ஒபாமாவின் உரைகள் அடங்கிய தொகுப்பு ஜப்பானில் பாடநூலாக உருவாக்கம்
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உரைகள் அடங்கிய புத்தகத் தொகுப்பு ஜப்பானில் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கான பாடநூலாக மாறியுள்ளது.
ஒபாமாவின் பேச்சுகளில் எளிதான நல்ல ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதுடன், அவை மக்களைக் கவரக் கூடிய வகையில் அமைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.
இரண்டு மாதங்களில் நான்கு இலட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன. ஜப்பானியர்கள் மத்தியில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆர்வம் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்வதற்காக அதைப் பாடமாக எடுப்பவர்களும் உள்ளனர்.
இதற்காக புத்தகக் கடையில் ஆங்கில மொழி புத்தகங்களுக்கென தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் பொதுவாக பெரிதும் பிரபலமடைந்த நாவல்கள் 10 இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாவது வழக்கம். தற்போது, ஒபாமாவின் உரைகள் அடங்கிய புத்தகம் இரண்டே மாதங்களில் நான்கு இலட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகி பெரும் சாதனை படைத்துள்ளது.
ஜப்பானில் ஆங்கில மொழியைப் பாடமாக எடுப்பவர்கள் ஒபாமாவின் பேச்சுகள் அடங்கிய தொகுப்பு புத்தகத்தையே கற்றுக்கொள்வதற்காக தேர்வு செய்கின்றனர். தற்போது, பெரும்பாலான புத்தகக்கடைகளில் ஆங்கில மொழிப்பிரிவு புத்தகங்களில் ஒபாமாவின் படம் அச்சிடப்பட்டு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
"அமெரிக்க ஜனாதிபதிகள் ஜனாதிபதி வேட்பாளர் பேச்சுகள்' என்ற தலைப்பிலும் புத்தகங்கள் உள்ளன. இவற்றை ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் ஜப்பானியர்கள் விரும்பி வாங்குகின்றனர்.
""ஒபாமாவின் ஆங்கில உரைகள் என்னைக் கவர்ந்ததைப் போலவே மற்றவர்களையும் கவரும் என்று எதிர்பார்த்தேன். எனது எதிர்பார்ப்புக்கு மேலாக அதிகளவில் இந்தப் புத்தகம் பாடநூலாக மாறியுள்ளது' என்று கூறினார் இதைத் தயாரித்த யுசோ யமமோ மோட்டோ.
0 விமர்சனங்கள்:
Post a Comment