விசுவமடு, புதுக்குடியிருப்பு காடுகளினுள் படையணிகள் புகுந்து புலிகளுடன் கடும் சமர்
முல்லைத்தீவில் விசுவமடு மற்றும் புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ள படையணிகள் விடுதலைப் புலிகளுடன் கடும் சமரில் ஈடுபட்டுவருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவில் விசுவமடுப் பிரதேசத்தினுள் தற்போது படையினர் பிரவேசித்துள்ளதாக 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சபேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் விசுவமடுப்பிரதேசத்தைக்கைப்பற்றுவதற்காக முன்னோக்கிச் செல்கின்றனர். முரசு மோட்டை மற்றும் தர்மபுரம் பகுதிகளில் 58 ஆவது படைப்பிரிவினர் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
பரந்தன் முல்லைத்தீவு வீதியில் (ஏ35 ) இராணுவத்தினர் 11 கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்னேறியுள்ளனர். அடுத்த சில தினங்களில் விசுவமடுவை படையினர் கைப்பற்றிவிடுவார்கள் எனவும் பிரிகேடியர் சில்வா தெரிவித்தார்.
விசுவமடுவில் மற்றுமொரு விமான ஓடு பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதையிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் இராணுவத்தினர் தற்போது நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேநேரம் பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமையிலான 59 ஆவது படைப்பிரிவினர் புதுக்குடியிருப்பின் தென் பிரதேசக் காட்டுப் பகுதிக்குள் பிரவேசித்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்றும் , படகு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் படையினரால் கைப்பற்றப்பட்டன. விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஏழு பேரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன அத்துடன் ரி 56 ரக துப்பாக்கிகளும் ரவைகளும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதுக்குடியிருப்பில் இருந்து ஆறு கிலோமீற்றர் தெற்கே படையினர் தமது நிலைகளைப்பலப்படுத்தி வருகின்றனர்.
14 ஆவது கஜபாகு படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் மருதம்பு பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமைக்கைப்பற்றியுள்ளனர். இங்கு ஆறு பதுங்கு குழிகள், இரண்டு நிரந்தர கட்டிடங்கள், ஆறு தற்காலிக குடிசைகள் என்பவற்றையும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
நான்காவது கஜபாகு பிரிவைச் சேர்ந்த இராணுவத்தினர் மருதம்புவிற்கு வடக்கே விடுதலைப்புலிகளின் படகு கட்டும் தொழிற்சாலை ஒன்றை சனிக்கிழமை இரவு கண்டுபிடித்துள்ளனர்.
இங்கிருந்து இரு வேகப் படகுகளும் இரண்டு "வாட்டர் ஜெற்களும்' தற்கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் 7 படகுகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment