ஆனையிறவு நோக்கி முன்னேறும் படையினருடன் புலிகள் கடும் மோதல்
கிளிநொச்சி கிழக்கு பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தற்போது ஆனையிறவு பிரதேசத்தை நோக்கி பெருமெடுப்பிலான முன்னகர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.
முன்னகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் முதலாவது விஷேட படையணியினர் ஆனையிறவுக்கு 2 கிலோமீற்றர் தொலைவிலேயே நிலைகொண்டுள்ளனர். படையினரின் முன்னகர்வை முறியடிக்கும் வகையில் விடுதலைப் புலிகளால் பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இது தொடர்பில் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் மேலும் கூறியதாவது பரந்தன், கிளிநொச்சி பிரதேசங்களைக் கைப்பற்றியுள்ள படையினர் தற்போது கிளிநொச்சி கிழக்கு பிரதேசத்தினூடான இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் போது புலிகளின் நிலைகள் மீது ஷெல் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படையினரின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் விடுதலைப் புலிகளினாலும் பதிலுக்கு மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இம்மோதலில் பரஸ்பரம் இரு தரப்புக்க்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதேவேளை, முல்லைத்தீவு பிரதேசத்தில் இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவரும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு, தண்ணியூற்று, தோட்டம், குமுளமுனை, முதலியன்குளம், கட்டிலான்மடு ஆகிய பகுதிகளிலேயே இந்த மோதல்கள் உக்கிரமடைந்துள்ளன. இதில் புலிகள் தரப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் படைத்தரப்புக்கும் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment