புலிகளின் இறுதிக் கட்டம்..
சிவசங்கர் மேனன் பயண சர்ச்சை!
'தென் இலங்கையோடு இணைந்து, வட இலங்கையிலும் சிங்கள அரசின் வெற்றிக் கொடி பறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!' என தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை உரையில் பெருமிதப்பட்டிருக்கிறார் அதிபர் மகிந்தா ராஜபக்ஷே. இந்நிலையில், இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்குச் செல்லவும்... போர்முனையை விட சூடாகிக் கிடக்கிறது இலங்கை அரசியல் களம்!
இந்நிலையில், நடுநிலையான சில பத்திரிகையாளர்கள், ''1985-ம் வருடம் முதல் ஈழப் போரின்போது, ராணுவ போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி கிளிநொச்சியைக் கைப்பற்றிய நாளிலிருந்து... தற்போது அதை இழந்தது வரைக்குமான இடைப்பட்ட காலங்களில்,
புலிகள் பல முறை கிளிநொச்சியை இழந்திருக்கிறார்கள். திரும்பவும் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆனாலும், கடந்த காலங்களில் கிளிநொச்சியைக் கைப்பற்ற ராணுவத்தினர் முயலும் போது கடுமையான பதிலடி தந்த புலிகள் இந்த முறை, இறுதி நகர்வின்போது எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் பின்வாங்கியது ஆச்சர்யமான ஒன்று. இதை போர்த்தந்திரம் என புலிகள் சொன்னாலும், கருணா கொடுத்த தகவலின்படி புலிகள் இயக்கத்தில் மொத்தமே 2000-க்குள்தான் வீரர்கள் இருக்கிறார்களாம். மேலும் மேலும் வீரர்களை இழக்க விரும்பாமல்தான் புலிகள் பின்வாங்கியதாக ராணுவத் தரப்பு கருதுகிறது. முல்லைத் தீவின் நுழைவாயிலாகக் கருதப்படும் தம்முடைய பிரதானக் கோட்டையான புதுக்குடியிருப்பு பகுதிகளுக்கு புலிகள் நகர்ந்து விட்டனர். முல்லைத் தீவை உள்ளடக்கிய சுண்டிக்குளம் கடல் நீரேரிக்கும், முல்லைத் தீவுக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதி, முரசுமோட்டை, அம்பகாமம், கற்சிலைமேடு, வற்றாப்பளை போன்ற மிகக் குறுகிய பகுதிகளுக்குள் அவர்கள் முடக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது ராணுவத்தின் 57, 58, 59 மற்றும் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது படையணிகள் முறையே முல்லைத் தீவு தெற்கு, வடக்கு, முள்ளியவளை வடக்கு, புதுக்குடியிருப்பு தெற்கு என ஒன்பது பகுதிகளின் வழியாகத் தங்களுடைய இறுதி வியூகத்தைச் செயல்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. இதில் படிப்படியாக 50,000 வீரர்களைக் களத்தில் நிறுத்த எத்தனித்திருக்கிறது ராணுவம். விமானப் படையும் குண்டு வீசிய வண்ணம் இருக்கிறது. வருகிற பிப்ரவரி மாசத்தில் இலங்கையில் மாகாண சபை தேர்தல் வரவிருக்கிறது. அதற்குள் முல்லைத்தீவைப் பிடித்துவிட்டால்... எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்பது ராஜபக்ஷேவின் கணக்கு.
இன்னொரு பக்கம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எஞ்சியிருந்த ஒரே பகுதியான சுண்டிக்குளத்தையும் புலிகளிடமிருந்து ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. அப்போதைய மோதலின்போது கடற்புலிகளின் தளபதி திரு கொல்லப்பட்டிருக்கிறார். முல்லைத்தீவை அடுத்து கடல் பகுதி பரந்து விரிந்திருப்பதால், புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த வழியில் இந்தோனேஷியாவுக்குத் தப்பித்துச் சென்று அரசியல் தஞ்சமடைவார் என இலங்கை கருதுகிறது. எனவே, அந்தக் கடல் பகுதி பலத்த கண் காணிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.
ஒன்று மட்டும் நிச்சயம்... இனிமேல் புலிகள் நிலங்களை கைப்பற்றும் போர்களில் இறங்க மாட்டார்கள். ராணுவ அணிகளுக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தும் மோதல்களில்தான் அவர்கள் ஈடுபடுவார்கள். மரபுவழிப் போர்களில் ஈடுபட மாட்டார்கள். இனி இலங்கையிலும் ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கும். எப்படியோ நான்காம் கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி, தமிழ் சமுதாயத்தின் வீழ்ச்சியாகத்தான் வரலாற்றில் பார்க்கப்படும்...'' என்கிறார்கள்.
இந்த நிலைமையில்தான் இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவசங்கர் மேனன் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயமாகச் சென்றிருக்கிறார். 'இலங்கை விவகாரத்தில் நாங்கள் கொடுத்த பிரஷரின் காரணமாகத்தான் அவர் இலங்கைக்குச் செல்கிறார்' என தி.மு.க. தரப்பினர் சிலர் சொல்லி வருவதைப் பார்த்து, எட்டி நின்று நகைக்கி றார்கள் இலங்கை அரசியல்வாதிகள். பிப்ரவரி மாதக் கடைசியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சார்க் அமைப்பு நாடுகளின் வெளியுறவுத் துறைச் செயலாளர்கள் மாநாட்டுக்காக ஜனவரி இறுதியில் சிவசங்கர் மேனன் இலங்கை வரும் நிகழ்ச்சி இருந்திருக்கிறது. தற்போதைய அவரின் பயணத்தைக்கூட இந்தக் கூட்டத்துக்கான பயணமாகத்தான் பார்க்கிறார்கள் இலங்கையில்.
இன்னொரு புறம், சிவசங்கர் மேனனின் வருகைக்கு ஜாதிக ஹெல உறுமய எம்.பி-யான அத்துரலியே ரத்தன்தேரர் மற்றும் ஜே.வி.பி. எம்.பி-யான விஜித்த ஹேரத் ஆகியோர் கடும் எதிர்ப்பு கிளப்பியிருக்கின்றனர்.
அதிபர் மகிந்தா மற்றும் வெளிவிவகாரத் துறை அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமா ஆகியோருடன் போர்நிறுத்தம் குறித்து சிவசங்கர் ஆலோசனை நடத்தப் போவதாக தி.மு.க. சொல்லி வருகிறது. இலங்கையிலுள்ள தமிழ் எம்.பி-க்கள் இந்த விஷயத்தில் கொதித்துக் கிடக்கிறார்கள்.
''இந்திய உளவு நிறுவனமான 'ரா' திட்டமிட்டு புலிகளுக்கு எதிரான வேலைகளைச் செய்து வருகிறது. ஆனையிறைவை கைப்பற்றுவதற்கு முன்பே தமிழகத் தொலைக்காட்சிகளில் ஆனையிறவு கைப்பற்றப்பட்டுவிட்டதாகச் செய்தி வந்தது. புலிகளின் படை நகர்வுகளை வானில் இருந்து தம்மால் துல்லியமாகக் கண்காணிக்க முடியுமென்கிற விஷயத்தை புலிகளுக்கு எச்சரிக்கையாகச் சொல்ல... பல விஷயங்களை 'ரா' முன்கூட்டியே பரப்புகிறது. கடந்த 3-ம் தேதி 'ரா'-வின் உளவு விமானங்கள் முல்லைத்தீவின் மீது பறந்து, பல படங்களை எடுத்து ராணுவத்துக்கு வழங்கியிருக்கிறது.
இன்னொரு பக்கம், கடந்த எட்டாம் தேதி மீண்டும் புலிகளின் மீதான தடையை அறிவித்திருக்கிறது இலங்கை அரசாங்கம். இந்திய அரசின் ஆலோசனைப்படிதான் இந்தத் தடை மீண்டும் அறிவிக்கப்பட்டதாக நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில், கிளிநொச்சியை கைப்பற்றிய உடன் கருத்துத் தெரிவித்த அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகள், 'இலங்கை இனப் பிரச்னைக்கு ராணுவத் தீர்வை முன்வைப்பது சரியாகாது; அரசியல் தீர்வுதான் சரியானதாக இருக்கும்!' என கருத்துத் தெரிவித்தன. இந்த விஷயத்தில் சற்றுத் தாமதமாகக் கருத்துத் தெரிவித்த இந்தியாவும், அரசியல் தீர்வைத்தான் வலியுறுத்தியது. ஆனால், புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினால்தானே அரசியல் தீர்வு வரும்? அந்த விஷயத்தை இந்தியா வலியுறுத்தவில்லை. இந்தச் சூழலில்தான் இந்தியாவின் ஆலோசனைப்படி மீண்டும் புலிகள் மீதான தடையை நீட்டிப்புச் செய்திருக்கிறது இலங்கை. இந்த நிலைமையில், இலங்கை வந்திருக்கும் சிவசங்கர் மேனன் போர் நிறுத்தம் பற்றி எப்படிப் பேசுவார்? இந்த விஷயங்கள் புரியாமல் போர்நிறுத்தம் பற்றி பேசுவதற்காகத்தான் அவர் வந்திருப்பதாகத் தமிழகத்தில் பேசுகிறார்கள். உண்மையில், அவர் சென்றவுடன் போர்நிறுத்தம் வந்துவிடும். அது புலிகளை முழுமையாக அழித்ததால் வந்த போர்நிறுத்தமாகத்தான் இருக்கும்!'' என்கிறார்கள் கோபாவேசமாக.
இதற்கிடையில், கடந்த 14-ம் தேதி, இலங்கையிலுள்ள முக்கிய மீடியாக்களின் பதிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களை அலரி மாளிகையில் சந்தித்த அதிபர் மகிந்தா, 'ராணுவத்துக்கு எதிராகவோ, அரசுக்கு எதிராகவோ இனி எந்தவொரு செய்தியும் வெளிவரக் கூடாது. மீறி வரும்பட்சத்தில் அதன் ஆசிரியர்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்!' என எச்சரிக்கைத் தொனியில் மிரட்டியிருக்கிறாராம். லசந்தாவின் படுகொலை, எம். டி.வி. மீதான தாக்குதல்களால் கொதித்துப் போயிருக்கும் மீடியா சமூகத்தை, அதிபரின் இந்தப் பேச்சு கூடுதலாக கொதிப்படைய வைத்திருக்கிறது!
விகடன்
0 விமர்சனங்கள்:
Post a Comment