ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரின் உயிரைக் காப்பாற்றிய 9 வயது மாணவன்
மகியங்கனை கெமுனுபுர மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 9 வயது மாணவன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரின் உயிரைக் காப்பாற்றிய துணிகரச் சம்பவமொன்று அண்மையில் மகியங்கனையில் இடம்பெற்றுள்ளது.
கெமுனுபுர மகா வித்தியாலயத்தில் ஆண்டு நான்கில் கல்வி பயிலும் 9 வயது நிரம்பிய ஆர்.டி.தினேஸ் சந்தகெலூம் என்ற மாணவனே நான்கு பேரின் உயிரைக் காப்பாற்றியவராவார்.
இந்த நால்வரும் வயல் வேலைகளைச் செய்து விட்டு உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயம் உழவு இயந்திரம் பாதையை விட்டு விலகி மகியங்கனை ஆற்றில் பாய்ந்தது. அவ்வேளையில் அப்பகுதி வழியாக வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மாணவன் திடீரென்று ஆற்றில் பாய்ந்து ஆற்றில் அடித்துச் சென்று கொண்டிருந்த நால்வரையும் தனித்தனியாக கரைக்கு இழுத்து வந்து அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளான். இவர்களில் 3 சிறுவர்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.
இவ்விபத்தில் 70 வயது நிரம்பிய பி.எம். தினதாச என்பவரை மட்டும் காப்பாற்ற முடியாமல் நீரில் மூழ்கி மரணமானார். மகியங்கனைப் பொலிஸார் இவ்விபத்துக் குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், நான்கு பேரின் உயிரினைக் காப்பாற்றிய சிறுவனைப் பெரிதும் பாராட்டினர். 9 வயது நிரம்பிய இச்சிறுவன் நீச்சல் பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெற்றவரென்பது இங்கு விசேடமாக குறிப்பிடத்தக்கது.
துணிகரமான இச்செயற்பாட்டில் இறங்கி வெற்றி கண்ட இம்மாணவன் வித்தியாலய மட்டத்திலும் கெமுனுபுர கிராம மட்டத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளான்.






0 விமர்சனங்கள்:
Post a Comment