"இடம் பெயர்ந்தோர் 3 வருடங்கள் தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்தி உண்மை அல்ல'
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்த பொது மக்கள் 3 வருடங்களுக்கு நலன்புரி முகாம்களிலேயே தடுத்து வைக்கப்படுவர் என்ற செய்திகளில் எந்த உண்மையும் கிடையாதென மறுத்திருக்கும் மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னிப் பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கமெதுவும் அரசாங்கத்துக்குக் கிடையாதென்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வன்னிப் பகுதியிலிருந்து நேற்று (காலை) வரை மொத்தமாக 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைந்திருப்பதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அமைச்சர் பதியுதீன் இந்த கருத்துகளை வெளியிட்டார்.
அவர் இங்கு மேலும் பேசுகையில்:
""வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வரும் பொது மக்கள் 4 கட்டங்களாக உள்வாங்கப்படுகின்றனர். வரும் மக்களுக்கு படையினரால் முதலில் சத்துணவுகள் வழங்கப்பட்டு பின்னர் ஏனைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. இன்று (நேற்று) வரை 34,430 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர். இன்னும் சுமார் 65 ஆயிரம் மக்களே அரச கட்டுப்பாடற்ற பகுதியில் எஞ்சியிருக்கின்றனர்.
இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கென அரை நிரந்தர வீடுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைய 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
அத்துடன், வவுனியாவில் ராமநாதன், கதிர்காமர், ஆனந்தகுமாரசுவாமி, அருணாசலம் ஆகிய பெயர்களில் 4 நலன்புரி கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாடசாலை, வங்கி, சுகாதாரம் என சகல வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதேநேரம், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய இப்போதே மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டோம். மன்னார்சிலாபத்துறை பிரதேசங்களுக்கு மின்சார விநியோகம் வழங்க ஆரம்பிக்கப் பட்டுவிட்டன. பூநகரிசங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்புகள் ஆரம்பமாகிவிட்டன. யாழ்ப்பாணம்மன்னார் ""ஏ32' வீதியை கூடிய விரைவில் செப்பனிடும் பொருட்டு 12 ஒப்பந்தகாரர்களிடம் அந்தப் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மாங்குளம் பகுதிக்கும் அடுத்த வாரமளவில் மின்சாரம் வழங்க அரசாங்கம் தயாராக இருக்கிறது.
இடம்பெயர்ந்து வந்தவர்களை கூடிய விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம். அதைவிடுத்து நலன்புரி முகாம்களிலேயே மக்கள் 3 வருடங்களுக்கு தடுத்து வைக்கப்பட போவதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது.
அதுமட்டுமல்லாது, வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை அரசாங்கம் குடியேற்றப் போவதாக சிலர் இப்போதே பிரசாரம் தொடங்கிவிட்டனர். ஆனால் வன்னியில் சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அதற்கான அவசியமும் எமக்கில்லை.
இதேநேரம், இடம்பெயர்ந்து வந்த மக்களுடன் 8, 9 புலி உறுப்பினர்களும் வந்துள்ளனர். சிலர் அவர்களே அதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் திருந்தி மக்களுடன் வாழ விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் அவர்களை மக்களுடன் இணைத்து வைத்திருக்க முடியாது.
எனவே, அவர்களை நீதி அமைச்சின் பொறுப்பில் ஒப்படைத்து புனர்வாழ்வளித்து, அத்துடன் தொழிற் பயிற்சிகளையும் வழங்கி, வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை வழங்க திட்டமிடப் பட்டுள்ளன' என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment