பிரபாகரன் ஜனநாயக நீரோட்டத்தில் இணைய இதுவொரு நல்ல சந்தர்ப்பம் -கருணா அம்மான் எம்.பி
புலிகள் இயக்கத்தினரால் அரச படைகளை ஒருபோதுமே வெல்ல முடியாது. அதனால் ஆயுதங்களைக் களைந்து விட்டு புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுவதே புத்திசாலித்தனமானது. இவ்வாறு விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணாஅம்மான்) எம்.பி தெரிவித்துள்ளார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் கடந்த வெள்ளியன்று அரச தைப்பொங்கல் விழாவில் பங்கேற்ற போதே முரளிதரன் எம்.பி செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவை முழுமையாக மீட்க அரசபடைகள் முன்னேறி செல்கின்ற நிலையில் புலிகள் 40கிலோமீற்றர் சதுரபரப்பில் முடக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு இப்போது தேர்ந்தெடுக்கக் கூடிய ஒரேயொரு வழிமுறை ஆயுதங்களை முழுமையாக அரச படைகளிடம் ஒப்படைத்து விட்டு சரணடைவதாகும். இவ்வாறு செய்வதன் மூலம் புலிகளால் துன்புறும் மக்களுக்கு விமோசனம் கிடைக்கப் பெறுவதுடன் ஜனநாயக நீரோட்டம் புலிகளுக்கு வாழ்விடம் வழங்கும். இப்போது அரசபடைகள் தரைமார்க்கமாக முன்னேறி புலிகள் தேடி வலை விரித்துள்ளனர். முல்லைத்தீவு காட்டுக்குள் முடக்கப்பட்டு இருக்கும் இவர்கள் அரச படைகளிலிருந்து விடுதலைபெற வேண்டுமானால் அவர்கள் சாதுரியமாக இயங்க வேண்டிய சூழ்நிலை அவர்களை எதிர்நோக்கியுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை தவறவிடும் பட்சத்தில் பிரபாகரனின் உயிருக்கு உலை வைக்கப்படும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கிடையாது.
நான் ஒரு பெரும் பிராந்தியத்திற்கு இராணுவப்பிரிவு தளபதியாக இருந்தேன். அந்நிலையில் எமது சக்தியின் பலவீனத்தையும் உணர்ந்திருந்தேன். அதனால் புலிகள் அரசை ஒருபோதும் வெற்றி கொள்ள முடியாது என அன்று உணர்ந்து கொண்டேன். இதன் பொருட்டு பிரபாகரனால் மேற்கொண்டு வரும் கடும் போக்குகளை ஆட்சேபித்து இதற்கு இணங்குமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன். என்றாலும் அவர் எவரையும் மதிப்பதாக தெரியவில்லை. எனவே அவரிடமிருந்து நான் ஒதுங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது பிரதேச மக்களும் இந்த யுத்த நடவடிக்கைகளை விரும்பவில்லை. இதனையடுத்து எமது மக்களின் நன்மை கருதி நான் இந்த அமைப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் மேலும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment