விதவையான வெள்ளைத்தாள்...
உண்மைக்குத் திரையும்
பேனாக்களுக்கு
தடையும் போட்டாயிற்று...!
கைவிலங்குகளில்
தூக்குப் போடும் கரங்கள்.
முகவுரை எழுத முன்னமே
முடிவுரை கேட்கும்
அரசியல்
இப்படித்தான் இங்குள்ள நிலைமை ...
எங்கள் தாள்கள்
வெள்ளையாக இருப்பதையே
இவர்கள் விரும்பித் தொலைக்கிறார்கள்
மீறி எழுதினால்
எங்களின் தாலிக்குரியவர்கள்
வெள்ளைச் சேலையிலே உலாவருவார்களென
சபிக்கிறார்கள்.
குற்றங்களைக் காட்டலாம்
ஆனால்
குற்றவாளிகளை சுட்டக்கூடாது
தவறினால்
மைக்குப் பதிலாக பேனாக்களின் வாய்கள் இரத்தமே சிந்தும்.
கலீலியோ போலவே
சரியானதை பிழையென்று ஏற்கும்
பெருந்தன்மை இங்கே தேவையாயிருக்கிறது.
இல்லையெனின்
பேனாவுக்குள்ளே ஊற்றப் பட்டிருக்கும்
உயிர்க் காற்று
வெளியே கசிந்துவிடுகிறது....
மட்டுவில் ஞானக்குமாரன்
0 விமர்சனங்கள்:
Post a Comment