இந்திய இலங்கை கூட்டணியும் புலிகள் மீதான தடையும்
சி.இதயச்சந்திரன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்த விவகாரம்தான் இத்தடை நகர்வு.எல்லாமே முடிந்துவிட்டது என்கிற அடிப்படையில், இத்தடை நிகழ்வும், தெற்கின் நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டிருப்பதாக புரிந்து கொள்ளலாம்.
கிளிநொச்சியை கைப்பற்றி முல்லைத்தீவை நோக்கி நகரும் இராணுவம், ஆறு மாதகாலத்துள் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க முடியுமென்கிற நம்பிக்கையில் யுத்தத்தில் ஈடுபடுகிறது.அரசியல் தீர்வை முன்வைக்குமாறு மென் அழுத்தங்களைச் சுமத்தும் சில சர்வதேச நாடுகள் குறித்து, அரசாங்கம் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.சமாதான ஒப்பந்தத்தை கிழித்தெறிந்த போது மௌனம் காத்த ஏகாதிபத்தியங்களால், தம்மை அசைக்க முடியாதென்கிற தைரியம், ஆட்சியாளர்களிடம் அதிகரித்துள்ளது.
தற்போது இந்திய, பாகிஸ்தான் அரசுகளின் படைக்கல, தொழில்நுட்ப பக்க பலத்தோடு இறுதி யுத்தத்தில் இறங்கியுள்ள அரசாங்கம், உலக மகா பணக்கார நாடுகளான அமெரிக்கா, ஜப்பானின் வேண்டுகோள்களை செவிமடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களிடமிருந்து பெரிய அளவில் நிர்ப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள், கிளிநொச்சியை கைப்பற்றியதோடு முற்றுமுழுதாக அற்றுப் போயுள்ளதென்பதையும் அரசாங்கம் புரிந்து கொள்கிறது. இரண்டு வலுவான சக்திகள், இலங்கையின் இறையாண்மையைப் பங்கிடக் கூடாதென்கிற பிராந்திய நலன்சார் வல்லரசுகளின் நோக்கத்தினை இன்றைய அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியுமென்கிற நம்பிக்கை, குறிப்பாக இந்திய ஆட்சியாளர்களிடம் காணப்படுகிறது.
இந்த வாரம் வெளிவந்த செய்தியொன்று இந்திய வெளியுறவு உளவு நிறுவனமான "றோ' வின் எதிர்வினைப் பரப்புரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனையிறவு கைப்பற்றப்படுவதற்கு முன்னரே, தமிழக தொலைக்காட்சிகளில் கசிய விடப்பட்ட ஆனையிறவு கைப்பற்றப்பட்டதான செய்தி, "றோ' வால் சோடிக்கப்பட்ட மலினப் பரப்புரையின் பின்னணியில் உருவாக்கப்பட்டது. அதேபோன்று "றோ'வின் அதிசக்தி வாய்ந்த, 40 ஆயிரம் அடி உயரத்திலிருந்து நிலத்தில் ஊர்ந்து செல்லும் நத்தைகளையும் துல்லியமாக படம் பிடிக்கக் கூடிய, உளவு விமானங்கள், யாழ். குடாவின் கரையோரப் பகுதிவரை தமது பறப்பினை மேற்கொண்டதாக இந்திய ஆங்கில பத்திரிகை ஒன்றினூடாக புதிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.
இச்செய்தியின் பின்புலத்தில் இந்திய உளவு நிறுவனமான றோவின் கை பதிந்திருப்பதாக ஊகிக்க இடமுண்டு. இவ்வகையான பதட்டத்தை உருவாக்கக் கூடிய செய்தியினை வெளியிட வேண்டிய தேவை என்னவென்பதை ஆராய வேண்டும். விடுதலைப் புலிகளின் படை நகர்வுகளை, வானில் இருந்து தம்மால் துல்லியமாக அவதானிக்க முடியுமென்கிற செய்தியையே "றோ' சொல்ல முயற்சிப்பதாக ஊகிக்கலாம். அதாவது பின்னகர்வின் இறுதி எல்லைக்கோடு அண்மிப்பதால் பாரிய தாக்குதலொன்றை விடுதலைப் புலிகள் நிச்சயம் நடத்துவார்களென்கின்ற கணிப்பில் இவ்வகையான பரப்புரைகளை "றோ' கட்டவிழ்த்து விடுவது ஆச்சரியமானதல்ல.
ஆனாலும் கடந்த 3 ஆம் திகதி சென்னையிலிருந்து புறப்பட்ட றோவின் "வான் ஆய்வுமைய' வானூர்திகள், கரையோரங்களைப் படம் பிடித்து, பிறிதொரு விமான நிலையத்திற்கு திரும்பி இருப்பது உண்மையான நிகழ்வு என எடுத்துக் கொண்டால் இச் செயற்பாடுகள் யாவும், இந்தியாவிற்கு எதிரான மன உணர்வை உலகத் தமிழர்கள் மத்தியில் மிக ஆழமாக விதைக்கிறது. மழையில் நனைந்து, சட்ட சபையில் அறை கூவல் விடுத்து, டெல்லி வரை சென்று பிரதமரை சந்தித்த தி. மு. க. அரசினால் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்பிற்கு அனுப்ப முடியவில்லையென்கிற ஆதங்கம் தமிழக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதையும் இந்திய மத்திய ஆட்சியாளர் உணர்ந்து கொள்ளவில்லை. "தடை' வரை இலங்கை அரசாங்கம் சென்று விட்டது.
இனி யாரோடு போர் நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கையிடம் இந்தியா கூற முடியும்? அதாவது இலங்கை ஆட்சியாளர் களின் நிகழ்ச்சி நிரலிற்கேற்ப இந்தியா செயற்படுவதை, தமிழக ஆட்சியாளர்களால் புரிந்துகொள்ள முடியவில்லையென்று கூற முடியுமா? ஆனாலும் இலங்கை அழைக்காமல் எவ்வாறு கொழும்பிற்கு பிரணாப் முகர்ஜி செல்ல முடியுமென்று கலைஞரின் தம்பியும், இந்திய கப்பல் போக்குவரத்து மத்திய அமைச்சருமாகிய டி. ஆர். பாலு கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது ஏப்ரலில் நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரை, காங்கிரஸுடன் உரசலை ஏற்படுத்த தி. மு. க. விரும்பாது. காங்கிரஸ் கூட்டினால் இடதுசாரிகளின் ஆதரவை தி. மு. க. இழந்துள்ளது. தற்போது விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு மட்டுமே கலைஞருக்கு உண்டு.
ஆதலால் ஈழத் தமிழர் விவகாரத்தில் முறிவு நிலை நோக்கிய அரசியல் அழுத்தத்தினை காங்கிரஸ் மீது தி. மு. க. செலுத்தினால் எதிர்க்கட்சியான ஜெயலலிதாவின் அ. தி. மு. கவுடன் காங்கிரஸ் கூட்டணி சேரும் வாய்ப்புள்ளதை கலைஞர் அறிவார். இலங்கைக்குச் சார்பான நிலையெடுத்து இயங்கும் இந்திய மத்திய அரசுக்கு எதிராக, தலைமை தாங்கக் கூடிய அரசியல் சக்தியொன்று தமிழகத்தில் உருவாகக் கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக தெரியவில்லை. தமிழக எழுச்சியினை சிதைப்பதற்கு றோவும் வேறு சில சக்திகளும், முன்னாள் கொள்கை வகுப்பாளர்களும் மேற்கொள்ளும் பரப்புரைகள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்கலாம். கிளிநொச்சி நகரானது ஸ்ராலின் கிராட்டாக மாறுவதாக ஆய்வு செய்த பி. இராமன், இந்திய நக்சலைட்டுக்களிடம், புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பாதுகாப்புத் தேடிச்செல்வாரென எழுதத் தொடங்கியுள்ளார்.
புலிகளின் கதை முடிந்து விட்டது என்கிற பாரிய பரப்புரையையும் தற்போது முடுக்கிவிட்டுள்ளனர். சர்வதேச ஊடகங்கள் ஊடாக பரப்புச் சமரொன்றும் முன்னெடுக்கப்படுகிறது. கெரில்லாப் போராட்ட முறைமையை நோக்கி, விடுதலைப் புலிகள் நகர்வதாகக் கூறும் அதேவேளை, மரபு வழி படை நகர்த்தும் வல்லமையை புலிகள் இழந்து விட்டார்களென்றும் முடிவுகள் எட்டப்படுகின்றன. இதேவேளை குடாநாட்டிலிருந்து 20 ஆயிரம் படையினர், மணலாறு, கிளிநொச்சி முன்னரங்குகளிற்கு நகர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. குடாநாட்டிலுள்ள பல படை முகாம்கள் மூடப்பட்டு, வரணிக்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட போர்ப் பிரதேசத்தில் 10 ஆயிரம் படையினர் குவிக்கப்பட்டு, பளையூடாக இறுதி நகர்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்று யாழ். குடா முற்றுகை மற்றும் ஜெயசிக்குறு படை நடவடிக்கைகளின் போது கிழக்கில் பல படை முகாம்கள் மூடப்பட்டு, அங்கிருந்த படையினர் வடக்கிற்கு நடத்தப்பட்ட நிகழ்வுகளை தற்போதைய நிலவரத்தோடு ஒப்பிடலாம். ஆனாலும் இதுவரை பாதுகாப்பாக இருந்த யாழ். குடா படையினர், நீண்ட காலங் கடந்து, போர் அரங்கினுள் பிரவேசித்துள்ளனர். இவையெல்லாவற்றிற்கும் இந்திய ஆதரவும், ஆசிர்வாதமும் பூரணமாக உண்டென்பதை, நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழக மக்களும் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும் இலங்கைக்கு இந்தியா வழங்கும் படைக்கல உதவி குறித்து மிக தெளிவாகவே தெரிந்து வைத்துள்ளனர்.
இத்தனை காலமும் மூன்றாவது மனிதன் போல் பாவனை காட்டிய இந்திய வல்லாதிக்கம், மேற்குலக சக்திகளை புறந்தள்ளியவாறு மிகச் சாதுரியமாக கால் பதித்துள்ளது. அதேவேளை தென்னிலங்கையில் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் சீன உறவை, சிதைக்க முடியாத கையறு நிலையில் இருக்கிறது இந்தியா. அந்த ஆழமான, நிரந்தர உறவினை முறிப்பதற்கு ஏதாவதொரு சிங்களக் கட்சி தம் வலையில் விழுமாவென, "றோ' அதிகாரிகள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மேற்குலக நண்பரான ரணிலை, ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு ஜே. வி. பியையும் முஸ்லிம் கட்சி ஒன்றையும் இந்தியா பாலூட்டி வளர்த்து, உசுப்பி விட்ட வரலாறு பலருக்கு தெரிந்திருக்கும்.
அமெரிக்காவில் புதிய ஆட்சி அமைய முன்பாக, விடுதலைப் புலிகளை ஒரு பிரதேசத்திற்குள் ஒடுக்கி, "தடை' மூலம் அவர்களின் அரசியல் தளத்தினை சிதைப்பதே இந்திய ஸ்ரீலங்கா கூட்டின் சமகால தந்திரோபாயமாகும். மும்பை தாக்குதல் நிகழ்வின் ஊடாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் நகர்வுகளை மேற்கொள்ள இந்தியா அவசரப்படுவதும், எத்தனை படையினர் களத்தில் சரிந்தாலும் தொடர்ந்து விரைவாக முன்னேறும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் வேகமும் ஏற்கனவே புள்ளியிடப்பட்ட கால எல்லை ஒன்றினைக் குறி வைத்து அசைவது போலுள்ளது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்கா சோவியத் யூனியன் என்கிற இரு முகாம்களால் பிளவுபடுத்தப்பட்டிருந்த உலகம், சோவியத் உடைவோடு அமெரிக்காவை மையப்படுத்திய ஓருலகமாகி, மறுபடியும் இரு துருவமைய நிலைப்பாடு நோக்கி வேகமாக மாற்றமடைவதை உணரலாம். சீனாவை மையப்படுத்திய இரண்டாவது முகாம், அண்மைய அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியோடு மேலெழத் தொடங்கியுள்ளது. உதாரணமாக 1998 இல் சீனாவால் புறந்தள்ளப்பட்ட கிழக்கு ஆசிய நாடுகளிற்கான "ஆசிய நாணயச் சபை' (அண்டிச்ண Mணிணஞுtச்ணூதூ ஊதணஞீ) மறுபடியும் உயிர்த்தெழுந்து அமெரிக்க வல்லரசின் சர்வதேச நாணயச் சபைக்கு (ஐணtஞுணூணச்tடிணிணச்டூ Mணிணஞுtச்ணூதூ ஊதணஞீ) எதிராக செயற்படப் போகிறது. நாலரை ரில்லியன் (கூணூடிடூடூடிணிண) டொலர் நாணய சேமிப்பினை முதலிட்டு ஜப்பான், சீனா, தென்கொரியா நாடுகள் இந் நிதியத்தினை இயக்கப் போகின்றன.
இதில் இணைவதா அல்லது ஒபாமாவின் அமெரிக்காவோடு கூட்டுச் சேருவதா என்கிற திரிசங்கு நிலையில் இந்தியா இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹிலாரி கிளின்டனின் ஆலோசகர் மெடலின் அல்பிரேய்ட் அம்மையாருடன் சுமூகமான இராஜரீக உறவு இந்தியாவிற்கு கிடையாதென்பதை டெல்லி வட்டாரங்கள் சோகத்துடன் வெளிப்படுத்துகின்றன.
ஆகவே ஒபாமாவின் வரவோடு, அமெரிக்கா இந்திய சீன உறவுகளில் முன்பு இருந்ததை விட வேறு பரிமாணத்தில் மாற்றங்கள் நிகழும் வாய்ப்புக்கள் அதிகம். புஷ்ஷûம் ரைஸும் அமெரிக்க நிர்வாகத்திலிருந்து விலகிச் செல்வது இந்தியாவிற்கு மிகுந்த வேதனையான விடயமென்பதை, இந்திய ஆய்வாளர்கள் வரையும் கட்டுரைகளிலிருந்து புரியக் கூடியதாகவிருக்கிறது. ஆகவே, சோவியத் சிதைவின் பின், அமெரிக்கா உருவாக்கிய ஓருலக கோட்பாடு உலகாண்ட காலத்தில், தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்புற்றது. அதுவே இப்போராட்டம் நீடித்துச் சென்றதற்கும் ஒரு முக்கிய காரணியாக அமைந்திருந்தது.
[வீரகேசரி வாரநாளேடு]
0 விமர்சனங்கள்:
Post a Comment