''தம்பி இருக்குமிடம் தமிழீழம்!''
ஈழத்தில் 25 நாட்கள் பயணம் செய்த நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அனுபவம் பற்றிக் கூறுகிறார்...
கொழும்பிலிருந்து யாழ் தேவி ரயில் மூலம் புறப்பட்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது, எங்கு பார்த்தாலும் புலிக்கொடிகள் கம்பீரமாகப் பறந்துகொண்டு இருந்தன. வன்னித் தளபதி ஜெயம், கிளிநொச்சித் தளபதி ரத்தன் ஆகியோர் என்னை வரவேற்று அழைத்துச் சென்றனர். ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடையில் 'இது வேங்கைகள் விளையும் நாடு' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
கிளிநொச்சியில் என் பழைய நண்பர் நாதன் வீட்டுக்குச் சென்றேன். அங்கு உணவருந்தி விட்டுப் பிறகு பயணமானேன். மூன்று இடங்களில் கார்களும் காவலர்களும் மாற்றப்பட்டனர். அந்தி மயங்கும் வேளையில், ஒரு கானகத்தின் வெளிப் புறத்தை அடைந்தோம். அங்கிருந்து சில மைல்கள் நடந்து சென்று புலிகளின் முகாம் ஒன்றினை அடைந்தோம். அங்கு இரவு தங்கிவிட்டு காலையில் புறப்பட்டு 'தம்பி' பிரபாகரன் இருக்கும் முகாமுக்குப் போகலாம் என, அன்பு என்ற விடுதலைப்புலி கூறினார்.
'ராமன் இருக்கும் இடம் அயோத்தி' என்பார்கள். அதைப் போல 'தம்பி இருக்கும் இடம் தமிழீழம்' என்பதை அந்தக் காட்டில் நான் கண்டேன். சூரிய ஒளி புகுவதற்குத் தயங்கும் அந்த அடர்ந்த காட்டில் மற்ற தோழர்களுடன் பிரபாகரனைச் சந்திக்க நான் நடந்து சென்றபோது, வழிநெடுக விடுதலைப்புலிகள் ஆங்காங்கே பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருப்பதைப் பார்த்தேன். மரம் வெட்டுதல், பொருட்களைச் சுமந்து செல்லுதல் போன்ற பணிகளையெல்லாம் ஆண்களைவிடப் பெண் புலிகள் மேற்கொண்டிருப்பதைப் பார்த்து திகைப்படைந்தேன்.
பல மைல் தூரம் நடந்து சென்று காலை சுமார் 11 மணியளவில் தம்பி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தோம். கூடாரத்துக்குள் இருந்த தம்பி வெளியில் வந்து என்னைக் கட்டித் தழுவியபோது, உணர்ச்சிப்பெருக்கால் எனது கண்கள் பனித்தன.
1987-ம் ஆண்டு திலீபனின் உண்ணாவிரதத்தின்போது, தம்பியை யாழ்ப்பாணத்தில் சந்தித்த நான் அதற்கு இரண்டரை ஆண்டு காலத் துக்குப் பின்னர் மீண்டும் அவரைச் சந்திக்கிறேன். இந்த இடைக்காலத்தில் தான் அவரைப் பற்றி எவ்வளவு அவ தூறுகள் திட்டமிட்டுப் பரப்பப் பட்டன! அவர் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி எவ்வளவு வேகமாகப் பரப்பப்பட்டது!
போர்க்கால சூழலில் எப்போதும் இருந்துவரும் பிரபாகரனின் இதயம் கடினமாகிவிடவில்லை. மாறாக, அந்த இதயத்தில் நகைச்சுவை உணர்வு ததும்புகிறது. சக தளபதிகளைக் கிண்டல் செய்கிறார். சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறார்.
அவருடைய அலுவலகக் கூடாரத்தில் உட்கார்ந்து நான் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தேன். அவர் உரத்த குரலில், ''மாதரசி மதிவதனி! சாப்பாடு தயாரா?'' என்று கேட்ட போது, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவரது துணைவி யார் மதிவதனி என்னிடம், ''எப்போதும் மாதரசி என்று சொல்லி என்னைக் கேலி செய்கிறார்'' என்று புகார் செய்தார்.
பிரபாகரன் சிரித்துக் கொண்டே, ''அண்ணா, நான் கேலி செய்யவில்லை. நீங்கள் எழுதியிருப்பதைத் தான் நான் சொல்கிறேன்'' என்றார். பிரபாகரன் பற்றி நான் எழுதிய நூலில், 'மாதரசி மதிவதனி' என்ற தலைப்பில், அவருடைய துணைவி யார் பற்றியும் எழுதியிருந்தேன். அதையே அவர் தன் மனைவியைக் கிண்டல் செய்யப் பயன்படுத்தியபோது, என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
இயக்கத்தில் உள்ளவர்கள் மட்டு மின்றி, இயக்கத்துக்கு அப்பாற்பட்ட பொதுமக்களும் தங்களுக்குள்ள குறைகளையோ நாட்டில் நிலவும் குறைகளையோ பிரபாகரனுக்குத் தெரிவிக்க விரும்பினால் அதற்கும் வழி செய்திருக்கிறார் பிரபாகரன். 'விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணியின் கிளைகள்' வடக்கு - கிழக்கு மாநிலத்தில் எல்லா இடங்களிலும் உள்ளன. அந்த அலுவலகங்களில் 'தலைவருக்கு...' என்று எழுதப்பட்டுள்ள அஞ்சல்பெட்டிகள் தனியாக வைக்கப்பட்டுள்ளன. 'தங்கள் குறைகளைப் பிரபாகரனுக்குத் தெரிவிக்க விரும்புபவர்கள், கடிதம் எழுதி இந்த அஞ்சல் பெட்டியில் போடலாம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டத் தளபதிகளிடம் இந்த அஞ்சல்பெட்டிகளின் சாவிகள் இருக்கும். வாரத்துக்கு ஒருமுறை இப்பெட்டிகள் திறக்கப்பட்டு, அதிலுள்ள கடிதங்கள் எடுக்கப்பட்டு பிரபாகரனுக்கு அனுப்பப்படுகின்றன. எல்லாக் கடிதங்களையும் அவரே பார்க்கிறார். சுட்டிக் காட் டப்படும் குறைகள் விடுதலைப் புலிகளைப் பற்றியதாக இருந்தாலும் அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை களை உடனடியாக எடுக்கிறார்.
புலிகள் எவ்வளவோ விஷயங் களில் கட்டுப்பாடு நிறைந்தவர்கள். சிகரெட் புகைப்பதில்லை. பொடி போடுவதில்லை. வெற்றிலைப் பாக்கு கிடையாது. மது அருந்துவதில்லை.
போர்க்களத்திலும் சில நெறி முறைகளைக் கையாளும்படி புலி களுக்குப் பிரபாகரன் கண்டிப்பான கட்டளையிட்டிருக்கிறார். களத்தில் சுட்டு வீழ்த்தப்படும் எதிரிகளின் ஆயுதங்கள், பாட்ஜுகள் ஆகிய வற்றை மட்டுமே கைப்பற்றவேண் டுமே தவிர, கைக்கடிகாரம், பர்ஸ் மற்றும் சொந்த உடைமைகளை யாரும் தொடக்கூடாது. இதை மீறு பவர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.
லண்டனிலிருந்து பிரபாகரனுக் கென்று மிக நவீன கைக்கடிகாரம் மற்றும் சிறிய வாக்மேன் ஒன்றையும் கிட்டு அனுப்பி வைத்திருந்தார்.
பிரபாகரன் சிரித்துக்கொண்டே, ''என் மனைவி எனக்கு ஏற்கெனவே ஒரு கைக்கடிகாரத்தைப் பரிசளித்திருக்கிறாள். 'எந்த நேரமும் இது உங்கள் கையில் இருக்கவேண்டும்' என்றும் கூறியிருக்கிறாள். அதை மீற என்னால் இயலாதே!'' என்று சொல்லிவிட்டு, அருகேயிருந்த வன்னிப்பகுதி தளபதி பால்ராஜை அழைத்து, அந்தக் கடிகாரத்தைப் பரிசளித்தார். திரிகோணமலைத் தளபதி பதுமனை அழைத்து, அவருக்கு வாக்மேனைப் பரிசாகக் கொடுத்தார்.
பிரபாகரனின் துணைவி மதிவதனியை மட்டுமின்றி மகன் சார்லஸ், மகள் துவாரகா ஆகியோரைக் காட்டுக்குள் இருக்கும் முகாமுக்குள் சந்தித்தேன். குழந்தைகள் இருவரும் துடிதுடிப்புடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு மற்ற பிள்ளைகளைப் போலப் பள்ளிக்கூடம் செல்லவோ, எல்லோருடனும் சேர்ந்து விளையாடவோ வாய்ப்பு இல்லை. விடுதலைப்புலிகள்தான் அவர்களின் விளையாட்டுத் தோழர்கள்.
ஒருநாள், மரத்தடியில் குழந்தைகள் இரண்டும் புள்ளிமான்களாகத் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது பிரபாகரன் என்னிடம், ''அண்ணா! சிரித்து விளையாடும் இந்தப் பிள்ளைகள் நாளை குண்டு வீச்சில் பிணமாக மாறலாம். கனவு போல அவர்களைப் பற்றிய நினைவு கலையலாம். எனவேதான், அவர்கள் மீது அதிக நான் பாசம் வைப்பதில்லை. என்ன நேர்ந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை நாங்கள் பெற்றுவிட்டோம்'' என்று கூறியபோது என் நெஞ்சம் நெகிழ்ந்தது.
விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment