பரந்தனை இராணுவத்தினர் கைப்பற்றிவிட்டனராம்: பாதுகாப்பு அமைச்சு
பரந்தனை இராணுவத்தின் விசேட படையணி-1 இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடன் நடந்த கடுமையான மோதல்களின் பின்னர் பரந்தனைக் கைப்பற்றியிருப்பதாகவும், பரந்தன் நகரைக் கைப்பற்றுவதற்கான கடும் மோதல்கள் செவ்வாய்க்கிழமை காலையில் ஆரம்பமானதாவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் ஏ-9 வீதியின் வடக்கு, கிழக்குப் பகுதி ஊடாக பரந்தனுக்குள் நுழையும் பாதைகளையும் துண்டித்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து 4.5 கிலோ மீற்றர் தூரத்தில் பரந்தன் அமைந்துள்ளது.
பூநகரியைக் கைப்பற்றியதன் பின்னர் பரந்தனைக் கைப்பற்றும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் ஆரம்பித்திருந்தனர். விசேட படையணி-1ன் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஷிவேன்ர சில்வா தலைமையிலான குழு முதலில் பரந்தனுக்குள் நுழைந்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பரந்தன் கைப்பற்றப்பட்டதாக இராணுவத்தினர் அறிவித்திருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அறிவுப்புக்களும் விடுக்கப்படவில்லை.
0 விமர்சனங்கள்:
Post a Comment