அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஜப்பானிய விசேட தூதுவர் பாராட்டு
நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதோடு நின்று விடாது அனைத்து மக்களும் சமாதானமாக இணக்கப்பாட்டுடன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு எனது அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் அதேவேளை அனைத்து இன மக்களுக்கும் தேவையான அபிவிருத்தியையும் பாதுகாப்பையும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி நேற்று வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி, சர்வகட்சி மாநாடு ஊடாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ. தே. கட்சியிடமும், வடபகுதி தமிழ் கட்சிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றேன். பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும்.
மிக விரைவில் இலங்கையர்கள் அனைவரும் சமாதானத்துடன் சகவாழ்வு வாழ்வதற்கான சூழலை ஜனாதிபதி ஏற்படுத்துவாரென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்தோடு இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை பாராட்டியுள்ள அகாஷி கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை போன்று வடக்கிலும் அபிவிருத்திகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதன் போது இலங்கை அரசாங்கத்திற்கு ஜப்பான் முழுமையான பங்களிப்பை வழங்குமென்றும் அகாஷி மேலும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment