'ரா' ரகசிய கண்காணிப்பு
சென்னை ஜன-6.(டிஎன்எஸ்) இந்திய உளவுப்பிரிவான 'ரா' பிரிவு அதிகாரிகள் விமானத்தில் பறந்து ரகசிய கண்காணிப்பு மேற்கொண்டனர். இலங்கையில் போர் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து முல்லைத்தீவு காட்டுப்பகுதிக்கு பின்வாங்கியுள்ள விடுதலைப் புலிகள் பாக்.ஜலசந்தி பகுதியில் நடமாடுகிறார்களா? என்பதை கண்டறியவே இந்த கண்காணிப்பு.
கிளிநொச்சியை இலங்கை ராணுவம் கைப்பற்றிய மறுநாள் இந்திய உளவுப்பிரிவான "ரா' பிரிவின் வான்வழி ஆய்வு மையத்தின் விமானம் உளவுத்துறை அதிகாரிகள் குழுவை ஏற்றிக்கொண்டு ஜன-3 அன்று அதிகாலை 3.00 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பாக்.ஜலசந்தி பகுதியில் புலிகள் நடமாட்டம் காணப்படுகிறதா என அதிகாரிகள் கண்காணித்தனர்.
இந்த விமானத்தில் இருட்டிலும் தெளிவாக பார்க்கக்கூடிய நவீன சாதனங்கள் இருந்ததாகவும், அவர்கள் இலங்கை கடலோரப்பகுதியில் நெருக்கமாக பறந்த சென்று கண்காணித்த பின்னர் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பாமல் வேறொரு விமான நிலையத்திற்கு சென்று விட்டதாக விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? என்பதை உறுதி செய்ய அந்த வட்டாரங்கள் மறுத்துவிட்டன.
"ரா' உளவுப்பிரிவின் வான்வழி ஆய்வு மையத்திடம் போயிங் மற்றும் எம்பரர்ஸ் ரக விமானங்கள் இருப்பதாகவும், இவை 40 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் பறந்து சென்றாலும் துல்லியமாக படம்பிடிக்க கூடிய உயர் தொழில்நுட்ப காமிராக்கள் இந்த விமானங்களில் பொருத்தப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செயற்கைக்கோள் காமிராக்களை போல மேகங்களையும் ஊடுருவி தெளிவாக படமெடுக்கக்கூடிய திறன் கொண்டவை இந்த காமிராக்கள். அவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பூமியில் நடமாடும் மனிதனை படமெடுக்க இந்த காமிராக்களால் முடியும். சிவில் விமானங்கள் பறப்பதற்கு சர்வதேச அளவிலான குறியீடுகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், "ரா' பிரிவு விமானங்கள் பறப்பதற்கு விசேஷ குறியீடுகள் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் செயல்பாடுகள் ரகசியமாக இருக்கும்.
அதனால்தான் ஜன-3 அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து இந்த விமானம் புறப்பட்டதை யாரும் அறிந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. (டிஎன்எஸ்)






0 விமர்சனங்கள்:
Post a Comment