இலங்கையில் அடுத்தது என்ன-ஆய்வு
பிபிசி செய்தியாளர் ஜில் மெக்கெவரிங்
இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த பகுதிகளுக்குள் இலங்கை அரசாங்கப் படைகள் மிகவும் ஆழமாக அழுத்தம் கொடுத்து வருகின்றன.
ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இந்த நடவடிக்கைகள் தமக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளதாக அரசாங்கம் பெருமிதங்கொள்கின்ற போதிலும், அந்த நடவடிக்கைகளின் வெற்றி குறித்து ஏற்கனவே சந்தேகங்கள் எழ ஆரம்பித்து விட்டன.
விடுதலைப்புலிகளின் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று கடந்த வருடம் அரசாங்கம் உறுதி கூறியிருந்தது.
தற்போது அது பெரும்பாலான முக்கிய தளங்களையும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நெடுஞ்சாலைகளையும் கைப்பற்றியுள்ளது.
இந்த மோதல்கள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்பது தெளிவாகின்றது.
ஆனால், அடுத்தது என்ன என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.
அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது
இந்த விடயத்தில் ஒரு அரசியல் ரீதியிலான தீர்வு இருந்தால் மாத்திரமே, விவகாரத்துக்கு நிரந்தரமான தீர்வைக் காணமுடியும் என்பதை இலங்கை அரசாங்கம் எப்போதும் அங்கீகரித்தே வந்துள்ளது.
எந்த அளவிலான சுயாதிக்கம் வழங்கப்படும் என்பது தெளிவில்லாத போதிலும், ஒருவகை அதிகாரப் பகிர்வை வழங்குவோம் என்று அமைச்சர்கள் தற்போது உறுதிமொழி வழங்குகிறார்கள்.
தமிழர்களின் கோபமும், ஆட்சேபமும் தொடருமாயின், சண்டையும் கூடவே தொடரக்கூடும்.
ஒரு கெரில்லா அமைப்பாக விடுதலைப்புலிகள் மீண்டும் உத்வேகம் பெறுவதற்கு சாதகமான வாய்ப்புக்கள் மிகவும் அதிகமாகவே இருக்கின்றன.
பலவீனமடைந்த போதிலும், இன்னமும் செயற்திறனுடன் இருக்கும் அவர்கள், நாடெங்கிலும் தற்கொலைப் போராளிகளை பயன்படுத்துவதுடன், காடுகளில் உள்ள சிறிய தளங்களில் இருந்து தாக்கிவிட்டு ஓடும் யுக்தியையும் பயன்படுத்தக் கூடும்.
அப்படியான சூழ்நிலையை, அதுவும் குறிப்பாக தென்பகுதியில் தாக்குதல்கள் அதிகரிக்கும் நிலைமையை அரசாங்கத்துக்கான ஒரு வெற்றியாக பெரும்பாலான இலங்கையர்கள் பார்க்கமாட்டார்கள்.
விடுதலைப்புலிகளை, பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ததால், வெளிநாடுகளில் இருந்து அந்த அமைப்புக்கு கிடைக்கும் நிதி ஈட்டங்கள் குறைந்துள்ளன.
ஆனால், அவர்களது போராட்டத்துக்கான காரணம், இன்னமும் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள தமிழர்களின் கணிசமான ஆதரவை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. அது தொடரும் என்றுந்தான் தோன்றுகிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த மோதல்களுக்கான நீண்ட காலச் செலவுகள் அளவுக்கு அதிகமானவையாகும். தற்போது நடத்தப்படுகின்ற இந்த இராணுவ நடவடிக்கையும் அதீத செலவைத்தருவதாகும்.
வடபகுதியின் அபிவிருத்தி அத்தியாவசியமானது
வடக்கை மீளக்கட்டியெழுப்புவதற்கான செலவும், அங்கு தேவைப்படுகின்ற அபிவிருத்தியும் கணிசமானவையாகும்.
விடுதலைப்புலிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்ற அதேவேளை, சிங்கள பெரும்பான்மையின மக்களின் ஆதரவையும் அரசாங்கம் தக்கவைத்தாக வேண்டும்.
விடுதலைப்புலிகளின் பலம் வாய்ந்த பகுதியான கிளிநொச்சி வீழ்ந்தபோது கொழும்பில் சிலர் கொண்டாடினார்கள்.
ஆனால், ஏனையவர்களைப் பொறுத்தவரை பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவை உட்பட , தமது கடும்போக்கான அரசாங்கத்தையிட்டு, அவர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள்.
BBC Tamil
0 விமர்சனங்கள்:
Post a Comment