரிகிறது.
இதனைத் தவிர அங்கு தங்கியிருந்த சிலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment