தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: கடலில் குதிக்க வைத்து சித்திரவதை
நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கயிற்றால் தாக்கி கடலில் குதிக்க வைத்து சித்திரவதை செய்ததாக நேற்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் 26 நாட்டுப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகிலிருந்த மீனவர்களை கயிற்றால் தாக்கி துப்பாக்கியால் மிரட்டி கடலில் குதிக்க வைத்தனர்.
படகில் இருந்த மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசி விரட்டியடித்தனர். பாம்பன் லைட் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த சகாயம், அக்காள் மடம் ஜோசப், பார்த்திபன் ஆகியோர் படகு உட்பட 10க்கும் மேற்பட்ட படகிலிருந்த மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வரக்கூடாது என எச்சரித்து அனுப்பினர். அக்காள் மடத்தைச் சேர்ந்த மீனவர் அருள்திரவியம் கூறுகையில், "நள்ளிரவு ஒரு மணிக்கு படகில் வந்த இலங்கை கடற்படையினர் எங்கள் படகில் இருந்த வலைகள் மீது டீசல் ஊற்றி தீவைத்ததால் படகிலும் தீப்பிடித்து. கடற்படையினர் சென்றதும் கடல் நீரால் தீயை அணைத்து கரை திரும்பினோம்' என்றார்.
மீனவர்கள் செபஸ்தியான், அருள்,தெற்குவாடி பெருமாள் கூறுகையில், "நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் படகில் ஏறி கயிற்றினால் எங்களை தாக்கினர். வலைகளை வெட்டி கடலில் வீசியபின் மிரட்டி கடலில் குதிக்க வைத்தனர். நீண்ட நேரம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நாங்கள் கடற்படையினர் சென்றவுடன் படகில் ஏறி தப்பித்து வந்தோம்' என்றனர். இது குறித்து மீன்துறை மற்றும் புலனாய்வுத் துறையினர் விசாரிக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment