கிளிநொச்சி வீழ்ந்ததன் பின்னால்
கிளிநொச்சி புலிகளின் வசமிருந்து அரசாங்கத்திடம் வீழ்ந்துவிட்டது. 10 வருடங்களின் பின் அரச கட்டுப்பாட்டுள் கொண்டுவரப்பட்ட வெற்றிக் களிப்பில் அரசாங்கம் மூழ்கியுள்ளது.
அந்த வெற்றியைக் கொண்டாடுமாறு அரசாங்க தரப்பு நாட்டு மக்களிடம் வேண்டுதலையும் விடுத்தது. ஆளும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தனது கிளைகள் ஊடாக பட்டாசுகளை விநியோகித்து தனது ஆதரவாளர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பரிப்புக்களை மேற்கொண்டது.
தெற்கில் ஆளும் கட்சிக்கு எதிரான கட்சிகளும் இந்த வெற்றிக் களிப்பில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். தேசம் என்பதற்கு அப்பால் கிளிநொச்சி வெற்றி என்பது தமிழ்த் தேசியத்தை சிங்கள தேசியம் வெற்றி கொண்டதான ஒரு இறுமாப்பை மஹிந்த அரசாங்கம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சிங்கள தேசியத்துள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்லது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு எதிரானவர்களும்; தம்மை இணைத்துக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
ஏன் கடந்த காலங்களில் வடக்கில் இருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்ட பின்பும் கூட இனப்பிரச்சனையில் ஒரு யதார்த்த நிலையைப் பின்பற்றிய றவூவ் ஹக்கீமின் முஸ்லீம் காங்கிரஸ் கூட இந்த சிங்கள தேசியவாத போர் ஆர்பரிப்பிற்குள் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாத துர்ப்பாக்கியம். தென்னிலங்கைக் கட்சிகள் பலவும் விடுத்த அறிக்கைகள் போல் முஸ்லீம் காங்கிரசும் தனது பிரதி செயலாளர் நிஸாம் காரியப்பர் மூலம் ஓர் அறிக்கையை விடுத்தது.
'வீரமிக்க எமது படைவீரர்கள் கிளிநொச்சியை கைப்பற்றுவதனை எவராலும் தடுத்திருக்க முடியாது. இந்த வெற்றியை ஈட்டுவதற்கு அரச படையினரும், அப்பாவிப் பொதுமக்களும் ஈடு இணையற்ற தியாகங்களை மேற்கொண்டுள்ளனர.; யுத்த வெற்றிகளுக்காக சாதாரண மக்கள் பல்வேறு வகையில் கஸ்டங்களை எதிர்நோக்கியதாகவும், பொருளாதார ரீதியான அழுத்தங்களை தாங்கிக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.'
காரணம் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள அந்தக் கட்சி தனது கூட்டையும் வாக்காளர்களையும் திருப்திப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இது போன்று தெற்கின் ஆர்ப்பரிப்பில் புதிதாக இன்னும் பல கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன.
அத்துடன் கடந்த சமாதான காலத்தில் இருந்து நாட்டின் சுபீட்சம், சிறுபான்மையினரின் உரிமைகள், அமைதி, சமாதானம் எனப் பேசி வந்த பல சிங்கள முற்போக்காளர்கள், இடதுசாரிகள், ஊடகவியலாளர்கள், சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரபலங்கள் என எல்லோரும் கிளிநொச்சியின் வீழ்ச்சியின் பின் உடம்பில் ஊறியிருந்த இனவாதத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
கிளிநொச்சியின் இந்த வீழ்ச்சியானது ஒரு தேசத்திடம் இருந்து இன்னொரு தேசம், இழந்த தனது பகுதியை மீட்டதான ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இதேபோன்று முன்னர் ஆனையிறவு உள்ளிட்ட வன்னிப் பெருநிலப்பரப்பு விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட போதும் ஒரு தேசத்திடம் இருந்து ஒரு பிராந்தியம் விடுதலை பெற்றதான உணர்வு ஏற்படுத்தப்பட்டு அவை வெற்றிக் களிப்பாக வெளிப்படுத்தப் பட்டன. அடிப்படையில் அரை நூற்றாண்டு காலமாக நிலவிவரும் இனத்துவ முரண்பாடு கடந்த 3 தசாப்த காலமாக ஆயுத மோதலாக மாற்றம் பெற்றதுடன் இரு தேசங்கள் என்ற உணர்வு நிலை இரு இனங்களிடையேயும் ஊறிப் போய் இருப்பதனை எவரும் மறுத்து விட முடியாது.
இவ்வாறு இரண்டு பிரதான இனங்களிடையே காலா காலமாய் ஏற்படுத்தப்பட்டுள்ள அல்லது ஏற்பட்டுள்ள இனத்துவ அடிப்படையிலான முரண்பாடுகளை இலகுவாக ஒழிக்க முடியும் என்பதோ அல்லது இல்லாது போய்விடும் என நினைப்பதோ வரலாறு என்பது இல்லை என்பதற்குச் சமனானது.
இலங்கையில் அரை நூற்றாண்டாக தொடரும் இந்த இன முரண்பாடும் அதனை ஒட்டிய ஆயுதப் போராட்டமும் அந்தப் போராட்டம் சார்ந்து ஏற்பட்டுள்ள அக புற சூழ்நிலைகளையும் வெறுமனே நிலம் சார்ந்து பொருள் சார்ந்து அல்லது போராட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களின் உயிர் சார்ந்து மட்டும் குறுக்கி விட முடியாது. அது ஒரு இனத்தின் மொழி, கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களோடு கூடிய வாழ்வுரிமைக்கான உணர்வு நிலைப்பட்ட வாழ்வியலாக மாறிவிட்டது.
அந்த வகையில் ஒரு இனத்தின் அடையாளத்தை அதன் வாழ்வுரிமைக்கான வாழ்வியலை அதற்கான கோரிக்கைகளை நிறைவேற்றாதவிடத்து நிலங்களைக் கைப்பற்றுவதும் சொத்துக்களை அழிப்பதும் ஒரு அமைப்பின் உறுப்பினர்களைக் கொல்வதும், அல்லது இது போன்ற அழிப்புக்களை மேற்கொள்வதும் ஒரு தற்காலிக வெற்றியாகவே அமையும்.
ஏற்கனவே அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. யாழ் மாவட்டம் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது. இது போன்று வவுனியா, மன்னார் நகரங்களும் அதை அண்மித்த பகுதிகளும் அரச கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால் இந்தப் பிரதேசங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் அரசாங்கம் அந்த மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கின்றதா? யாழ்ப்பாணம் இன்று திறந்தவெளிச் சிறைச்சாலை என்று கூறப்படுகின்றது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் என்று மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு படையினர் அந்தக் குடு;ம்பத்தை வற்புறுத்துவதாக குடும்பத்தினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இன்று (ஜன4) முறையிட்டுள்ளனர். கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றியதனை பட்டாசு கொழுத்திக் கொண்டாட வேண்டும் என படையினர் யாழ் வர்த்தகர்களையும் மக்களையும் வற்புறுத்தி உள்ளனர்.
அரசுக் கெதிரான படையினருக்கெதிரான அல்லது ஆளுங்கட்சியில் இருப்பவர்களுக்கெதிரான செய்திகளை பிரசுரிக்க வேண்டாம் என யாழ் ஊடகங்கள் படையினரால் மறைமுகமாக மிரட்டப்படுகின்றனர். உயிருக்கஞ்சி சரணடைபவர்களால் யாழ்ப்பாணச் சிறைச்சாலை நிரம்பி வழிகின்றது. அது மட்டுமா நாளும் பொழுதும் சந்தேகம் என்ற போர்வையில் கடத்தப்பட்டும் காணாமல் போயும் கொல்லப்பட்டுமுள்ள யாழ் இளைஞர்கள் யுவதிகளின் எண்ணிக்கை 2 வருடத்தில் 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
2009 ஆம் ஆண்டின் முதலாவது உயிர் இன்று (ஜன4) வவுனியாவில் பறிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில��
� இருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்தவர்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகின்றனர். தனிப்பட்ட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு அவர்களது நடமாட்டங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. வவுனியாவில் கடந்த சில நாட்களாக மீண்டு;ம் சடலங்கள் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளன.
மறுபுறம் கிழக்கு விடுவிக்கப்பட்டு அங்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் மாகாண சபை ஒப்படைப்பட்டதாக அரசாங்கம் கூறுகின்றது. தன்னுடைய கட்சியின் சின்னத்துக்குள்ளேயே போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட சிறுபான்மையின முதலமைச்சரிடமும், பிரதிநதிகளிடமும் அதிகாரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இன்றும் தயங்குகின்றது.
கிழக்கின் முதலமைச்சரில் இருந்து அமைச்சர் ஹிஸ்புல்லா வரை தமது மாகாணத்தில் உள்ள ஒரு கல்லைப் புரட்டுவதற்குக் கூட தமக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள். அவர்கள் அரசாங்கத்தின் விருப்பத்தை அல்லது ஆளும் தரப்பின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்க��
�். இவ்வாறானதொரு நிலைமைகள் தொடர்கின்ற போது அவற்றை நிவர்த்திப்பதற்கான அல்லது அனைத்துக்குமான அரசியல் தீர்;வை முன்வைப்பதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதை விடுத்து புலிகள் வீழ்த்தப்படுகின்றார்கள். கிளிநொச்சி வீழ்ந்து விட்டது என எனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனம் பிழையாக வேண்டும் என எம்மவர்கள் பலரும் ஆளும் அரசாங்கத்துடன் இணைந்து ஆர்ப்பரிக்கின்றார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றுத் தவறுகள் தயவு தாட்சன்மியம் இன்றி விமர்சிக்கப்பட வேண்டியவை. சுட்டிக் காட்டப்பட வேண்டியவை. அவை அமைப்பியல் சார்ந்து அரசியல் சார்ந்து ராணுவ தந்திரோபாயம் சார்ந்து மீள் பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
ஆனால் ஒரு அமைப்பின் தவறுகள் அல்லது அந்த அமைப்பின் மீதான விமர்சனங்கள், வாதப்பிரதிவாதங்கள், காள்புனர்வுகள் என்பன இன்று ஒரு இனத்தின் உரிமைக் கோரிக்கை மீதான, அந்த இனத்தின் அபிலாசைகள் மீதான, வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் மீதான தவறுகளாகவும், விமர்சனங்களாகவும், காள்புனர்வுகளாகவும், எதிர்ப்புகளாகவும் வெளிக்கிளம்பியுள்ளமை ஆபத்தானது என்பதனை எவரும் புரிந்து கொள்வதாக இல்லை.
அதனால் இங்கே ஒரு கேள்வி எழுகின்றது. கிளிநொச்சியின் வீழ்ச்சி என்பது ஒரு பிரதேசத்தின் வீழ்ச்சியாக அல்லது விடுதலைப் புலிகளின் பலவீனமாகக் கருதப்படுவதற்கு அப்பால் ஒரு இனத்தின் வீழ்ச்சியாக அவ்வினத்தின் வாழ்வியலின் வீழ்ச்சியாக வாழ்வுரிமைக் கோரிக்கைiயின் வீழ்ச்சியாக கட்டியெழுப்பப்படுகிறது என்ற ஆபத்தினை நாம் புரிந்து கொளகிறோமா ?
ராஜா பரமேஸ்வரி






0 விமர்சனங்கள்:
Post a Comment