வலிந்த தாக்குதலுக்கான பலத்தை புலிகள் இழந்துவிட்டனரா?
விடுதலைப் புலிகள் இனி வலிந்து தாக்குதல்கள் செய்வதென்பது பகற்கனவு என்பது சிறீலங்கா இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூற்றாகும். அவரின் மதிப்பீட்டின்படி விடுதலைப் புலிகளையும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தையும் தோற்கடிப்பதற்கு இன்னமும் சிறிது காலமே போதுமானதொன்றாகும்.
சரத் பொன்சேகாவின் இத்தகைய மதிப்பீட்டிற்கு இதுவரையிலான யுத்தத்தில் - அதாவது படையெடுப்பின் மூலம் 15,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுவிட்டதான அவரது மதிப்பீடு காரணமாக இருக்கலாம். அத்தோடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் வெகுவாகச் சுருங்கி விட்டதும் காரணமாக இருக்கலாம்.
இதேவேளை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் அளவு குறித்து அரச தரப்பிலிருந்தே குழப்பமான தகவல்கள் உள்ளன. 50 சதுரக் கிலோ மீற்றரிலிருந்து 500 சதுரக் கிலோ மீற்றர் வரையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படும் புள்ளி விரங்கள் கூறுகின்றன. ஆகையினால், இப் பரப்புரை குறித்த மதிப்பீடு மாற்றம் கொண்டதாக இருப்பினும் அது குறிப்பிடத்தக்களவு - ஏன் வெகுவாகக் குறைந்து போய்விட்டது என்பது நிராகரிக்கப்பட முடியாததொன்றே ஆகும்.
இதனால் கொல்லப்பட்டதாக இராணுவம் மதிப்பீடு செய்யும் புலிகளின் எண்ணிக்கை சுருங்கி விட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பன புலிகள் இனி ஒரு வலிந்து தாக்குதலைச் செய்யமுடியாத நிலைக்கு அவர்களைத் தள்ளியள்ளது என்பது அவர்களின் மதிப்பீடு. அத்தோடு, விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க இன்னமும் சிறிதுதூர இடைவெளியே உள்ளது என்ற இராணுவத் தலைமையின் பிரச்சாரம் இராணுவத்தினரை முன்னோக்கித்தள்ளவும், யுத்த ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்தப் போதுமானதாகவுள்ளது. இதே சமயம் தொடர்ச்சியான தாக்குதல்களை அதாவது இடைவிடாது நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம், விடுதலைப் புலிகள் ஒரு வலிந்த தாக்குதலுக்குத் தயாராவதையோ, அதற்குரிய வளங்களைச் திரட்டுவதிலோ நெருக்கடியைத் தோற்றுவிக்கலாமென இராணுவத்தலைமை நம்பிக்கை கொண்டுள்ளது.
ஆகையினால், எத்தகைய இழப்பின் மத்தியிலும் நடவடிக்கை தொடர்வதில் அது தீவிரம் கொண்டதாகவே உள்ளது. இத்தகையதொரு நிலை வெளிப்பார்வையிலும் சரியானது போன்றே உள்ளது. அதாவது விடுதலைப் புலிகள் வலிந்து தாக்குதல்கள் செய்வதாயின் இதுவரை ஏன் செய்யவில்லை? விடுதலைப் புலிகளுக்குத் தாக்குதல் தயாரிப்பிற்கான வாய்ப்புக்கள் தற்பொழுது உள்ளதா? என்றகேள்வி எழுப்புபவர்கள் இன்று அதிகமாகவே உள்ளனர். ஒரு வகையில் பார்க்கப்போனால், விடுதலைப் புலிகள் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்களில் ஒரு தரப்பினர் கூடப் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியும் உள்ளனர். இவர்கள் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதற்கான காலம் கடந்ததொன்றாகிவிட்டது. இனி வலிந்து தாக்குதல் சாத்தியமாகப் போவதில்லை எனக் கருதத் தலைப்பட்டுள்ளனர். இந்தவகையில் பார்க்கப்போனால், சிறீலங்கா இராணுவத்தரப்பு வெற்றி உறுதி என்று கருதுகின்றனர். அதாவது இனிப் புலிகள் மாற்றங்களை உருவாக்கத்தக்க தாக்குதல்களைச் செய்யும் வலுவை இழந்துவிட்டதாகவே கருதுகின்றனர்.
இதேவேளை வழமைபோலவே இராணுவ நடவடிக்கைகள் குறித்தோ, புலிகளின் எதிர்கால நடவடிக்கை குறித்தோ புலிகள் தரப்பில் இருந்து கருத்துக்கள் எவையும் முன்வைக்கப் படுவதாக இல்லை. ஆனால், சிறிலங்கா இராணுவம் விடுதலைப் புலிகள் பலம் குன்றிவிட்டதாகவும் இன்னமும் 1000 புலிகள் மடடுமே உள்ளனர் என்பதான மதிப்பீடுகளும் களமுனையில் இருந்துவரும் தகவல்களுக்குமிடையில் ஒப்புவமை இருப்பதாக இல்லை. அதாவது பிரதேசம் சுருங்கிவிட்டது என்பது உண்மையே. ஆயினும், விடுதலைப் புலிகளின் ஆளணி வளம், ஆயுத வளம் பற்றிய கேள்விகளைக் களமுனைத் தகவல்கள் எழவைப்பவையாகவுள்ளன. சிறீலங்கா இராணுவம் இன்று தனது உயர்வலுவைப் பயன்படுத்திவருகின்றது என்பது அனைவருக்கும் தெரியாததொன்றல்ல. இதனைச் சிறீலங்காப் படைத்தரப்பே ஊர்ஜிதம் செய்வதாகவும் உள்ளது. ஆகையினால் களமுனையில் சிறீலங்காவின் கைவெகுவாக ஓங்கியிருத்தல் வேண்டும். ஏனெனில் 15,000 புலிகளைக் கொன்றுவிட்ட நிலையில், 1000 புலிகளால் எவ்வாறு சிறீலங்காவின் உயர்வலுக்கொண்ட படையணிகளை எதிர்கொள்ளமுடியும்?
ஆனால், களத்தில் இராணுவத்தரப்புக் கூறுவதுபோல் - அதுவும் கடந்த ஒரு வாரத்தில் கமுனையில் பெரும் மேலாண்மையை வெளிப்படுத்தியுள்ளதாக இல்லை. சில முன்னேற்றங்கள் எப்படியிருப்பினும் அது பெரும் இழப்பின்றி எட்டப்பட்டதாகவும் இல்லை. மாறாகக் கடந்தவாரத்தில், சிறீலங்கா இராணுவம் குறிப்பிடத்தக்கதான ஆளணியை இழந்துள்ளதோடு - சொல்லத்தக்கதான முன்னேற்றம் எதையும் அடைந்ததாக இல்லை. இத்தகையதொரு நிலையை 1000 போரை மட்டும் கொண்ட ஒரு மரபுவழிப் படையணியால் உருவாக்கமுடியுமா?
இது ஒருபுறம் இருக்க, கடந்தவாரம் களமுனையில் விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து குறிப்பிடும்படியான இரண்டு விடயங்களை எவராலும் அவதானிக்கத்தக்கதானதாகவுள்ள��
�ு. இதில் ஒன்று விடுதலைப் புலிகள் கணிசமான அளவில் ஆட்லறிப் பீரங்கிகளைப் பயன்படுத்தி வருகின்றமையானது. இதன்மூலம், விளங்கிக்கொள்ளப்படத்தக்கதா��
� விடயமாகவுள்ளதொன்று புலிகளிடம் ஆட்லறி எறிகணைகள் கணிசமான அளவில் இருப்பில் இருக்கிறது என்பதாகும். அதாவது, சிறீலங்காப் படைத்தரப்பு, கூறிக்கொள்வது போன்று புலிகளின் விநியோகமார்க்கங்கள் துண்டிக்கப்பட்டுவிடவில்லை என்பது.
அடுத்ததாக, விடுதலைப் புலிகள் சில கனரக ஆயுதங்களைக் களத்தில் அறிமுகம் செய்துள்ளதோடு அதுகுறித்த தகவலையும் வெளியிட்டுள்ளமையாகும். அதாவது விடுதலைப் புலிகள் கனரக ஆயுதம் பொருத்தப்பட்ட டாங்கி தாக்குதலில் பயன்பட்டமையாகும். இவை இரண்டும் விடுதலைப் புலிகள் மரபுவழிப்படையணியாக செயற்படுவதில் முன்னேற்றம் கண்டுள்ளதன் வெளிப்பாடே ஆகும். ஆகையினால், விடுதலைப் புலிகளின் போரிடும் ஆற்றல் அதிகரிக்கப்பட்டுள்ளதேயொழி��
� அது பலவீனமடைந்துவிடவில்லை என்பதாகும். இவற்றின் அடிப்படையிலேயே, விடுதலைப் புலிகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை விளைவிக்கத்தக்கதான வலிந்து தாக்குதல்களைச் செய்யும் வலுக்கொண்டவர்களாக உள்ளனரே அன்றி - அத்தகைய தாக்குதல் செய்யும் சக்தியை இழந்துவிட்டனரா? என்பதை மதிப்பீடு செய்யமுடியும்.
சிறீலங்கா இராணுவத்தின் தொடர்ச்சியான படை நடவடிக்கைகாரணமாக, விடுதலைப் புலிகள் பெருமளவு நிலப்பரப்பை இழந்துள்ளமைஉண்மையே. இதில் சில கேந்திர முக்கியத்துவமானவை என்பதும் சில அரசியல் முக்கியத்துவம் கொண்டவை என்பதும் நிராகரிப்பதற்கு இல்லை. ஆனால், விடுதலைப் புலிகள் தாக்குதல் செய்யும் வலிமை இழந்துவிட்டனர் என்றோ, ஆளணியில் சந்தித்த இழப்பினால் மீளமுடியாத நிலையில் உள்ளனர் என்றோ மதிப்பீடு செய்தல் தவறானதாகும். அவ்வாறு மதிப்பீடு செய்வதனால், தற்பொழுது களமுனையில் புலிகள் போரிட்டுக்கொண்டிருக்க முடியாது. இத்தகையதொரு நிலையில் - அதாவது புலிகள் பலமிழக்காத நிலையில் இருப்பதாகக் கொள்ளப்படின் ஏன் இன்னமும் வலிந்து தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என்ற கேள்வி எழுவது தவிர்க்கப்படமுடியாததாகிறது.
இதற்குப் பதில் தேடுவது சுலபமான காரியமாகவே இருக்கும். ஏனெனில், இது குறித்த பதிலுக்கு விடுதலைப் புலிகளின் யுத்த மூலோபாயம் குறித்துச் சரியான தகவல் பெறப்பட்டிருத்தல் அவசியமாகும். அதாவது நிலங்களைப் பிடித்தல் எமது நோக்கமல்ல, புலிகளை அழித்தலே நோக்கமென்ற இராணுவத்தின் மூலோபாயத்திற்கு மாற்றீடான புலிகளின் மூலோபாயம் என்ன? என்பது குறித்த தேடுதல் அவசியமாகும். ஆகையினால், விடுதலைப் புலிகள் இராணுவத்தின் மூலோபாயத்திற்குத் தம்மைப் பலியிடாது விட்டாலும், தற்பொழுது தமது மூலோபாயத்தை வெளிப்படுத்த அன்றி அதன் அடிப்படையிலான நடவடிக்கைகளைமேற்கொள்வதில் இதுவரையில் என்ன முன்னேற்றத்தை எட்டியுள்ளனர் என்பது இன்று அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள கேள்வியாகும். அதாவது, இராணுவத்தின் மூலோபாயத்திற்குள் சிக்காத புலிகள், தற்போதைய தந்திரோபாயத்தைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளமுடியுமா? என்பதே கேள்வியாகும்.
ஏனெனில், மூலோபாயத்தில் சிறீலங்கா இராணுவம் இதுவரை வெற்றிபெறவில்லையாயினும், விடுதலைப் புலிகளுக்கு அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்கும் கட்டம் ஒன்றை எட்டியுள்ளது என்பது நிராகரிக்கப்படமுடியாதது. ஆனால், விடுதலைப் புலிகள் இது தொடர்பான தகவல் எதையும் வெளியிடாதுவிட்டாலும், தம்மிடமுள்ள ஆளணி ஆயுததளவாடங்கள் என்பவற்றைக் கொண்டு வலிந்து தாக்குதல் திட்டத்தையோ அன்றிப் பெரும் முறியடிப்புச் சமர் ஒன்றையே நடத்தியே ஆதல் வேண்டும் என்பது அவசியமானதொன்றாகிவிட்டது. ஆனால் புலிகளிடம் குறிப்பிடத்தக்கதான ஆளணி - ஆயுத தளவாடங்கள் இருப்பினும் கூட ஒரு தாக்குதல் திட்டத்தை அவசர அவசரமாகவோ, அன்றி மூலோபாயத்திற்கு மாறாகவோ மேற்கொள்ளுதல் என்பதோ பொருத்தப்படானதாக இருக்கப் போவதில்லை. வெற்றி அளிப்பதாகவும் இருக்கப்போவதில்லை. அதாவது மூலோபாயத்தின் அடிப்படையில், ஒரு தாக்குதல் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுவதனால், முதலில் திட்டமிடுதலும் அடுத்த தாக்குதலுக்குத் தயார்படுத்தலும் அடுத்த படைநகர்த்தலும் எனப்பல கட்டங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் எவையும் பூர்த்தியாகாது நடவடிக்கைகள் வெற்றியைத் தேடித்தரப்போவதில்லை. இவற்றைவிடப் பல புறக்காரணிகளும் நடவடிக்கைகளுக்கு அவசியமானதாக இருக்கலாம். ஆகையினால் நெருக்கடிகள், அழுத்தங்கள் என்பனவற்றினால் முழுமை பெறாத திட்டம் ஒன்றை அமுல்படுத்துதல் நன்மை தேடித்தரமாட்டாது. ஒருவகையில் பார்க்கப்பபோனால் இராணுவம் நெருக்கடி ஒன்றைக் கொடுத்துள்ளது என்பது உண்மையே. ஆனால் அது புலிகளின் வலிந்து தாக்குதல் சக்தியை இல்லாது ஒழித்துவிட்டது எனக்கொள்ளமுடியாது.
-ஜெயராஜ் -
ஈழமுரசு (31.01.2009)
0 விமர்சனங்கள்:
Post a Comment