புலிகள் ஆயுதங்களைக் கைவிடத் தயார் என்று இந்தியத் தலைவர்களுக்கு அறிவிப்பின் யுத்த நிறுத்தம் குறித்து அரசு சிந்திக்கும்
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு தாங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் இணையத்தயார் என்று இந்திய அரசியல் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தால், அரசாங்கம் அவர்களுடன் யுத்த நிறுத்தம் செய்வது குறித்துச்சிந்திக்கும்.
இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்தராஜபக்க்ஷ. இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு யுத்த நிறுத்தத்தில் உண்மையில் ஆர்வம் இருந்தால், ஆயுதங்களைக் கைவிடுமாறு விடுதலைப் புலிகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் கருணாநிதியும் இலங்கை அரசும் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் ஆயுதங்களைக்களையலாம் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் மேலும் ஜனாதிபதி தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி இலங்கைக்கு நேரில் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வடக்கு கிழக்கில் உள்ள உண்மை நிலையை கண்டறிய வேண்டும். விடுதலைப் புலிகளால் மனிதக் கேடயமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 2 லட்சம் மக்களை விடுவிக்குமாறு அவர்களிடம் கோரவேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாண மக்கள், கிழக்கு மாகாண, மலையக மக்களை நேரில் சந்தித்து அவர்கள் இந்த நாட்டில் எவ்வளவு கௌரவமாக வாழ்கிறார்கள் என்பதைப் பார்க்குமாறு நான் தனிப்பட்ட அழைப்பை ஏற்கனவே விடுத்துள்ளேன்.
நான் பெருமதிப்பு வைத்துள்ள மூத்த அரசியல்வாதியான கருணாநிதி தாம் விரும்பினால் தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் குழுவொன்றையும் இலங்கைக்கு அழைத்து வரலாம்.
உலகில் மிகவும் மதிக்கப்படும் தமிழ்த் தலைவர் என்ற வகையில், கருணாநிதி, விடுதலைப் புலிகள் தமது பிடியில் வைத்திருக்கும் இரண்டு லட்சம் மக்களை விடுவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
பொதுமக்கள் அப்பகுதிகளிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பதற்காக விடுதலைப் புலிகள் அணைக்கட்டுக்களைக் கூட உடைக்கின்றனர்.
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவிற்கும் நேரில் விஜயம் செய்து இலங்கை நிலைவரத்தைப் பார்வையிடுமாறு அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment