இலங்கையில் மனித உரிமை மீறல்களை நிறுத்துமாறு பிரிட்டன் அரசு கோரிக்கை
இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என பிரிட்டன் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
யுத்தத்தில் ஈடுபட்டுவரும் சகல தரப்பினரும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது இன்றியமையாததென பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபேட் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையில் சகல இன மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஓர் தீர்வுத்திட்டமொன்றும் முன்வைக்கப்படவேண்டும்.
இலங்கையில் கடத்தல்கள், காணாமல்போதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றவண்ணமுள்ளன.
மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன கண்காணிப்புகள் இன்றி இலங்கையின் உண்மை நிலைவரத்தை அறிந்துகொள்வதில் சிக்கல்கள் காணப்படுகின்றது.
மனித உரிமை மீறல்களை தடுக்கவும் உரிமை மீறல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கடந்த சில வாரங்களில் முக்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன் இவ்வாறான தாக்குதல்களை பிரித்தானிய அரசாங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது.
குறிப்பாக கடந்த 8ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைச் சம்பவம் கண்டிக்கத்தக்கதெனத் தெரிவித்தார்.
மேலும், லசந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என டேவிட் மிலிபேட் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment