வடக்கில் மனிதாபிமான நெருக்கடி மோசமாக அதிகரிப்பு; உதவி வழங்கும் அமைப்புகள் கவலை
வடபகுதியில் பாரிய மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருவதாக உதவி வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பிட்ட ஒரு பகுதியில் மோதல்கள் இடம்பெறுவதால் அப்பகுதியில் தங்கியிருக்கும் சுமார் 3 1/2 இலட்சம் பொதுமக்கள் கடுமையான குண்டு வீச்சுகள், உணவுப் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
மோதல் இடம்பெறும் பகுதிக்குச் செல்ல வெளிநாட்டு பத்திரிகையாளருக்கு அனுமதி இல்லை. ஆனால், அல்ஜசீரா தொலைக்காட்சி சேவை பொதுமக்கள் வெளியேறிச் செல்லுதல் மற்றும் எரியுண்ட கட்டிடங்கள், கடுமையான ஷெல் தாக்குதல்களால் ஏற்பட்ட குழிகள் போன்றவற்றை படம்பிடித்து வெளியிட்டுள்ளது.
"நாங்கள் சகலவற்றையும் இழந்துவிட்டோம். கடைசியாக நாங்கள் தங்கியிருந்த இடத்தைப்போன்றே இதுவும் உள்ளது. அங்கும் நாம் சகலவற்றையும் இழந்துவிட்டோம்' என்று இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களில் ஒருவர் அல்ஜசீராவுக்குக் கூறியுள்ளார்.
"இப்போது எமக்கு எந்தச் சொத்தும் இல்லை. முன்னரிலும் பார்க்க நிலைமை மோசம். சாப்பிடக்கூட எமக்கு எதுவும் இல்லை' என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் கடைசி இடமாக முல்லைத்தீவு இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் வன்முறைகளால் 30 பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர் என்று உதவி வழங்கும் அமைப்புகள் கூறுகின்றன. அதேசமயம், உணவு அவசர மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்வதும் சாத்தியமற்றதாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
?மோதல்களால் கடந்த 5 நாட்களாக இந்த மக்களை எந்த உதவியும் சென்றடையவில்லை என்று இலங்கையிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் போல் காஸ்ரெலா அல்ஜசீராவுக்குக் கூறியுள்ளார்.
மனிதாபிமான வழியைத் திறப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அந்தப் பிராந்தியத்திற்குள் உதவிப் பொருட்களை பாதுகாப்பாக அனுப்ப முடியாமல் இருப்பதாக அவர் கூறியுள்ளார். ?உதவிப்பொருள் மட்டுமல்லாமல் நோயாளிக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கமுடியாமல் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். "கணிசமான எண்ணிக்கையில் மருத்துவமனைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள்' என்றும் காஸ்ரெலா கூறினார்.
இதுவரை இரு மருத்துவமனைகள் குண்டு வீச்சுக்கிலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் இலக்கானதாக நிவாரண அமைப்பொன்று தெரிவித்தது.
இலங்கையின் வடபகுதியில் பொதுமக்களுக்கு உதவும் நிவாரண அமைப்பொன்றை நடத்திவரும் செல்வமலர் ஐயாத்துரை என்பவர் கூறும்போது இனப்படுகொலையென்ற வார்த்தையை நியாயப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
"இனப்படுகொலை என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இது சரியாக இருக்கக்கூடும். ஏனெனில், இனப்படுகொலை என்பதன் வரைவிலக்கணம் படிமுறையாக திட்டமிட்டு சமூக, இன அல்லது அரசியல் குழுவை நாசமாக்குதல் என்பதாகும். ஆதலால் இது இனக்குழுவொன்றின் அழிவாக உள்ளது. இலங்கையின் வடபகுதியிலுள்ள இனக்குழு இதுவாகும்' என்று அல்ஜசீராவுக்கு அவர் கூறியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment